ஈரோடு,
பேரூராட்சி செயல் அலுவலர் மீதான பாலியல் புகார் தொடர்பா சாட்சியம் அளித்த துப்புரவு பணியாளர்கள் பணிநீக்கம்செய்யப்பட்டதை கண்டித்து அத்தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம், பவானி தாலுகாவிற்குட்பட்ட ஆப்பக்கூடல் பேரூராட்சியில் கடந்த ஆண்டு செயல் அலுவலராக பணியாற்றி வந்தவர் பிரபாகரன். இவர் தற்போது கூகலூர் பேரூராட்சி செயல் அலுவலராக பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் இவர் மீது இளம் பெண் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக ஆட்சியர் அலுவலகத்தில் புகார் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையின்போது ஆப்பக்கூடல் பேரூராட்சியில் தற்காலிக துப்புரவு பணியாளர்களாக பணியாற்றி வந்த செல்வன், ஜோதிமணி, ஈஸ்வரன், சுப்பிரமணி ஆகிய நான்கு பேரும் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணிற்கு ஆதரவாக சாட்சியம் அளித்ததாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் தனக்கு எதிராக செயல்பட்ட காரணத்தினால் தற்காலிக துப்புரவு பணியாளர்கள் 4 பேரையும் பணி நீக்கம் செய்து செயல் அலுவலர் பிரபாகன் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அத்தொழிலாளர்கள் திங்களன்று மீண்டும் தங்களுக்கு பணி வழங்கக்கோரி ஈரோடு ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மனு அளிக்க வந்திருந்தனர். அப்போது திடீரென்று மாவட்டஆட்சியர் பிரபாகரை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பணிநீக்கம் செய்யப்பட்ட 4 தொழிலாளர்களுக்கும் மீண்டும் பணி வழங்கக்கோரி அதிகாரிகளுக்கு ஆட்சியர் பிரபாகர் உத்தரவிட்டார். இதையடுத்து அத்தொழிலாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.