திருப்பூர்,
தமிழ் மொழியில் இருந்து மலையாளத்துக்கும், மலையாளத்தில் இருந்து தமிழுக்கும் ஏராளமான நூல்கள் மொழி பெயர்ப்புச் செய்வது ஆரோக்கியமானது என்று திருப்பூர் இலக்கிய விருது பெற்ற துபாயில் வசிக்கும் மலையாள எழுத்தாளர் வெள்ளியோடன் கூறினார்.

மலையாள எழுத்தாளர் வெள்ளியோடன் ஞாயிறன்று திருப்பூரில் இவ்விருதைப் பெற்றுக் கொண்டு பேசுகையில் கூறியதாவது: ”தமிழ் மொழி தொன்மையும் வனப்பும் மிக்கது. எங்கள் மலையாளம் சம்ஸ்கிருதக் கலப்பில் இருப்பது. தமிழின் தூய்மையும், செம்மொழித்தன்மையும் உலகளவில் போற்றப்படுவதாகும். எங்களின் ஆதிகவிகளாக தமிழ்க் கவிஞர்களை நாங்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறோம்.  இன்றைய உலகமயமாக்கலில், பல தொன்மையான மொழிகளின் அழிவில் நிலையில் உலகளவில் பல நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் தமிழ் இலக்கியத்தை காக்கும் நெருக்கடியில் உள்ளார்கள். அதை உணர்ந்தும் உள்ளனர். என் கதைகள் தமிழில் வருவதும், நான் தமிழ்நாட்டில் இலக்கிய கூட்டங்களில் கலந்து கொள்வதும் தாய் வீட்டிற்கு வருவதைப் போன்ற அனுபவத்தை எப்போதும் அளிக்கிறது. தமிழிலிருந்து மலையாளத்திற்கும், மலையாளத்திலிருந்து தமிழுக்கும் ஏராளமான நவீன இலக்கியப் படைப்புகள் மொழிபெயர்க்கப்படுவது ஆரோக்கியமாக உள்ளது.” என்றார்.

முன்னதாக திருப்பூர் இலக்கிய விருதுகள் 2018 வழங்கும் விழா ஊத்துக்குளி சாலை பி.கே.ஆர். இல்லத்தில் எம்.ரவி தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் மொழிப்போர் தியாகி பெரியசாமி ஜீவா நூலகத்திற்கு 350 நூல்களை வழங்கினார்.விருது பெற்ற படைப்பாளிகளை அறிமுகம் செய்து சுப்ரபாரதிமணியன், பி.ஆர்.நடராஜன், கா.ஜோதி, துருவன் பாலா ஆகியோர் பேசினர்.இவ்விழாவில் சுப்ரபாரதிமணியனின் கோமணம் நாவலின் மலையாள மொழிப்பதிப்பை திரை இயக்குநர் ராஜா சந்திரசேகர் வெளியிட, மலையாள எழுத்தாளர் வெள்ளியோடன் பெற்றார். மு.சந்திரகுமாரின் வெப்பமற்ற வெள்ளொளியில் நாவலை சாகித்ய அகாடமி நிர்வாகக்குழு உறுப்பினர் புதுவை சுந்தரமுருகன் வெளியிட, கோவை மீனாட்சிசுந்தரம் பெற்றார். து.சோ.பிரபாகரின் ”மனக்குளம்“ நாவலை லலிதா சிவகாமி பெற்றுக் கொண்டார்.

மார்க்ஸ் ஏங்கெல்ஸ் 200 தொகுப்பு தேர்வு நூல்கள் குறித்து வி.சிவராமன் அறிமுகம் செய்தார். தாமரை சிறப்பு மலர் பற்றி பி.ஆர்.நடராசன் அறிமுகம் செய்தார்.இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.