மதுரை;
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கருங்காலக்குடியை சேர்ந்தவர் கண்ணன் (37). இவர் கடந்த மார்ச் மாதம், 23-ந் தேதி, இரவு 8 மணியளவில், மதுரை- திருச்சி இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டு இருந்தார்.

அப்போது சாலை விதிகளுக்கு மாறாக எதிர் திசையில் நின்ற லாரி மீது மோதியதால் படுகாயமடைந்த கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கண்ணனின் மனைவி வாசுகி மற்றும் அவரது குடும்பத்தினர், மதுரை 4-வது கூடுதல் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விபத்தில் உயிரிழந்த கண்ணனுக்கு உரிய இழப்பீடு கோரி மனுதாக்கல் செய்தனர். அந்த மனுவில் “மதுரை- திருச்சி இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் விபத்தை ஏற்படுத்திய லாரி, 2 நாட்களாக நின்றதும், இதை முறையாக எடுத்துச்செல்ல தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் நடவடிக்கை எடுக்காததாலும்தான் விபத்து ஏற்பட்டது’’ என்று கூறப்பட்டிருந்தது. இதனையடுத்து நீதிபதி சஞ்சய்பாபா தாமாக முன்வந்து இந்த வழக்கில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய தலைமை அதிகாரியை எதிர் மனு தாரராக சேர்த்தார்.

வழக்கு விசாரணையின் போது இரு தரப்பு விவாதங்களையும் கேட்ட நீதிபதி சஞ்சய்பாபா தீர்ப்பு வழங்கினார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:- 4 வழிச்சாலைகளில் கட்டணம் வசூலிப்பது மட்டுமின்றி, சாலைகளை முறையாக பராமரிப்பதும், விபத்து ஏற்படாமல் தடுப்பதும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் பணி. ஆனால் தங்களது பணியை கவனிக்க அவர்கள் தவறிவிட்டனர். இந்த வழக்கில், ரூ.19 லட்சத்து 97 ஆயிரத்து 800 இழப்பீடு வழங்கவேண்டும். மனுதாரரின் கணவர் தலைக்கவசம் அணியாமல் இருசக்கரவாகனம் ஓட்டியுள்ளார். எனவே, இழப்பீட்டில் 15 சதவீதம் குறைக்கப்படுகிறது. மீதமுள்ள பணத்தில், லாரி காப்பீடு செய்யப்பட்ட நிறுவனம் 50 சதவீதமும், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் 35 சதவீதமும் என கணக்கிட்டு மனுதாரருக்கு வழங்க வேண்டும்.

மேற்கண்டவாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.விபத்து வழக்கில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையமும் இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது நாட்டிலேயே இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

You must be logged in to post a comment.