திருப்பூர்,
திருப்பூர் அருகே சிறுமியை கடத்த முயன்றதாக இளைஞர் ஒருவரை மின்கம்பத்தில் கட்டி வைத்து பொதுமக்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.திருப்பூர் மாவட்டம் சின்னாண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் செந்தில்குமார் – உமா தம்பதியர். பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இத்தம்பதிக்கு 10 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் திங்களன்று காலை உமா தன்னுடைய மகளை அழைத்துக்கொண்டு காலைக்கடன் கழிப்பதற்காக அப்பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்றிருக்கிறார். அப்போது உமாவின் குழந்தை மட்டும் அங்கு தனியாக நின்றுகொண்டு இருப்பதை கவனித்த இளைஞர் ஒருவர், அந்த சிறுமியை கையில் தூக்கிக்கொண்டு அக்கம்பக்கத்தில் நோட்டமிட்டிருக்கிறார்.

இதனைக்கண்ட உமா அதிர்ச்சியில் சத்தம்போட, அந்த இளைஞரோ சிறுமியை கீழே போட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோட முயற்சித்திருக்கிறார். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் இளைஞரை மடக்கிப் பிடித்து இழுத்துக்கொண்டு வந்து அங்கிருந்த மின்கம்பத்தில் கட்டி வைத்தனர். பின்னர் பொதுமக்கள் சுற்றி நின்று சுமார் 2 மணி நேரம் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர்,  இதன்பின்னர் அவரை விசாரித்ததில். அந்த இளைஞரின் பெயர் சிவா என்றும், திருப்பூர் கே.வி.ஆர் நகர் பகுதியில் வசித்து வருவதாகவும் தெரிவித்திருக்கிறார். பின்னர் ஒருவழியாக 2 மணி நேரம் கழித்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினரிடம் இளைஞரை பொதுமக்கள் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக திருப்பூர் மத்திய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.