நரேந்திர மோடி 2014 தேர்தல் பிரச்சாரத்தின்போது, 2 கோடி வேலைகள் உருவாக்கப்படும் என்று உறுதிமொழி அளித்தார். இது அக்கட்சிக்கும், மோடிக்கும் மக்கள் மத்தியில் பெரும் அளவிலான ஆதரவினைப் பெற்றுத்தந்தது. ஏனெனில் அதற்கு முந்தைய ஐமுகூ ஆட்சிக்காலத்தில் பல ஆண்டு காலமாக வேலையின்மை வளர்ச்சி (jogless growth) ஏற்பட்டிருந்ததன் காரணமாக, மக்கள் மிகவும் விரக்தி அடைந்திருந்தார்கள். எனவே அவர்கள், மோடி இவ்வாறு வாக்குறுதி அளித்த்தன் காரணமாக தங்களுக்கு ‘நல்ல காலம்’ பிறக்கும் என்று நம்பினார்கள்.

மோடி ஆட்சிக்கு வந்து நான்காண்டுகள் கடந்துவிட்டன. இந்த உறுதிமொழியை நிறைவேற்றுவதில் அது பரிதாபகரமான முறையில் படுதோல்வி அடைந்துள்ளது. உண்மையில் மோடி சர்க்காரின் கொள்கைகள், அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்குப் பதிலாக வேலை இழப்புகளைத்தான் ஏற்படுத்தி இருக்கின்றன. இவ்வாறு படுதோல்வியைச் சந்தித்துத்துள்ள மோடி சர்க்கார், அதனை மூடி மறைப்பதற்காக, இப்போது ‘பக்கோடா விற்பதும்’ ஒரு வேலைதான் என்று மோடி கூறிக் கொண்டிருக்கிறார்.

மோடி அரசாங்கம் வேலைகளை உருவாக்குவதில் தோல்வி அடைந்துள்ளது என்பதற்கு என்ன ஆதாரம்?  இங்கே சிலவற்றைப் பட்டியலிடுகிறோம்:

