நிலாவும் கிழவரும்

1969 ஜூலை மாதம் அமெரிக்காவின் அப்போல்லோ 11 ராக்கெட் நிலாவில் இறங்கியது. அதில் பயணம் மேற்கொள்வதற்கு முன் நீல் ஆம்ஸ்டராங் (முதலில் நிலவில் கால் பதித்த மனிதன்) போன்ற விண்வெளி வீரர்களுக்கு நிலாவைப் போலவே நிலப்பரப்புள்ள மேற்கு அமெரிக்கப் பாலைவனமொன்றில் பயிற்சி அளிக்கப்பட்டது. அப்போது அவர்களைப் பார்த்த பூர்வகுடி கிழவர் நீங்கள் இங்கு என்ன செய்கிறீர்கள் என்றார். விண்வெளி வீரர்கள் தங்களின் நிலவுப் பயணத் திட்டத்தைக் கூறினர். அந்த முதியவர் உடனே எங்கள் இனத்தவர்கள் நிலாவில் புனித ஆவிகள் இருப்பதாக நம்புகிறார்கள். அந்த ஆவிகளுக்கு எங்களின் சார்பாக ஒரு செய்தி சொல்ல முடியுமா என்று கேட்டவுடன் விண்வெளி வீரர்களும் சரியென்றனர். பூர்வகுடி மொழியில் அமைந்த அந்த செய்தியை அவர்கள் மனப்பாடம் செய்யும் வரை சொல்லிக் கொடுத்தார் கிழவர். அதன் பொருள் என்னவென்று சொல்ல மறுத்து விட்டார். 

நிலவுக்குச் சென்று திரும்பிய விண்வெளி வீரர்கள் மீண்டும் அந்த பாலைவனத்திற்குச் சென்று கிழவரைத் தேடினர். அவர் கிடைக்க வில்லை.
அதே இனத்தைச் சேர்ந்த வேறு ஒரு கிழவரிடம் அந்த செய்தியின் பொருள் என்னவென்று அவர்கள் கேட்க அவர் இடியெனச் சிரித்தார்:
அதன் பொருள் இதுதான்:
“இந்த விண்வெளி வீரர்கள் சொல்வது எதையும் கேட்காதீர்கள். அவர்கள் உங்கள் நிலங்களைத் திருட வந்தவர்கள்.”
(யுவால் நோவா ஹராரி எழுதிய ‘சேப்பியன்ஸ்” என்கிற புத்தகத்திலிருந்து)

Vijayasankar Ramachandran

Leave A Reply

%d bloggers like this: