நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம், வேளாங்கண்ணி- செருதூர் இடையே ஓடுகிற வெள்ளையாற்றின் மீது ரூ.15 கோடி மதிப்பீட்டில் 6 ஆண்டுகளாகக் கட்டப்பட்ட மிகப்பெரிய பாலத்தை, திங்கட்கிழமை அன்று, காணொலிக் காட்சி மூலம் சென்னையிலிருந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார். இந்தத் திறப்பு விழாவில் மாவட்ட ஆட்சியர் சீ.சுரேஷ்குமார் மற்றும் செருதூர் மீனவ கிராம மக்கள் கலந்துகொண்டு தம் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.

சி.பி.எம். போராட்டங்களால் கிடைத்த கொடை:
இந்தப் பாலத்திற்கு என்று ஒரு நீண்ட வரலாறு உள்ளது. வெள்ளையாற்றின் வடக்குக் கரையில் உள்ளது புகழ் பெற்ற வேளாங்கண்ணி. மறு கரையில் உள்ளது செருதூர் என்னும் மீனவ கிராமம். செருதூர் மீனவ மக்கள் மீன் விற்கச் செல்ல, வணிகம் செய்திட, வேளாங்கண்ணிக் கோயிலுக்குச் செல்ல, மாணவர்கள் பள்ளிகளுக்குப் படிக்கச் செல்ல, 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றிக் கொண்டு, கிழற்குக் கடற்கரைச் சாலை வழியே சென்றால்தான் வேளாங்கண்ணியை அடையமுடியும்.

படகுகளில் சென்று பலியான உயிர்கள்:
வேளாங்கண்ணிக்கும் செருதூருக்கும் இடையே உள்ளது 200 மீட்டர் தூரம் தான். இதற்கிடையே, சில வேளைகளில் செருதூர் மக்களும் மாணவர்களும் படகில் பயணம் செய்து வேளாங்கண்ணிக்குச் செல்வார்கள். இப்படிப் பயணம் சென்றதில் மழைக் காலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுப் பல காலங்களில் செருதூரைச் சேர்ந்த பல மாணவர்களும் மக்களும் படகுகள் கவிழ்ந்து ஆற்றில் மூழ்கி இறந்து போயுள்ளனர்.

எனவே செருதூர் மீனவ மக்கள், பல்லாண்டுகளாக வெள்ளையாற்றில் ஒரு பாலம் கட்டித்தர வேண்டும் என்று கோரி வந்தனர். ஆனால், பாலம் கட்டப்படுவதாக இல்லை. பாலம் கட்டக் கூடாது என்று, வேளாங்கண்ணிப் பேராலய நிர்வாகம் சென்னை உயர்நீதி மன்றத்தில் தடை வாங்கி இருந்தது. ஏனெனில், செருதூர் பாலம் அமைந்து விட்டால், வேளாங்கண்ணியைப் போல், செருதூரும் கடைகள், விடுதிகள் என்று வளர்ச்சி பெற்றுவிட்டால், வேளாங்கண்ணியின் முக்கியத்துவம் குறைந்துவிடும் என்று பேராலய நிர்வாகம் தடை வாங்கியிருந்தது.

சிபிஎம் போராட்டம்
இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தப் பாலம் கட்டும் பிரச்சனையை முன்வைத்து, செருதூர் மக்கள், மீனவப் பஞ்சாயத்தார்கள், வேளாங்கண்ணிப் பொதுமக்கள், வணிகர்கள், மற்றும் அனைத்துக் கட்சியினரையும் ஒன்றிணைத்துப் பல்வேறு காலக் கட்டங்களில் இடை விடாப் போராட்டங்களை நடத்தி வந்துள்ளது.

