===ஜெ.பொன்மாறன்===
ஐக்கிய நாடுகள் சபை ஆண்டுதோறும் ஜூன்-5 ஆம் தேதி பூமியையும் அதன் சுற்றுவட்ட பகுதிகளையும் மற்றும் இயற்கையை பாதுகாத்திடும் வகையில் 1972 ஆம் ஆண்டு முதல் உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.சுற்றுச்சூழலைப் பேணிப்பாதுகாக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து செயற்படத் தவறியதன் விளைவுகளை மனிதகுலம் இப்போது தாராளமாக அனுபவிக்கத் தொடங்கிவிட்டது.
மரங்களுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான உறவு மிகவும் முக்கியமானதாகும். மனிதன் உயிர் வாழ்வதற்கு மரங்கள் அவசியம் என்பதை நாம் உணருவதில்லை. இதனாலேயே சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் மரங்கள் வெட்டப்படுவதற்க்கு எதிராகப் பெரும் இயக்கங்களை முன்னெடுத்து வந்திருக்கிறார்கள். மனிதர்களினால் செய்யப்படக்கூடிய மிகவும் மூர்க்கத்தனமான செயல்களில் ஒன்று மரங்களையும் காடுகளையும் அழித்து அதன் மூலம் பூமியை ஒரு பாலைவனம் ஆக்குவது ஆகும்.

இதனால் கழிவு உற்பத்தி அதிகரித்து காற்று மாசடைதல், பல்லுயிர் பெருக்கம் குறைவது, நுண்ணுயிரினங்களின் அழிவு முதலியவ சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகள் அதிகரித்துள்ளது.

இதேபோல சுற்றுச் சூழல் சீர்கேட்டுக்கு முக்கியக் காரணங்களில் ஒன்றாக பிளாஸ்டிக் திகழ்கிறது. குப்பையில் வீசப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் மக்காமல் பல நூற்றாண்டுகளுக்கு அப்படியே இருக்கும். பிளாஸ்டிக் குப்பைகளை எரித்து விடலாம் என்றாலும் அதிலிருந்து பரவும் நச்சு வாயுக்கள் மனித இனத்திற்கு பேராபத்தை விளைவிக்க கூடியவை.பிளாஸ்டிக்கை பயன்படுத்தாமல் இருக்க முடியுமா என்பது நியாயமான கேள்வி. அனைத்து வகை பிளாஸ்டிக் பொருட்களையும் பயன்படுத் தக்கூடாது என்பது நடை முறைக்கு உகந்தது அல்ல.ஆனால் நாம் வைராக்கியம் கொண்டால் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க முடியும். பூமி வெப்பமடைந்து வருவதும் ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்துள்ளது என்ற தகவலும் சுற்றுச்சூழலுக்கு பெரிய பாதிப்பாகும்.

பூமி சூரியனிலிருந்து மூன்றாவதாக உள்ள கோள். மனிதர்கள் உள்பட பல்லாயிரக் கணக்கான உயிரினங்கள் வாழும் இடமான இந்த பூமி, அண்டத்தில் உயிர்கள் இருப்பதாக அறியப்படும் ஒரே இடமாக கருதப்படுகிறது. இத்தகையை சிறப்பு வாய்ந்த பூமியைக் காக்க, உஷ்ணமடைதல், காலநிலை மாற்றம், ஓசோன் படலம் பாதிப்பு, கடல், கடற்கரை பிரதேசங்கள், காடு ஆகியவை அழிப்பு, உயிரியல் மாறுபாடு, உயிரியல் தொழில்நுட்பம், சுகாதாரம் மற்றும் ரசாயன பாதுகாப்பு போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டியது இன்றைய அவசியத் தேவையாகும்.

Leave A Reply

%d bloggers like this: