====முனைவர் தி.ராஜ் பிரவின்===
கடந்த சில ஆண்டுகளாக மணிப்பூர் மாநில பெண்கள் தங்கள் கூட்டமைப்பின் வாயிலாக கிராமப்புறங்களில் தன்னிறைவு அடைந்து வருகின்றனர். குறிப்பாக அதிகளவு வறுமை காரணமாக இரண்டு நேரம் உணவு உண்ண வழி இல்லாதவர்களும், தங்களில் அடிப்படை தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாதவர்களும், போதிய அளவில் போக்குவரத்து வசதி இல்லாத சூழல் காரணமாக கடுமையான பொருளாதார இன்னல்களை சந்தித்து வரும் சூழலில், பெண்கள் கூட்டமைப்பின் செயல்பாடுகள் காரணமாக அவர்களது நிவாரண உதவிகள் கிடைத்தது போன்று கருதும் சூழல் நிலவுகிறது. முன்பு காடுகளை அழித்து விவசாயம் செய்து விட்டு இடம்பெயரும் தன்மை கொண்ட விவசாய முறைகளை பின்பற்றி வந்த சூழலில் தற்போதைய பெண்கள் கூட்டமைப்பின் முயற்சிகள் காரணமாக பலருக்கு புதிய கிராமப்புற வேலை வாய்ப்புகள், புதிய தொழில் உருவாக்கம் போன்றவை ஏற்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக மணிப்பூர் மாநிலத்தில் உள்ள மிகவும் கடைக்கோடி கிராமங்களில் கூட பெண்கள் கூட்டமைப்பு சார்பில் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டு திருமணம் ஆகாத பெண்கள் கூட இணைக்கப்பட்டனர்.

10 முதல் 15 பெண்கள் கொண்ட குழுக்களுக்கு தனியாக மற்றும் கூட்டாக ரூ.1000 முதல் ரூ.10,000 வரை கடன் வழங்கப்பட்டது. இதனை கொண்டு பெண்கள் கோழி மற்றும் பன்றி வளர்ப்பு, இஞ்சி, வாழை, மஞ்சள், மிளகாய் சாகுபடி பணியில் ஈடுபட்டனர். வடகிழக்கு சபையின் கீழ் இயங்கும் வடகிழக்கு வட்டார சமுதாய வள மேலாண்மை திட்டத்தின் கீழ் 362 கிராமங்களில் கடன்கள் மகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் பெண்களுக்கு பல பயிற்சி வகுப்புகள் மற்றும் பொருளாதார திறன் பயிற்சிகளும் தொடர்ந்து வழங்கப்பட்டது. பல கிராமங்களில் சுய உதவி மகளிர் கூட்டாக இணைந்து காடுகளில் இருந்து விறகுகளை சேகரித்து விற்பனை செய்வதன் வாயிலாக 1.6 லட்சம் வரை சேமிக்கும் அளவிற்கு தங்களின் வருவாய் உயர்ந்து உள்ளனர். வரும் ஆண்டுகளில் 2 லட்சம் வரை தங்களின் சேமிப்பை உயர்த்தும் திட்டம் உள்ளதாகவும் தெரிவித்தனர். குறிப்பாக இங்கு பெருவாரியாக சந்தைகள் இல்லாத சூழலில் பெண்கள் கூட்டமைப்பின் சுய உதவிக் குழுக்களே நுகர்வு பொருட்களை மொத்தமாக கொள்முதல் செய்து வீடுகள் தோறும் விற்பனை செய்து அதிகலாபம் ஈடுபடுகின்றனர். மேலும் முக்கிய கிராமப்புற பகுதிகளில் குப்பை கூடைகளை வைத்து தூய்மை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இவ்வளர்ச்சி பணிகள் மற்றும் வியாபார முயற்சிகள் காரணமாக பெண்கள் நிதி அளவு, சேமிப்பு, பதிவுகளை சேகரித்தல் போன்ற மேலாண்மை திறன்களை பெற்றுவிட்டதாகவும் தெரிவிக்கின்றனர். முன்பு பெண்களை கூட்டாக இணைப்பது கடினமாக இருந்ததாகவும், தற்போது பெண்கள் இணைந்து பல ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொள்வது பெண்கள் கூட்டமைப்பின் பலனாக கருதப்படுகிறது. பல பெண்கள் தனியாக சிறிய அளவிலான கடைகளை துவங்கியும், வெற்றிகரமாக நடத்தி வருவது வளர்ச்சியில் மிகவும் பின்தங்கி இருந்த வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் பல வளர்ச்சி குறியீடுகளில் முன்னேறவும், வேளாண் மற்றும் சார்ந்த துறைகளில் வளர்ச்சி, கிராமப்புறங்களில் புதிய வேலைவாய்ப்புகளை பெண்களிடையே உருவாக்கவும் துணை புரிந்துள்ளது. பல அடித்தட்டு மக்கள் வாழ்வில் பொருளாதார முன்னேற்றம் அடைய பெரிதும் உதவி புரிந்துள்ளது என்பது மறுக்க முடியாத பெண்களுக்கு அதிகாரமளித்தல் முயற்சிகளில் ஒரு முக்கிய மைல்கல் என்பதில் சந்தேகம் இல்லை.

Leave a Reply

You must be logged in to post a comment.