முன்னாள் எம்எல்ஏ வி.மாரிமுத்து
20006 ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சி.பி.எம்.சார்பில் மாநிலக்குழு உறுப்பினர் வி.மாரிமுத்து நாகைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது, வேளாங்கண்ணிப் பேரூராட்சி நாகப்பட்டினம் தொகுதியில் அடங்கியிருந்தது. எனவே, பாலத்திற்காக சிபிஎம் தலைமையில் அனைத்து மக்களும் தொடர்ந்து போராடினர். இந்தப் போராட்டங்களுக்கெல்லாம் தலைமை வகித்துச் செயல் வடிவம் கொடுத்தவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அப்போதைய மாவட்டச் செயலாளர் ஏ.வி.முருகையன், வி.மாரிமுத்து, நாகைமாலி, வி.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் ஆவார்கள். வி.மாரிமுத்து எம்.எல்.ஏ.ஆக இருந்த காலத்தில் போராடங்களின் வலிமையால், உயர்நீதிமன்றத்தில் தடை உடைக்கப் பெற்று, ரூ.15 கோடி மதிப்பீட்டில் பாலம் கட்டப்படும் என ஒப்பந்தம் ஏற்பட்டுத் தமிழக அரசும் அதற்கான ஆணையை வெளியிட்டது.

இந்த இடைக்காலத்தில், வேளாங்கண்ணிப் பேரூராட்சியும் நாகைக்கு அருகிலுள்ள கீச்சாங்குப்பம் மீனவகிராமம் முதல் தெற்கேயுள்ள மீனவ கிராமங்கள் எல்லாம் கீழ்வேளூர்த் தொகுதிக்கு மாற்றப்பட்டன.

முன்னாள் எம்எல்ஏ நாகைமாலி
2011-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், சி.பி.எம்.சார்பில் கீழ்வேளூர்த் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக நாகைமாலி வெற்றிபெற்றார். இவரது பதவிக் காலத்தில்தான், வேளாங்கண்ணி- செருதூர் வெள்ளையாற்றுப் பாலத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. நாகைமாலி, அடிக்கடி செருதூர் சென்று இந்தப் பாலம் உறுதியாகவும் விரைவாகவும் கட்டப்பட வேண்டும் என ஒப்பந்தக்காரரையும் பணியாட்களையும் பார்த்துக் கேட்டுக் கொள்வார். மாவட்ட ஆட்சியரையும் பார்த்து இந்தப் பாலப் பணி விரைவில் முடிக்கப் படவேண்டும் என்று கேட்டுக் கொள்வார்.

ஆனால் ஆண்டுகள் 6 கடந்துவிட்டன. பாலப்பணி முடிவதாயில்லை. 2011 முதல், 2016 வரையுள்ள காலத்தில் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய நாகைமாலி, தமது தொகுதியில் இரண்டிரண்டு கிராமங்களை இணைக்கும் பல பெரிய பாலங்களைக் கட்டியவர். இதற்காக, சம்பந்தப்பட்ட அமைச்சர்களையும் அதிகாரிகளையும் சளைக்காது கண்டு பேசி, அலையாய் அலைந்தும் தொடர் முயற்சிகளைச் செய்தார். இப்படியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாபெரும் போராட்டங்களாலும் சி.பி.எம்.சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள் வி.மாரிமுத்து, நாகைமாலி, முன்னாள் மாவட்டச் செயலாளர் ஏ.வி.முருகையன் மற்றும் கட்சியின் பல தலைவர்கள், தோழர்கள் முன்னின்று போராடிப் பெற்ற மாபெரும் கொடைதான் வேளாங்கண்ணிக்கும் செருதூருக்கும் இடையே கட்டப்பட்டுள்ள இந்தப் பாலம்.

இப்படி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்ட வரலாற்றால் அமைக்கப்பட்ட இந்தப் பாலம், திங்கட்கிழமை அன்று, யாருக்கும் அழைப்பின்றி, ஓசையில்லாமல் திறக்கப்பட்டுள்ளது. ஆனாலும் வெள்ளையாறும் இந்தப் பாலமும் உள்ளவரை, இதற்காக உழைத்த, போராடிய, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும் அதன் தலைவர்களையும் காலம் காலமாகச் சொல்லிக் கொண்டேயிருக்கும்.
-ந.காவியன்

Leave A Reply

%d bloggers like this: