மும்பை :

பாஜக தலைமையிலான மத்திய அரசு பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது.. மத்திய அரசின் தனியார் கார்ப்பரேட்களுக்கு சாதகமான தவறான கொள்கையினால் பொதுத்துறை வங்கிகள் அனைத்தும் வாராக் கடன் தொல்லையால் பல இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றன.

வாராக்க்கடனை கறாராக வசூல் செய்து வங்கிகளின் நிலைமையை காப்பாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வங்கிகளின் பங்குகளை விற்பது, ஊழியர்களின் சம்பள உயர்வை நிறுத்துவது, வங்கி கிளைகளின் விரிவாக்கங்களை நிறுத்துவது, கிராமப்புற வங்கி கிளைகளை மூடுவது என மக்கள் விரோத நடவடிக்கைகளை மத்திய பாஜக அரசாங்கம் தொடர்ந்து எடுத்து வருகிறது.

கடந்த வருடம் பாரத ஸ்டேட் வங்கியின் கிளை வங்கிகளை ஒன்றிணைத்து ஒரே வங்கியாக மாற்றியிருந்தது. தற்போது மேலும், நான்கு பொதுத்துறை வங்கிகளை ஒன்றிணைக்கவும், அதிலுள்ள அரசின் பங்குகளில் சிலவற்றை விற்கவும் முடிவுசெய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாங்க் ஆப் பரோடா, ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ், ஐடிபிஐ வங்கி மற்றும் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா ஆகிய வங்கிகளின் சொத்துகளை ஒன்றிணைத்து ஒரே வங்கியாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனால் பாரத ஸ்டேட் வங்கியை அடுத்து 16.58 லட்சம் கோடியுடன் நாட்டின் இரண்டாவது பெரிய வங்கியாக மாறும் என கூறப்படுகிறது. ஐடிபிஐ வங்கியின் 51 சதவிகித பங்குகளை விற்கவும் முடிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.