கவுகாத்தி:
அடக்கம் செய்வதற்கு கூட உறவினர்கள் இல்லாத ஏழை ஒருவரின் பிணத்தை, அந்த தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ சுடுகாட்டுக்கு பாடையில் சுமந்து சென்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மாநிலம் ஜோர்காட் மாவட்டத்தில் எடபா ராபர் சாரியலி பகுதியைச் சேர்ந்தவர் திலீப் டே (50). மிகவும் ஏழையான இவர், உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். இவருக்கு உடல் ஊனமுற்ற உறவினர் ஒருவர் மட்டுமே இருக்கிறார்.எனவே இறுதிச் சடங்கிற்கு சுடுகாட்டுக்குத் தூக்கிச் செல்லக்கூட ஆளில்லாத நிலை இருநதுள்ளது. இந்த தகவலை, அண்டை வீட்டுக்காரரான ரூபம் கோகய் என்பவர் ஜோர்காட் தொகுதி எம்.எல்.ஏ. ரூப்ஜோதி குர்மி (40)யிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, உடனடியாக அங்கு வந்த ரூப்ஜோதி குர்மி, உடல் ஊனமுற்ற உறவினருடன் சேர்ந்து இறந்த திலீப்டே-வுக்கு இறுதி சடங்குளைச் செய்ததுடன், அவரது பிணத்தையும் மூங்கில் பாடையில் வைத்து சுடுகாட்டிற்கு தோளில் தூக்கிச் சுமந்துள்ளார்.
எம்.எல்.ஏ. ரூப்ஜோதி குர்மியின் இந்த மனிதாபிமான செயலுக்கு பரவலாக பாராட்டு எழுந்துள்ளது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரூப் ஜோதி குர்மி, ஜோர்காட் தொகுதியில் தொடர்ந்து 3 முறை எம்.எல்.ஏ. ஆக இருக்கிறார். குர்மியின் தாயார் ரூபம் குர்மியும் இதற்கு முன்பு எம்எல்ஏ-வாக இருந்துள்ளார்.தன் தொகுதியில் நடைபெறும் நலத்திட்டங்களுக்குத் தேவையான கட்டுமானம் மற்றும் இதர வேலைகளுக்கு உதவி செய்யும் எளிமையான மனிதர் ரூப்ஜோதி குர்மி என்பது குறிப்பிடத்தக்கது.