கும்பகோணம்:
தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்ப, அங்கு குவிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான காவல் துறையினரை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தினார்.

கும்பகோணத்தில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டினை தொடர்ந்து அங்கு இன்னும் முழுமையான இயல்பு சுமூகநிலை ஏற்படவில்லை. அங்கு ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இன்னும் பொதுமக்களை கைது செய்து வருகின்றனர். அங்கு சுமூக நிலை திரும்பிட, குவிக்கப்பட்டுள்ள போலீசாரை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்.
மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆணையை அடிப்படையாக கொண்டு தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடியுள்ளது. இந்த நடவடிக்கை போதாது. கடந்த 25 ஆண்டு காலமாக ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்பட்ட பாதிப்புகள், நிலவளம், நீர்வளம் எந்தளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது என்ற அறிக்கையினை அடிப்படையாகக் கொண்டு அந்த ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும்.தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக உயர்நீதிமன்ற நீதிபதியின் நேரடிக் கண்காணிப்பில், சிபிஐ விசாரணை நடத்திட வேண்டும். மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை சிகிச்சை முடிந்து வீடுகளுக்கு அனுப்ப வேண்டும். அவர்களை கைது செய்யும் நடவடிக்கையை தமிழக காவல்துறை மேற்கொள்வதை நிறுத்த வேண்டும்.

குறுவை: தண்ணீர் பெறுக!
காவிரி டெல்டாவில் கடந்த ஆறாவது ஆண்டாக குறுவை சாகுபடிக்கு உரிய நேரத்தில் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படாமல் உள்ளது. எனவே தமிழக அரசு குறுவை சாகுபடிக்கு தேவையான தண்ணீரை கர்நாடக அரசிடமிருந்து பெற உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான ஆட்சி நான்கரை ஆண்டுகளில் தொழில், விவசாயம், சேவைத்துறைகள் உள்ளிட்ட அனைத்திலும் தோல்வியடைந்துள்ளது.
மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத கொள்கைகள், நாட்டில் நிலவும் ஊழல், விலைவாசி உயர்வு ஆகியவற்றை கண்டித்து கன்னியாகுமரி, திருவள்ளூர், விழுப்புரம், நீலகிரி உள்ளிட்ட ஆறு இடங்களிலிருந்து மார்க்சிஸ்ட் கட்சியின் பிரச்சார குழு ஜூன் 8 ஆம் தேதி பிரச்சார பயணம் மேற்கொண்டு ஜூன் 14 ஆம் தேதி திருச்சிக்கு வருகின்றன. அங்கு மாபெரும் பொதுக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் சிபிஎம் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி பங்கேற்க உள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பேட்டியின் போது மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மனோகரன், சின்னை.பாண்டியன், சி.ஜெயபால், திருவிடைமருதூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் சா.ஜீவபாரதி ஆகியோர் உடனிருந்தனர்.

3 ஆயிரம் அரசுப் பள்ளிகளை மூடத் திட்டமா?
தமிழகத்தில் தனியார் பள்ளி, கல்லூரிகளில் அரசு நிர்ணயித்த கட்டணங்களை வசூலிக்க  வேண்டும் என்ற உத்தரவை அமல்படுத்த உரிய கண்காணிப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். மாநில அரசின் தவறான கொள்கையால் உயர்கல்வித்துறை 95 சதவீதம் தனியாரிடம் சென்றுவிட்டது. மத்திய திட்டக்குழுவின் அறிக்கையின்படி 3 ஆயிரம் அரசுப் பள்ளிகளை தமிழகத்தில் மூட மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனை தமிழக அரசு மூடிமறைக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறது. மாணவர்களை ஈர்க்கும் விதமாக அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்த மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Leave A Reply

%d bloggers like this: