சமூகத்தைப் பிளவுபடுத்துவதையே தன் அரசியலாக வைத்திருக்கிறது பாஜக. ஆனால் பாஜக என்பது பாஜக மட்டுமல்ல, ஆர்எஸ்எஸ்சின் ஆணைகளை செயல்படுத்தும் கருவிதான் பாஜக.

இந்துக்கள் அல்லாதவர்கள் – சிறுபான்மை சமூகத்தினர் – இரண்டாம்தரக் குடிமக்களாகவே இருக்க வேண்டும் என்பது ஆர்எஸ்எஸ் வாதம். இதை அவர்கள் வெளிப்படையாகவும் தெரிவித்ததுண்டு. வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் மறைமுகமாக செயல்படுத்துவதும் உண்டு.

1. அரசை பின்னிருந்து இயக்குவது ஆர்எஸ்எஸ்.
2. எல்லாத் துறைகளிலும் அதிகாரிகளுக்கும் மேலே ஆலோசனைக் குழுக்கள் என்ற பெயரில் ஆர்எஸ்எஸ்காரர்கள் திணிக்கப்பட்டுள்ளார்கள்.
3. அதிகாரிகளையே மிரட்டுகிறார்கள்.
4. துறைசார் அறிவோ ஞானமோ இல்லாவிட்டாலும்கூட அவர்கள் சொல்வதைக் கேட்டு நடக்க வேண்டியதாகிறது.
5. அவர்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு கான்டிராக்ட்கள் தரப்படுமாறு நிர்ப்பந்தம் தரப்படுகிறது. ஊழலும் இருக்கிறது. ஆனால் தாம் சிக்கிக் கொள்ளாமல் தந்திரமாகச் செய்ய வைக்கிறார்கள்.
6. அவர்கள் சொல்வதைச் செய்ய மறுப்பவர்கள் தொலைதூரத்துக்கு தூக்கியடிக்கப் படுவார்கள், பணிமாற்றம் செய்யப்பட்டு பழிவாங்கப்படுகிறார்கள்.
7. இதற்குப் பயந்து, அவர்கள் சொன்னதைச் செய்துவிட்டுப் போவதைத் தவிர வேறு வழியில்லை.
8. அதிலும் குறிப்பாக, இந்துக்கள் அல்லாதவர்கள், தென்னிந்தியர்கள் என்றால் இந்தப் பழிவாங்கும் போக்கு அதிகமாக இருக்கிறது.

மேலே குறிப்பிட்ட விஷயங்கள் சில வாரங்களுக்கு முன்னால் ஒரு பதிவில் நான் கமென்டாக எழுதியது.

பல மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களில் சிறுபான்மை சமூகத்தினர் ஒருவரைக்கூட வேட்பாளர்களாக பாரதிய ஜனதா அறிவிக்கவில்லை என்பதை எல்லாரும் அறிவோம். சிறுபான்மையினர் தேவையில்லை, இந்துக்களே போதும் என்பதை வெளியே சொல்லாமல் அகங்காரத்துடன் செயல்படுத்தும் திட்டம் அது.
இதை அந்த அரசியல் கட்சியின் கொள்கை, அது யாருக்கு விருப்பமோ அவர்களுக்கு சீட் தரும் என்று சிலர் சொல்லலாம்.

ஆனால் அரசுத் துறைகள், ஆட்களை நியமிக்கும் அரசிடம் அதிகாரம் உள்ள துறைகளிலும் சிறுபான்மை சமூகத்தினர், பாஜகவுக்கு எதிரான கருத்துக் கொண்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள், திட்டமிட்டு ஒதுக்கப்படுகிறார்கள், தண்டிக்கப்படுகிறார்கள். இது வெளியே தெரிவதில்லை. தண்டிக்கப்பட்டதற்கு சரியான உதாரணம் டாக்டர் கபீல் கான். மிக அபாயகரமான இந்தப் போக்குக்கு உதாரணமாக ஒரு செய்தியைப் பார்ப்போம்.

நீதிபதிகளின் பதவிக்கு சரியான நபர்களைத் தேர்வு செய்து பரிந்துரைக்க நீதித்துறையில் ஒரு தேர்வுக் குழு இருக்கிறது. அதை கொலேஜியம் என்பார்கள். நீதித்துறை பரிந்துரை செய்யும் நபர்களை அரசு ஒப்புக்கொண்டு நியமனம் செய்யப்படுகிறது.

தகுதியுள்ள நீதிபதிகளைத் தேர்வு செய்யும் அதிகாரத்தை நீதித்துறையிடமிருந்து பறித்து தன்னிடமே வைத்துக்கொள்ள பாஜக ஆட்சிக்கு வந்ததுமே ஒரு நடவடிக்கை எடுத்த்து. அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்து தேசிய நீதித்துறை நியமன ஆணையம் ஒன்றை உருவாக்கியது. உச்சநீதிமன்றம் இதை செல்லாது என அறிவித்துவிட்டது. உச்சநீதிமன்றம் மட்டும் அதை தடை செய்யாமல் இருந்திருந்தால் நீதிமன்றங்களுக்கான எல்லா நியமனங்களும் ஆட்சியாளர்களுக்கு ஆமாம் போடுகிற நபர்களுக்கே கிடைத்திருக்கும். (இப்போது மட்டும் என்ன வாழ்கிறதாம் என்று தீபக் மிஸ்ராவை சுட்டுபவர்கள் சற்று பொறுமை காக்கவும்.)

உச்சநீதிமன்றத்திலும் உயர்நீதி மன்றங்களிலும் பல இடங்கள் காலியாக உள்ளன. உச்சநீதிமன்றத்தில் 7 காலியிடங்களும், உயர்நீதிமன்றங்களில் 420 காலியிடங்களும் உள்ளன. (ஜனவரி கணக்குப்படி). (இதுதவிர, மாவட்ட நீதிமன்றங்கள் உள்பட நாடெங்கும் காலியாக உள்ள நீதிபதி பதவிகளின் எண்ணிக்கை சுமார் 6000. இந்திய வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு இப்போதுதான் இவ்வளவு காலியிடங்கள் இருக்கின்றன. சில மாநிலங்களில் 60 சதவிகித நீதிபதிகளின் இடங்களுக்கு ஆட்கள் நிரப்பப்படவில்லை. மேக்சிமம் கவர்னன்ஸ்!)

இந்தப் பின்னணியை நினைவில் வைத்துக்கொண்டு, மேலே குறிப்பிட்ட நியமன விஷயத்துக்கு வருவோம்.

உச்சநீதிமன்றத்தில் 7 நீதிபதி பதவிகள் காலியாக உள்ளன. உத்தராகண்ட் தலைமை நீதிபதியாக இருக்கும் ஜோசப் என்பவர் பெயரை தேர்வுக்குழு பரிந்துரை செய்தது. பாஜக அரசு, அவருடைய பெயரை ஏற்க முடியாது, வேறு பெயரைப் பரிந்துரை செய்யுங்கள் என்று அந்தப் பரிந்துரையைத் திருப்பி அனுப்பிவிட்டது. தேர்வுக்குழு பரிந்துரை செய்யும் நபர்களை அரசு அப்படியே ஏற்றாக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்பது சிலரின் வாதம். பரிந்துரை செய்யப்பட்ட நபரின்மீது ஏதேனும் புகார் இருந்தால் ஏற்க மறுக்கலாம்.

ஆனால் ஜோசப் விஷயத்தில் கவைக்குதவாத காரணம் கூறி மறுத்திருக்கிறது பாஜக அரசு. உச்சநீதிமன்றத்தில் கேரளத்துக்கு ஏற்கெனவே அதிக பிரதிநிதித்துவம் இருக்கிறதாம்! உச்சநீதிமன்றத்துக்கு யார் வந்தாலும் அவர் இந்திய நீதிபதிதானே தவிர, குறிப்பிட்ட மாநில நீதிபதி ஆக மாட்டார். மைய அரசு சொன்ன இன்னொரு காரணம், சீனியாரிட்டி பட்டியலில் அவர் பின்னே இருக்கிறாராம். உச்சநீதிமன்ற தேர்வுக் குழு பரிசீலனைக்கான விஷயங்களில் சீனியாரிட்டியும் இடம் பெறும் என்றாலும், அதுவே பிரதானமானது அல்ல. தகுதியும் நேர்மையும் மட்டுமே முக்கியம். மைய அரசு சொன்ன அபத்தத்திலும் அபத்தமான காரணங்களைப் பற்றி ஊடகங்கள் பேசவே இல்லை, அல்லது மிகவும் அடக்கி வாசித்தன.

உண்மைக் காரணம் என்னவாக இருக்கும்? 1. 2016இல் உத்தராகண்டில் குடியரசுத் தலைவர் ஆட்சியை பாஜக அரசு பிரகடனம் செய்த்தை ரத்து செய்து உத்தரவிட்டார். 2. சிறுபான்மை சமூகத்தினர், கேரளத்தவர். இரண்டில் எது காரணமாக இருந்தாலும், அது அடாவடித்தனமானது. இரண்டுமே காரணமாகவும் இருக்கக்கூடும். இரண்டாவது விஷயம் காரணமாக இருக்காது என்று சொல்ல நினைக்கிறவர்கள், மேலே தொடர்ந்து படிக்கவும்.

சில உயர்நீதிமன்றங்களில் நீதிபதி பதவிகள் காலியாக உள்ளன. இதற்கான ஆட்களை தேர்வு செய்து, அரசுக்குப் பரிந்துரை செய்கிறது நீதிமன்றத் தேர்வுக்குழு. இந்தப் பரிந்துரையில் இடம்பெற்ற பலருக்கும் பதவி தரப்பட்டது, அல்லது நிராகரிக்கப்பட்டது. ஆனால் நான்கு பேர் விஷயத்தில் மட்டும் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது. அதுவும் எத்தனை நாட்களாக நிலுவையில் உள்ளது என்று தெரியுமா? இரண்டு ஆண்டுகளாக!
அந்த நால்வர் பெயர்கள் – ஹர்நரேஷ் சிங் கில், பஷரத் அலி கான், மொகம்மது மன்சூர், மொகம்மது நிஜாமுத்தீன்.

இதே பெயர்களோடு பரிந்துரைக்கப்பட்ட மற்றவர்களுக்கு எல்லாம் பதவி தரப்பட்ட / நிராகரிக்கப்பட்ட பிறகும் இவர்களை மட்டும் நிலுவையிலேயே வைத்திருப்பது என்ன டிசைன்?

ஹர்நரேஷ் சிங் கில் என்ற வழக்கறிஞரின் பெயர் பஞ்சாப் உயர்நீதிமன்றத்தின் தேர்வுக்குழுவால் 2016 ஜூன் மாதம் பரிந்துரை செய்யப்பட்டது. உச்சநீதிமன்றமும் அதை ஒப்புக் கொண்டது. இவர் பெயரோடு மேலும் ஆறு பேரின் பெயர்களும் பரிந்துரை செய்யப்பட்டன. அந்த ஆறு பேருக்கும் 2017 ஜூலையில் நியமனம் ஆகிவிட்டது. இவர் பெயர் மட்டும் ஏன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பதற்கு இதுவரை எந்த விளக்கமும் இல்லை, பதிலும் இல்லை. தமிழில் சொல்வதுபோல, கோப்பினை குண்டிக்கடியில் போட்டுக்கொண்டு உட்கார்ந்திருக்கிறது அரசு. அரசைத் தொடர்பு கொண்டு கேட்டால், பரிசீலனையில் இருக்கிறது என்று பதில் அளிக்கிறார்களாம். இரண்டு ஆண்டுகளாக பரிசீலனையில் வைத்திருக்கிறது மேக்சிம்ம் கவர்ன்ன்ஸ் அரசு.

மொகம்மது நிஜாமுத்தீனின் பெயர், கல்கத்தா உயர்நீதிமன்றத்துக்காக 2016 ஆரம்பத்தில் பரிந்துரைக்கப்பட்டது. அவருடைய பெயருடன் பரிந்துரை செய்யப்பட்ட மற்றவர்களுக்கும், அவருக்குப் பின்னால் பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கும்கூட நியமனம் ஆகிவிட்டது. ஆனால் நிஜாமுத்தீன் பெயர் நிலுவையிலேயே உள்ளது.

பஷரத் அலி கான், மொகம்மது மன்சூர் இருவர் பெயரும் அலகாபாத் நீதிமன்றத்துக்காக 2016 ஆரம்பத்தில் பரிந்துரை செய்யப்பட்டது. உச்சநீதிமன்றமும் அதை ஒப்புக்கொண்டு பரிந்துரை செய்த பிறகு, இவர்கள் மீது ஏதோ புகார்கள் இருப்பதாகக் கூறி அரசு திருப்பி அனுப்பியிருக்கிறது. அந்தப் புகார்கள் அர்த்தமற்றவை என்று சொன்ன உச்சீநீதிமன்ற தேர்வுக்குழு, அடுத்த சில நாட்களிலேயே அவர்கள் பெயரை மீண்டும் அனுப்பி வைத்தது. அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் உள்ள நீதிபதி பதவிகள் 160. இப்போது காலியாக இருப்பது 63 பதவிகள். ஆனாலும் இந்த இருவர் பெயரையும் இன்னும் நிலுவையிலேயே வைத்திருக்கிறது பாஜக அரசு.

நீதிமன்றங்களில் லட்சக்கணக்கான வழக்குகள் பல ஆண்டுகளாக நிலுவையில் இருக்கின்றன, தாமதமான நீதி என்பது மறுக்கப்பட்ட நீதி என்றெல்லாம் ஒருபக்கம் முழங்கிக் கொண்டிருக்கிறோம். அதே நேரத்தில், உயர்நீதிமன்றங்களில் நீதிபதி பதவிகளுக்காகப் பரிந்துரை செய்யப்பட்ட 123 பெயர்களின் பட்டியல் காத்திருப்பில் இருக்கிறது. இதில் 43 பெயர்கள் உச்சநீதிமன்றத்திடமும் 80 பெயர்கள் அரசிடமும் நிலுவையில் இருக்கின்றன.

ஆனாலும், எந்தக் காரணமும் சொல்லாமல், நிராகரிக்கவும் படாமல் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையிலே வைத்திருப்பது மேலே சொன்ன நான்கு பெயர்கள்தான்.

அரசமைப்புச் சட்டத்தின்படியும், சட்ட அமைச்சகத்தில் தரப்பட்டுள்ள வழிகாட்டலின்படியும், நீதிபதிகளின் தேர்வுக்குழு பரிந்துரைத்த பெயர்களை அரசு பிரதமருக்கு அனுப்பும், பிரதமர் குடியரசுத் தலைவருக்கு அனுப்புவார். குடியரசுத் தலைவர் கையொப்பமிடுவார் என்பதே நடைமுறை.
இதற்கு கால வரையறை இல்லை என்பது ஒருபுறம் இருக்க, சட்ட அமைச்சகம் இதைப் பரிசீலித்து பரிந்துரை செய்யும் என்றும் விதி இல்லை. உச்ச நீதிபதி பரிந்துரைக்கும் பெயர்களை பிரதமர் குடியரசுத் தலைவருக்குத் தெரிவிப்பார்.
After receipt of the final recommendation of the Chief Justice of India, the Union Minister of Law, Justice and Company Affairs will put up the recommendations to the Prime Minister who will advise the President in the matter of appointment.

ஆக, மேற்கண்ட நான்கு பேரின் தேர்வை பிரதமர்தான் இரண்டு ஆண்டுகளாக காரணம் கூறாமல் நிறுத்தி வைத்திருக்கிறார் என்று தெரிகிறது.
இதன் காரணம் என்னவாக இருக்கும்? நீங்களே யோசியுங்களேன்.

Leave A Reply

%d bloggers like this: