திருப்பூர்,
திருப்பூரில் தனியார் பள்ளியில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக கூறி பெற்றோர் திங்களன்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூர் பிச்சம்பாளையம் பகுதியில் வசிக்கும் செல்வம். இவரது மகள் இலக்கியா. இவர் அங்கேரிபாளையம் சாலையில் உள்ள தனியார் மேல்நிலை பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 2017 – 18 ம் கல்வி ஆண்டிற்கான பள்ளிக்கட்டணமாக அரசு தரப்பில் ரூ 17,125 அறிவிக்கப்பட்டிருந்தது.ஆனால் பள்ளி நிர்வாகம் ரூ.28,800 செலுத்துமாறு கூறுகிறது. இதையடுத்து பள்ளி கட்டணம் ரூ. 17,125 மட்டுமே பெற்றுக்கொண்டு அனைத்து செலவிற்கான கட்டணத்தையும் பெற்றுவிட்டதாக பள்ளியில் தரப்பின் கையெழுத்துயிட்டனர். இந்நிலையில், ஜீன் 1 ஆம் தேதி மாணவி இலக்கியாவை பள்ளிக்குள் அனுமதிக்காமல் பழைய பாக்கி தொகையை செலுத்தினால் தான் உள்ளே அனுமதிக்கப்படுவாய் என பள்ளி நிர்வாகிகள் கூறினர். மேலும், உன் தந்தை அழைத்துவா என கூறி திருப்பி அனுப்பினர்.

இதனால், இந்த கல்வி ஆண்டிற்கான கட்டணம் அரசு அறிவித்த தொகையை விட ரூ. 13,800 அதிகமாக கேட்கின்றார்கள். இந்நிலையில், எனது மகள் இலக்கியாவின் படிப்பும் எதிர்காலமும் பாதிக்கப்படுவது மட்டும் அல்லாமல் மனதளவில் கடுமையாக பாதிப்படைந்துள்ளேன். எனவே, மாவட்ட ஆட்சியர் தலையீடு செய்து உரிய நடடிக்கை எடுக்க வேண்டுமாய் மனுவில் தெரிவித்துள்ளார்.

மகன் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை;
திருப்பூர் செல்லாண்டியம்மன் துறை பகுதியை சேர்ந்த சாந்தி தனது உறவினர்களுடன் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கணவர் மறைவிற்கு பின் மகன் மற்றும் மகள்களுடன் வசித்து வருகிறேன். இந்நிலையில், எனது மகன் பிரகாஷ் கடந்த சில மாதங்களுக்கு முன் அதே பகுதியை சேர்ந்த வேறு மதத்தை சேர்ந்த பெண்ணை காதலித்தார். இது, அப்பெண்ணின் வீட்டிற்கு தெரிந்து, அப் பெண்ணின் உறவினர்கள் பிரகாஷை அடித்து துன்புறுத்தினர்.  இதனால், மனமுடைந்த எனது மகன் பிரகாஷ் கடந்த ஏப்ரல் மாதம் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டான். இதுகுறித்து, புகார் அளித்தும் காவல் துறையினர் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, தற்கொலைக்கு காரணமானவர்களை உடனே கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட எங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும்.

மேலும், ரூ. 20 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் மாநகர காவல் துறைக்கு பரிந்துரை செய்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார். மனு அளிப்பதற்கு முன்பாக கையில் பிளக்சுடன் நுழைவு வாயில் முன்பு முழக்கம் எழுப்பியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

சாலையை சீரமைக்க மனு:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஊராட்சி ஒன்றிய பகுதிக்குட்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில்: எங்கள் பகுதியில் கோவை- திருச்சி தேசிய நெடுஞ் சாலை புதிதாக போடப்பட்டுள்ளது. இந்த சாலை பல்லடம்-  காரணம்பேட்டை வரை உள்ள பகுதியில் மண்ணை சரியான முறையில், சாலைக்கு சமமாக அமைத்து ரோலர் ஓட்டப்படவில்லை. இந்நிலையில், வேகத்துடன் எதிரே வரும் வாகனங்களில் இருந்து தப்பிக்க சாலையில் இருந்து இறங்கி ஏற முடியாமல் இருசக்கர வாகனங்கள் தடுமாறி விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்படுகின்றது. மேலும், கே.என்.புரம், பெரும்பாளி உட்பட பேருந்து நிறுத்தங்களில் தற்போது சாலை போடப்படவில்லை.

எனவே, பேருந்து நிறுத்தங்களில் உடனடியாக சாலை அமைக்க வேண்டும். உயிரிழப்புகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர்.

மண்ணெண்னையுடன் வந்தவரிடம் விசாரணை:
திருப்பூர் வீரபாண்டி பகுதியில் வசிப்பவர் சரவணன். இவர், தன்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார். ஆனால் இது வரை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி மண்ணெண்ணையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். இதைப்பார்த்து, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் அவரிடம் இருந்து மண்ணெண்ணை கேனை பறிமுதல் செய்தனர்.பின்னர் தெற்கு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: