ஈரோடு,
பவானிசாகர் நீர் பிடிப்பு பகுதியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் ஆளும்கட்சியினர் கூட்டணி அமைத்து மணலை திருடி வருகின்றனர். இந்த மணல் திருடும் மாஃபியா கும்பலை பிடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் தாலுகா புங்கார் ஊராட்சிக்கு அருகில் உள்ளது பவானி சாகர் அணை. இந்த அணை தமிழகத்தின் இரண்டாவது பெரிய அணை என்னும் சிறப்புக்குரியது. ஆசியாவிலேயே மிக நீளமான மண் அணையும் இது தான். இதன்உயரம் 105 அடி. அணையின் கொள்ளளவு 32.8 டி.எம்.சி ஆகும். பவானி சாகர் அணையின் மூலமாக புதிய ஆயக்கட்டு 2.07 லட்சம் ஏக்கர் பாசனம் பெறுகிறது. இப்புதிய ஆயக்கட்டு இரு பகுதிகளாக ஒற்றை படை, இரட்டை படை மதகுகள் என பிரிக்கப்பட்டு, வருடாவருடம் ஒரு பகுதிக்கு 1,03 ,500 ஏக்கர் நெல்லுக்கும், மறு பகுதிக்கு புஞ்சை பயிருக்கும், மாறி மாறி பாசனம் பெறுகிறது. நெல்லுக்கு 24 டி.எம்.சி நீரும், புஞ்சை பயிருக்கு 12 டி.எம்.சி என மொத்தம் 36 டி.எம்.சி நீர் தேவை படுகிறது. இவ்வணையின் மூலம் பழைய ஆயக்கட்டுகளான தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பகுதிகள் பவானி சாகர் அணைக்கு கீழுள்ள கொடிவேரி அணைக்கட்டு மூலமும், காளிங்கராயன் அணைக்கட்டு மூலம், காளிங்கராயன் பாசன பகுதியும், பாசனம் பெறுகிறது. அவைகளுக்கு வருடா வருடம் 24 டி.எம்.சி நீர் தேவை படுகிறது. கொடிவேரி அணைக்கட்டு மூலம் 25 ஆயிரம் ஏக்கரும், காளிங்கராயன் அணைக்கட்டு மூலம் 15 ஆயிரம் ஏக்கரும், பாசனம் பெற்று வருகிறது.

மணல் திருட்டு;
சத்தியமங்கலம் தாலுகா, புதுபீர்கடவு ஊராட்சி, சுஜ்ஜில்கட்டை பகுதியில் அமைந்துள்ளது பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதி. நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் மோயாறு (மாயாறு) தமிழகத்தின் எல்லைப்பகுதியில் பவானிசாகர் அணைக்கு வந்து சேர்க்கிறது. இங்கு, மோயாறு ஆற்று நீர் பவானிசாகர் ஆற்றில் இணையும் இடமாக உள்ளது.வறட்சி காலத்தில் தண்ணீர் குறைந்த காரணத்தால், அணையை சுத்தப்படுத்தவும், ஆழப்படுத்தவும், கடந்த இரண்டு மாதங்களாக பவானிசாகர் அணையை ஒட்டிய பகுதியில் உள்ள வண்டல் மண்ணை விவசாயத்திற்கு எடுத்துக் கொள்ளலாம் என பொதுப்பணித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி ஆளுங்கட்சியினர் மற்றும் செங்கல் சூலை முதலாளிகள் விவசாயிகள் என்ற போர்வையில் நாள் ஒன்றுக்கு 100க்கும் மேற்பட்ட லாரிகளில் 500 முதல் 600 லோடு மணல், செம்மண், நைஸ் மணல் போன்றவைகளை அனுமதியில்லாமல் திருடி வருகின்றனர்.

அதிகாரிகள் உடந்தை;
கடந்த மாதத்தில் ஒரே நேரத்தில் 6 லாரிகளில் கொண்டு செல்லப்பட்ட மணலை அப்பகுதியில் உள்ள சிபிஎம் சத்தியமங்கலம் தாலுகா கமிட்டி உறுப்பினர் எல்.சேசுராஜ், சி.சேகர் ஆகியோர் தலைமையில் 100க்கும் மேற்பட்டவர்கள் சிறை பிடித்துள்ளனர். மேலும், பவானிசாகர் காவல்துறை மற்றும் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு நேரடியாக கைபேசி வாயிலாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் சில அதிகாரிகள், எம்.எல்.ஏ சம்பந்தப்பட்டது, இதனால் நாங்கள் தலையிட முடியாது என வர மறுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை அதிகாரிகள் சிறை பிடிக்கப்பட்ட லாரிகளை பொதுமக்களிடம் இருந்து மீட்டு ஊர் எல்லை வரை பாதுகாப்புடன் கொண்டு விடப்பட்ட சம்பவங்களும் அரங்கேறியுள்ளது.

ஜூன் 2 ஆம் தேதி மதியம் 1 மணியளவில் நைஸ் மணல் ஏற்றி வந்த 4 லாரிகளை கொத்தமங்கலம் நேரின்சிப்பேட்டை அருகில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிறைபிடித்தனர். பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து மணல் அனுமதியுடன் எடுத்து வந்ததாக கூறியுள்ளனர். வன பாதுகாவலர் அனுமதியுடன் எடுக்கப்பட்ட மணலை பிடிக்கக்கூடாது என கூறியுள்ளனர். லாரிகள் மீது வழக்கு பதிவு செய்ய முடியாது. என கூறி வட்டாட்சியர் தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்பாக லாரிகளை அனுப்பி வைத்துள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

ஆளுங்கட்சி நிர்வாகம்;
பவானிசாகர் அணையின் மொத்த நிர்வாகம் ஆளுங்கட்சியின் கைக்குள் உள்ளது போல, மணல் எடுக்கப்படும் அனைத்து இடங்களிலும் ஆளுங்கட்சியின் நிர்வாகிகள் அங்குள்ள பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை காவல்துறை அதிகாரிகள் மிரட்டி வைத்துள்ளனர். இதனால் அனைத்து அதிகாரிகளும் அவர்களுக்கு உடந்தையாக இருந்து வருகிறார்கள். மணல் எடுத்து வர அணையின் முகப்பு முதல் மலை அடிவாரம் வரை நல்ல பாதை செய்து கொடுத்துள்ளனர். மேலும், ஒவ்வொரு இடத்திலும் சுமார் 10 ஏக்கர் விகிதம்,20 அடி ஆழம் வரை மணல் எடுத்துள்ளனர்.

ஒரு லோடு மணல் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரையும், நைஸ் மணல் ஒரு லோடு 35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரையும், செம்மண் ஒரு லோடு 5 முதல் 8 ஆயிரம் வரை ஆளுங்கட்சி நிர்வாகிகளே அரசு அதிகாரிகளுடன் கைகோர்த்து விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. மணல் கடத்தலில் ஏதேனும் பிரச்சனைகள் வந்தால், ஆளுங்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தலையிட்டு தடையை நீக்கி வருகிறார்கள்.

விவசாயம்;
பவானி சாகர் அணைக்கு மோயாறு பகுதியில் இருந்து தண்ணீர் அதிகமாக வருவதால் அருகில் உள்ள விவசாய நிலங்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறது. தண்ணீர் அதிகாமாக வரும் காலங்களில் விவசாயம் செய்யாமல் தங்களது வீடுகளுக்கு செல்கிறார்கள். நிலத்தின் ஈரம் குறைந்த பிறகே டிராக்டர் போன்ற வாகனங்களை பயன்படுத்துகிறார்கள். பாதிக்கப்படும் விவசாயிகள் நஷ்டஈடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகிறார்கள். இங்கு, தட்டை பயிறு, வெங்காயம் போன்ற பயிர்களை பயிரிட்டு வருகிறார்கள். விவசாய நிலங்களுக்கு அருகில் 20 அடி ஆழம் வரை மணல் எடுக்கப்படுவதால் விவசாய நிலங்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறது.

கறி விருந்து இரவு பகலாக திருடப்பட்டு வரும் மணலை ஆளுங்கட்சியினர் அணைக்குள் யார் வருகிறார்கள் என தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். வாரத்திற்கு ஒரு வருவாய்த்துறை அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆளுங்கட்சியினர் அனைவரும் அணையில் முன் பகுதியில் அமைந்துள்ள குடிசையில் ஒன்று சேருகிறார்கள். கறி வறுவல் செய்து பல விதமான கூத்துகள் அரங்கேறி வருவதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.விவசாயிகளுக்கு மட்டுமே வண்டல் மண் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். அனுமதியின்றி தவறான முறையில் ஆளும்கட்சியினரின் கூட்டணியில் செயல்படும் மணல் மாஃபியா கும்பலை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் மிகப்பெரிய போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்த திட்டமிட்டுள்ளோம் என அப்பகுதி மக்களும் மார்க்சிஸ்ட் கட்சியினரும் அரசிற்கு கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

– லெனின்

Leave a Reply

You must be logged in to post a comment.