திருப்பூர்,
தலித் பழங்குடி மக்கள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்து போகச் செய்யும் உச்ச நீதிமன்றத் தீரப்புக்கு எதிராக ஜூலை 2ஆம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டம் திருப்பூரில் நடைபெற்றது.

திங்களன்று திருப்பூர் தியாகி பழனிசாமி நிலையத்தில் ஆதிதமிழர் ஜனநாயக பேரவை நிறுவனத் தலைவர் அ.சு.பவுத்தன் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் ஆர்.குமார் வரவேற்றார். இக்கூட்டத்தின் நோக்கங்களை விளக்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் பேசினார். இக்கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செய்தி தொடர்பாளர் நாதன், தலித் விடுதலை கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் அர.விடுதலைச்செல்வன், ஆதித்தமிழர் பேரவை மாநகரச் செயலாளர் வெ.வேந்தன் மகேசு, திராவிடர் கழகம் பூ.குருவிஜயகாந்த், ச.துரைமுருகன்,திராவிடர் விடுதலை கழகம் ம.ச.இராமசாமி, தந்தை பெரியார் திராவிடர்கழகம்சன்.முத்துக் குமார்,தீண்டாமை ஒழிப்பு முன்னணி சி.கே.கனகராஜ், பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: எஸ்.சி/எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைப் பாதுகாக்க ஜூலை 2 அன்று ரயில் மறியல் போராட்டத்தை திருப்பூர், உடுமலை ஆகிய இரு மையங்களில் ஜனநாயக இயக்கங்களை இணைத்துக் கொண்டு சக்தியாக நடத்துவது. மறியல் விளக்க பிரச்சாரம் ஜூன் 27-ல் உடுமலை பகுதியிலும், 29-ல் தாராபுரம், காங்கயம், பொங்கலூர், பல்லடம் பகுதிகளிலும், 30-ல் அவிநாசி, திருப்பூர் மாநகரம், ஊத்துக்குளி ஆகிய பகுதியிலும் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. கோவையில் நடைபெறும் ஆயத்த மாநாட்டில் பெருந்திரளாக பங்கேற்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. முடிவில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத் துணைச் செயலாளர் ச.நந்தகோபால் நன்றி தெரிவித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.