சிதம்பரம்,
சிதம்பரத்திற்கு வருகை தந்த சிபிஎம் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில்,“ தூத்துக்குடி சம்பவத்தில் நீதிகேட்டு போராடியமக்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தி துப்பாக்கிச் சூடு நடத்தி 13 பேரை கொலைசெய்துள்ளனர். இந்த சம்பவத்தை கண்டித்து எதிர் கட்சிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. ஆனால் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனும் பாஜகவை சேர்ந்தவர்களும், நீதி கேட்டு போராடிய மக்களை பயங்கரவாதிகள் என்று தொடர்ந்து கூறி வருகிறார்கள். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

ஸ்டெர்லைட் ஆலையிடம் அதிக நன்கொடை பெற்றது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில் போராடிய மக்களை பயங்கரவாதிகள் என்று கூறி வரும் இவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும். ஆலைக்கு எதிராக போராடிய மக்களை பற்றி பேச தகுதியில்லை என்றும் அவர் தெரிவித்தார். தமிழக அரசு காவல்துறை ராஜ்யத்தை நடத்தி வருகிறது. தூத்துக்குடிக்கு சென்ற வேல்முருகனை கைது செய்து இரவோடு இரவாக அழைத்து வந்து அவரது உடல் பாதிப்பு ஏற்படும் வகையில் சிறையில் அடைத்துள்ளனர். மேலும் அவர் மீது தேசதுரோக வழக்கை பதிவு செய்துள்ளனர். அரசை எதிர்த்து குரல் கொடுத்தால் தேச துரோகியா? என்றும் கே. பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார்.

மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாரம் யெச்சூரி தூத்துக்குடிக்கு வருவதற்கு காவல்துறையினர் அனுமதி மறுப்பதையும் கண்டிக்கிறோம்.அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் ஊழலற்ற நேர்மையான துணை வேந்தரைநியமிக்க வேண்டும். பல்கலைக்கழகத்தில் இருந்து அயற்பணி சென்ற 3500 பேருக்கு 7-வது ஊதியக் குழு வழங்கவில்லை. விரைவில் அவர்களுக்கு வழங்கும் ஏற்பாட்டை அரசு செய்ய வேண்டும். 15 வருடங்களாக பணிபுரியும் தற்காலிக ஊழியர்களை பணிநிரந்தரம் செய்யவேண்டும் என்றும் கே. பாலகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார்.

Leave A Reply

%d bloggers like this: