ஈரோடு,
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குள்ளம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் திறன் வழிக்கற்றல் வகுப்பறை, கலை அரங்கம் திறப்பு விழா சனியன்று நடைபெற்றது.இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் தலைமை வகித்தார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு திறன்வழிக்கற்றல் வகுப்பறை, கலை அரங்கம்ஆகியவற்றை திறந்து வைத்து பேசுகையில், நமது தமிழகத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் இனி வரும் காலங்களில் மத்திய அரசு கொண்டு வரும், அனைத்து பொதுத்தேர்வுகளையும் சந்தித்து அதில்சாதிக்கும் வகையில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றது. மாணவ, மாணவியர்கள், 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடியும் பொழுதே அவர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கிடும் வகையில் புதிய பாடத்திட்டமானது வடிவமைக்கப்பட்டுள்ளது.

தற்போது மாற்றி அமைக்கப்பட்டுள்ள பாடத்திட்டத்தில் க்யூ ஆர் பார்கோடு மூலம் பாடத்திட்டங்களின் விளக்கங்கள் உள்ளிட்டவைகளை மொபைல் மூலமாக தெரிந்து கொண்டு மாணவ, மாணவியர்கள் எளிதில் கற்கும் வகையில் தலைசிறந்த கல்வியாளர்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. விரைவில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து பாடத்திட்டங்களும் மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.மேலும் இந்தாண்டு முதல் 1 முதல் 5 வகுப்பு வரை ஒரே மாதிரியான சீருடைகளும், 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை ஒரே மாதிரியான சீருடைகளும், 9 முதல் 10-ஆம்வகுப்பு வரை ஒரே மாதிரியான சீருடைகளும், 11 முதல் 12-ஆம் வகுப்பு வரை ஒரே மாதிரியான சீருடைகளும் என 4 வகை சீருடைகள் வழங்கப்பட்டுள்ளது. எல்லோரும் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் திறன் வளர்ப்பு வகுப்பறை ஒவ்வொரு பள்ளியிலும் உருவாக்கப்பட்டு வருகின்றது. நீட் தேர்வுக்காக 3,448 மாணவ, மாணவியர்களுக்கு உணவு, உறைவிடத்தோடு பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது. மேலும் இப்பள்ளி மாணவ, மாணவியர்களின் வசதிக்காக கோபியிலிருந்து கவுந்தப்பாடி செல்லும் 10-எ,10-பி ஆகிய பேருந்துகளின் வழிதடம் நீட்டிக்கப்பட்டு, ஞாயிறு முதல் குள்ளம்பாளையம் வழியாக செல்லும் இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.