திருப்பூர்,
திருப்பூர் அருகே ஏற்கனவே இயங்கிக்கொண்டு இருந்த அரசுப் பள்ளியை புதிய கட்டடத்துக்கு மாற்றியதை எதிர்த்து பள்ளி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர் .

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அமைந்துள்ளது அறிவொளி நகர் பகுதி. 1993-ம் ஆண்டு திருப்பூர் நொய்யல் நதிக்கரையில் ஏற்பட்ட பெரும் வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்ட மக்கக்காக அரசு உருவாக்கித் தந்த பகுதி இது. இங்கு 1993 -ம் ஆண்டு முதல் அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. பின்னர் அப்பகுதி மக்கள் தொடர்ந்து முன்வைத்த கோரிக்கையை ஏற்று கடந்த 2012- ஆண்டு முதல் தொடக்கப்பள்ளி வளாகத்துக்கு அருகிலேயே அரசு உயர்நிலைப் பள்ளியும் அமைக்கப்பட்டது. அறிவொளி நகரில் கடந்த 8 ஆண்டுகளாக இயங்கி வந்த இப்பள்ளி கட்டடத்தை மூடிவிட்டு, தற்போது ஆறுமுத்தாம்பாளையம் என்ற பகுதியில் புதிதாக திறக்கப்பட்டுள்ள கட்டடத்துக்கு பள்ளியை இடம் மாற்றியுள்ளனர். இது அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.தினமும் அறிவொளி நகரில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஆறுமுத்தாம்பாளையத்துக்கு பிள்ளைகளை அனுப்புவது இயலாத காரியம். எனவே பள்ளியை மீண்டும் பழைய இடத்திலேயே இயங்க ஏற்பாடு செய்ய வேண்டும். அதுவரை எங்களின் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பப்போவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறார்கள் அறிவொளி நகர் மக்கள்.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய ஊர்மக்கள், ” அறிவொளி நகரில் சிறுபான்மையின மக்களும், தாழ்த்தப்பட்ட சமூகத்தினரும்தான் அதிகமாக வசிக்கிறோம். எல்லாருமே அன்றாட கூலியை நம்பி வாழ்க்கையை நடத்துறவங்க. பெரும்பாலும் வீட்ல அப்பா – அம்மா இரண்டு பேருமே வேலைக்கு போனாத்தான் நாலு காசு பார்க்க முடியும்ங்கற நிலைமை. இங்கே அறிவொளி நகர்ல குடியிருப்புகளுக்கு மத்தியிலதான் உயர்நிலைப் பள்ளி இயங்கிட்டு வந்தது. தினமும் நாங்க சீக்கிரமே வேலைக்குப் போயிட்டாலும், பிள்ளைங்க தானாகவே கிளம்பி எளிதாக பள்ளிக்கூடத்துக்கு போயிட்டு வந்துருவாங்க. ஆனால் இப்போ பள்ளிக்கூடத்தை கொண்டுபோய் பக்கத்து ஊர்ல வெச்சிட்டு, ஒட்டுமொத்த பிள்ளைகளையும் அங்க வந்து படிக்க சொல்றது எந்த வகையில நியாயம். தினமும் அறிவொளி நகர்ல இருந்து ஆறுமுத்தாம்பாளையத்துக்கு குழந்தைங்களை கொண்டுபோய் விட்டு, கூட்டிட்டு வர்றதுக்கே பெற்றோர் ஒருத்தர் கட்டாயம் வீட்ல இருந்தாகனும். இந்தக் காலத்துல வீட்ல ஒருத்தர் மட்டும் வேலைக்குபோய் சம்பாதிச்சா வாயிக்கும், வயித்துக்கும் பத்துமா என்றார் ஒரு மாணவனின் தந்தை.

இந்த பள்ளிக்கூடத்துக்கு புதுசா கட்டடம் கட்டத்தான் அரசாங்கம் 1 கோடியே 63 லட்சம் நிதி ஒதுக்குச்சு. ஆனால் எங்க ஊர்ல கட்டடத்தை கட்டாம பக்கத்து ஊர்லபோய் கட்டுனாங்க. அப்பவே ஊர்மக்கள் எல்லாரும் எதிர்ப்பு தெரிவிச்சோம். ஆனால் இந்த பள்ளியை எப்பவும் மூட மாட்டோம். பசங்க 10-வது வரைக்கும் இங்க படிச்சிட்டு, 11, 12 – ம் வகுப்புகளுக்கு மட்டும் ஆறுமுத்தாம்பாளையத்துக்கு வந்தா போதும்னு சொல்லி எங்களை சமாளிச்சாங்க. அதை நாங்களும் நம்பினோம். இப்போ லீவு முடிஞ்சு, ஜூன் 1-ம் தேதி மீண்டும் பள்ளிக்கூடம் திறக்கும்னு பார்த்தா, அதற்குள் ஒட்டுமொத்த பள்ளியையும் ஆறுமுத்தாம்பாளையத்துக்கு மாத்திட்டாங்க. ஏன்னு போய் கேட்டதுக்கு, நாங்க எதுவும் சொல்ல முடியாது. எல்லாம் அரசாங்கத்துகிட்ட போய் கேளுங்கன்னு பதில் வருது. அதான் எங்க பிள்ளைங்களை கூட்டிட்டுமாவட்ட ஆட்சியர் ஆபீசுக்கு போய் மனுகொடுத்தோம்.அதிகாரிகளைவிட்டு விசாரிக்கிறோம்னு ஆட்சியர் சொல்லிருக்கார்.எங்களுக்கு நியாயம் கிடைக்கணும். மறுபடியும் எங்க ஊருக்குள்ளேயே இந்த பள்ளிக்கூடம் வரணும் என்றார் ஒரு மாணவியின் தந்தை.

பள்ளியின் தலைமை ஆசிரியை ஞான சவுந்தரியிடம் விளக்கம் கேட்டோம். ” மத்திய அரசின் “அனைவருக்கும் இடைநிலைக் கல்வி” என்ற திட்டத்தின் கீழ் கட்டடம் கட்டப்பட்டிருக்கிறது. கட்டடம் கட்டுவதற்கான நிதியை மத்திய அரசு வழங்கிவிடும். அதற்கான நிலத்தை மட்டும் மாநில அரசு தர வேண்டும். ஆரம்பத்தில் அறிவொளி நகர் பகுதியில்தான் இடம் தேடினோம். ஒரு இடத்தில் நீர் நிலைகள் அருகில் இருந்ததாலும், மற்றொரு இடத்தில் மின்கம்பிகளால் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருந்ததாலும் அங்கு கட்டடம் கட்ட அரசு அனுமதிக்கவில்லை. அதனால்தான் ஊர் பஞ்சாயத்து தலைவர் பழனிச்சாமியின் முயற்சியால் ஆறுமுத்தாம்பாளையத்தில் இடம் கிடைத்தது. இப்போது அறிவொளி நகரில் இருந்து மாணவர்கள் இங்கு தினமும் வந்து செல்வதற்காக பேருந்து வசதிகளை ஏற்படுத்தித் தர இருக்கிறோம். பஸ் பாஸ்களும்கூட வழங்கிவிடுவோம் என்றார். மேலும்,கல்வித்துறை அதிகாரிகள் பெற்றோர்களிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். அதனால் மாணவர்கள் கல்வி பெறுவதில் எந்தவித சிக்கலும் இருக்கப்போவதில்லை என்றார்.

Leave a Reply

You must be logged in to post a comment.