கோவை,
டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரக்கோரி ஜூலை 20-ம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக கோவை மாவட்ட லாரி உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக கோவை லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கே.எஸ்.கலியபெருமாள், செயலர் முருகேசன், பொருளாளர் செல்வராஜ் ஆகியோர் கூறுகையில், தினமும் உயரும் டீசல் விலை, இன்சூரன்ஸ் கட்டணம், சுங்கவரிக் கட்டணம், உதிரி பாகங்களின் விலை உயர்வு, போதுமான லோடு மற்றும் ஒட்டுநர்கள் கிடைக்காதது உள்ளிட்ட காரணங்களால் லாரி தொழில் பலமுறை நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. மேலும், அரசின் நடவடிக்கைகளாலும் லாரி தொழில் மட்டுமின்றி, அதைச் சார்ந்த 45-க்கும் மேற்பட்ட துணை தொழில்களும் நலிவடைந்து வருகின்றன.

கடந்த மாதம் புதுச்சேரியில் தென் மாநில மோட்டார் டிரான்ஸ்போர்ட் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதேபோல், தில்லியில் அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் அமைப்பின் நிர்வாகிகள் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இந்த கூட்டங்களில், லாரி தொழில் சார்ந்த பிரச்சனைகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இதில் டீசல், பெட்ரோல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.ஆகவே, லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 20 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் லாரிகள் வேலைநிறுத்தம் தொடங்க உள்ளது. இதையொட்டி தமிழகத்தில் உள்ள 4.5 லட்சம் லாரிகள் உட்பட நாட்டில் சுமார் 65 லட்சம் லாரிகள் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்கின்றன. இதன்படி கோவை மாவட்டத்தில் சுமார் 7 ஆயிரம் லாரிகள் இயங்காது. இந்த வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு வியாபாரிகள், பொதுமக்கள், தொழில் துறையினர் ஆதரவளிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.