சேலம்,
பெட்ரோல் டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர வலியுறுத்தி சேலத்தில் சிஐடியு சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எண்ணெய் நிறுவனங்களே எரிபொருள் விலையை நிர்ணயித்துக் கொள்ளலாம் என்ற மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின்அறிவிப்பை தொடர்ந்து நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. நாடு முழுவதும் ஒரே வரி என அனைத்து பொருள்களுக்கும் ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவந்த மத்திய அரசுபெட்ரோல், டீசலை மட்டும் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரமறுத்து வருகிறது. ஆகவே, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும்.

மேலும், வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும். மோட்டார் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கம் மற்றும் சேலம் மாவட்ட சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் இணைந்து திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் சிஐடியு மாவட்டச் செயலாளர் டி.உதயகுமார், மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.கே.தியாகராஜன், ஆட்டோ சங்க மாவட்டப் பொருளாளர் பாஸ்கர், சாலை போக்குவரத்து மாவட்டப் பொருளாளர் வேலுமணி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.