  • இந்திய ரிசர்வ் வங்கியின் ஆய்வறிக்கையின்படி, மோடி ஆட்சியின் முதல் ஈராண்டுகளில், பத்து லட்சத்திற்கும்  மேற்பட்ட அளவிற்கு வேலை இழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன.  நாட்டில் உழைக்கும் மக்களின் எண்ணிக்கை 2014-15ஆம் ஆண்டில் 7.7 லட்சமாகக் குறைந்துவிட்டது. பின்னர் அது 2015-15இல் மேலும் 3.8லட்சமாகக் குறைந்துவிட்டது. (ஆதாரம்: RBI’s KLEMS Database).
  • தொழிலாளர் நிலையத்தால் (Labour Bureau), எட்டு கேந்திரமான தொழிற்சாலைகளில் மேற்கொள்ளப் பட்ட ஒரு காலாண்டு ஆய்வறிக்கையின்படி, 2016 ஏப்ரல்16இலிருந்து 2017 அக்டோபர் முடிய பதினெட்டு மாதங்களில் ஒட்டுமொத்தத்தில் 5.56 லட்சம் வேலைகள் புதிதாக சேர்க்கப்பட்டிருக்கின்றன. அதாவது தொழிலாளர் படையில் வெறும் 1.8 சதவீதம் அளவிற்கு மட்டுமே ஆண்டு வளர்ச்சி விகிதம் இருந்திருக்கிறது. அல்லது ஓராண்டுக்கு 4 லட்சம் வேலைகள் தான் கூடியிருக்கிறது.மற்ற துறைகளில் நடைபெற்றுள்ள வேலையிழப்புகளைக் கணக்கில் கொண்டோமானால் இதுவும் சரிவுதான்.   
  • இந்தியப் பொருளாதாரத்தைக் கண்காணிக்கும் மையத்தின் (CMIE-Centre for monitoring Indian Economy) சமீபத்திய மதிப்பீடுகளின்படி. இந்தியாவின் வேலை விகிதம் அல்லது தொழிலாளர் சேனையின் பங்கேற்பு  விகிதம் (15 வயதுக்கும் மேற்பட்டவர்கள் வேலையில் உள்ள சதவீதம்) 2018 மார்ச்சில்  வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வெறும் 40 சதவீதமாக வீழ்ச்சி அடைந்திருக்கிறது.
  • இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு,இது சராசரியாக சுமார் 43 சதவீதமாக இருந்தது. இதன் பொருள், முன்பு வேலை செய்துகொண்டிருந்தவர்களில் சுமார் 1.43 கோடி பேர்  இப்போது வேலையிலிருந்து நீக்கப்பட்டு விட்டார்கள். அவர்கள் புதிய வேலைகள் தேடி அலைந்து கொண்டிருக்கலாம் அல்லது விரக்தியடைந்து வேதனை/யுடனும், வருத்தத்துடனும் நேரத்தைப் போக்கிக் கொண்டிருக்கலாம்.
  • சிஎம்ஐஇ()CMIE-இன் மதிப்பீட்டின்படி,வேலையின்மை 5 சதவீதத்தை எட்டி இருக்கிறது. அதாவது, சுமார் 2 கோடி பேர் வேலையின்றி இருக்கிறார்க்ள். மேலும் கூடுதலாக, அரசின் தொழிலாளர் நிலையத்தின் மதிப்பீட்டின்படி தொழிலாளர் சேனையில் 35 சதவீதத்தினருக்கு ஆண்டு முழுவதும் வேலை கிடைக்கவில்லை அல்லது குறைந்த ஊதியத்தில் கேசுவல் தொழிலாளர்களாக வேலை செய்திட நிர்ப்பந்திக்கப் படுகிறார்கள். இவ்வாறு இருப்பவர்கள் சுமார் 13 கோடி பேர்களாகும்.     
  • பெண்களின் வேலைவாய்ப்பும் பலவீனமாகிக் கொண்டிருப்பது தொடர்கிறது. 2016தொழிலாளர் நிலையத்தின் அறிக்கையின்படி 15 வயதுக்கு மேற்பட்ட பெண்களில்22 சதவீதத்தினர்தான் வேலையில் இருந்து வருகிறார்கள். இது உலகில் மிக மிகக் குறைவான எண்ணிக்கையாகும். பெண்களுக்கான வேலைவாய்ப்பு குறித்தோ,அவர்களுக்கு வேலைவாய்ப்பினை  உருவாக்க வேண்டும் என்பது குறித்தோ எவ்விதமான திட்டம் குறித்தும் சிந்திப்பதற்குக்கூட மோடி அரசாங்கம் தவறிவிட்டது.உண்மையில், 2014இல் அவர்கள் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில்கூட ‘பெண்கள்-நாட்டைக் கட்டமைப்பவர்” என்ற தலைப்பின் கீழான பக்கத்தில் இது குறித்து எதுவுமே அவர்கள் குறிப்பிடவில்லை.

ஒவ்வோராண்டும், (15 வயதுக்கு மேற்பட்ட) தொழிலாளர் சேனையில் சுமார் 2.46 கோடி பேர் சேர்ந்துகொண்டிருக்கிறார்கள். இவர்களில் சுமார் 44 சதவீத்த்தினர், (சுமார்1.15 கோடி பேர்) உண்மையில் வேலை தேடும் பட்டாளத்தைச் சேர்ந்தவர்களாவார்கள். மீதமுள்ளவர்கள் ஒன்று மாணவர்களாக இருப்பார்கள் அல்லது வீட்டில் அடைந்துகிடக்கும் பெண்களாக இருப்பார்கள். இவர்கள் அனைவருக்கும் வேலைகளை உருவாக்குவதற்குப் பதிலாக, இவர்களை மோடி அரசாங்கம், வேலை தேடச் சொல்லி இங்குமங்கும் எறிந்துகொண்டிருக்கிறது.

இவற்றின் காரணமாகத்தான் ரயில்வேயில் வேலையிடங்களுக்கான விளம்பரம் செய்தியேடுகளில் வெளியானபோது 1 லட்சம் பணியிடங்களுக்கு சுமார்  2 கோடி பேர் விண்ணப்பித்திருந்தார்கள். 2015இல், உத்தரப்பிரதேசத்தில் 363 பியூன் இடங்களுக்கு 23 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தார்கள். ஹரியானாவில் ஒரு நீதிமன்றத்தில் ஒன்பது பணியிடங்களுக்காக, 18 ஆயிரம் பேர் விண்ணப் பித்திருந்தார்கள். ராஜஸ்தானில் மாநிலத் தலைமைச் செயலகத்தில் 18 பணியிடங்களுக்காக 12 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தார்கள்.

