காங்கயம்,
காங்கயத்தில் நடைபெற்ற அரசு விழா ஐந்தே நிமிடத்தில் முடிந்தது. காங்கயம் பொதுப்பணியாளர்கள் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு பங்கு ஈவுத் தொகை வழங்கும் விழா காங்கயத்தில் உள்ள தாலுகா அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கக் கட்டடத்தில் சனியன்று நடைபெற்றது. இதில், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், ஈரோடு எம்.பி. எஸ்.செல்வகுமார சின்னையன், காங்கயம் எம்.எல்.ஏ. உ.தனியரசு, முன்னாள் எம்.எல்.ஏ. என்.எஸ்.என்.நடராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் வரவேற்புரையை அடுத்து, காங்கயம் பொதுப்பணியாளர்கள் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து ஒரு நிமிடம் மட்டும் அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் பேசிவிட்டு, நான்கு நபர்களுக்கு பங்கு ஈவுத் தொகைக்கான காசோலையை வழங்கினார். இதையடுத்து ஐந்து நிமிடத்துக்குள் விழா முடிவடைந்தது. இந்தக் கூட்டத்தில் அமைச்சரைத் தவிர யாரும் பேச அனுமதிக்கப்படவில்லை. விழா முடிந்ததும் அமைச்சர் கே.ராதாகிருஷ்ணனிடம், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு இழப்பீடு கொடுத்திருக்கிறது. இப்படி பயங்கரவாதிகளுக்கு இழப்பீடு கொடுப்பது காவல்துறையின் நடவடிக்கையை கொச்சைப்படுவதாகும் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியிருக்கிறாரே எனக் கேட்டதற்கு, இதற்கு முதல்வர் தான் பதில் கூற வேண்டும் என்று கூறிவிட்டுச் சென்றார். காங்கயம் எம்.எல்.ஏ. உ.தனியரசுவிடம் கேட்டதற்கு, தனக்கு அது குறித்து எதுவும் தெரியாது என்றார்.

Leave a Reply

You must be logged in to post a comment.