நாட்டில் உள்ள பல்வேறு தொழில்பிரிவுகள் மற்றும் சேவைத் துறைகளைச் சார்ந்த தொழிற்சாலைகள் தங்களுக்கு நாட்டில் பொருத்தமான கிராக்கி கிடைக்காததாலோ அல்லது கிராக்கி குறைந்துவிட்ட காரணத்தாலோ, தங்கள் தொழில்பிரிவுகளில் வேலை செய்துவந்த தொழிலாளர்களை வேலையிலிருந்து தூக்கி எறிந்து கொண்டிருக்கின்றன.  டெலிகாம், தகவல் தொழில்நுட்பம், ஆயத்த ஆடைகள், தோல், நகைக் கற்கள்(gems), நகைகள்(jewellery) முதலான தொழில்துறைகள் இவ்வாறு பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.

தொழில்துறை வளர்ச்சி வீழ்ந்துகொண்டிருப்பதை சமீபத்தில் வெளியான அரசாங்கத்தின் தொழில்துறை உற்பத்தியின் அட்டவணை (Index of Industrial Production (IIP))காட்டுகிறது. எத்தனை தொழில்துறைகள் முதலீடுகள் மற்றும் வேலைகளை உருவாக்குகின்றன என்பதைக் காட்டும் தொழில்துறையில் ரொக்க வளர்ச்சி (Credit growth to industry) என்பது கடந்த 54 ஆண்டுகளில் மிகவும் குறைவாக மாறி இருக்கிறது.இவை அனைத்துமே நாட்டில் வேலைகள் இல்லை என்பதையும், வரவிருக்கும் காலங்களில் புதிய வேலைகளுக்கான வாய்ப்புகள் கிடையாது என்பதையும் மிகவும் தெளிவாக உறுதிப்படுத்தி இருக்கின்றன.

அதே சமயத்தில், விவசாயத்துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியும் அதன் காரணமாக வருமான வீழ்ச்சியும், விவசாயிகளின் கடன்கள் அதிகரித்துக் கொண்டிருப்பதும் தொடர்கின்றன. இதன் விளைவாக இத்துறையும் அதிக அளவில் தொழிலாளர்களை கிரகித்துக் கொள்வதற்கான தகுதியை இழந்து நிற்கிறது. உண்மையில், விவசாயிகள் விவசாயத்தையே கைகழுவிவிட்டு வெளியேறி, வேலைதேடும் பட்டாளத்துடன் தங்களை இணைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இவை அனைத்தும் காட்டுவது என்ன? என்னவெனில் மோடி தேர்தல் பிரச்சாரத்தின் போது 2 கோடி வேலைகள் உருவாக்குவோம் என்று கூறிய உறுதிமொழி வெறும் தேர்தல் ஸ்டண்ட் என்பதையே காட்டுகின்றன. வேலைகளை உருவாக்குவதற்கான உண்மையான ஆர்வம் எதுவும் அல்லது அதற்கான தொலைநோக்குப் பார்வை எதுவும் மோடி அரசாங்கத்திடம் கிடையாது என்பதையே இவை அனைத்தும் காட்டுகின்றன.

உண்மை நிலை இவ்வாறிருக்க, இதனை மூடிமறைப்பதற்காக, இலட்சக்கணக்கான வேலைகளை உருவாக்கி இருப்பதாகக் காட்டும்விதத்தில், மோசடியான தரவுளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன.  ஆனால் பொய்த் தரவுகளால் அவதிக்குள்ளாகியுள்ள கோடிக்கணக்கான தொழிலாளர்கள், விவசாயிகளின் வயிற்றை நிரப்பிட முடியாது.

(மோடி அரசாங்கத்தின் நான்கு ஆண்டுகள் தொடர்பாக சிபிஎம் மத்தியக்குழு வெளியிட்டுள்ள துண்டுப்பிரசுரங்களில் வெளியாகியுள்ள ஒரு கட்டுரையிலிருந்து)

தமிழில்: ச.வீரமணி   

Leave a Reply

You must be logged in to post a comment.