கோவை,
அறம் சார்ந்து வாழ்கிற மனிதன் தோற்றுவிடக்கூடாது, வீழ்ந்துவிடக்கூடாது என்ற மக்களின் ஆசையை, கனவை வளர்த்தெடுப்பதுதான் இலக்கியத்தின் பணி என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலப்பொதுச்செயலாளர் சு.வெங்கடேசன் பேசினார்.

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில், இந்திய அளவில் தமிழ்த்துறை பேராசிரியர்களுக்கான 21 நாள் பயிற்சிமுகாம் நடந்து வருகிறது. அதில் வெள்ளியன்று ‘நானும் எனது படைப்புகளும்’ என்ற தலைப்பில் ‘வேள்பாரி’ வரலாற்றுத்தொடரின் ஆசிரியர் சு.வெங்கடேசன் பேசினார். பேராசிரியர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து அவர் பேசுகையில், ‘‘இப்போது பலரும், வேள்பாரியை கொன்று விடாதீர்கள் என்று பதைபதைப்போடு பேசுகின்றனர். ஈராயிரத்தி 500 ஆண்டுகளுக்கு முன்னால் இறந்துபோன பாரியை இப்போது எப்படிக்கொல்வது என்று பகுத்தறிவு ரீதியில் எளிதாக பதில் செல்லிவிடலாம். ஆனால் விசயம் அதுவல்ல. அறம் சார்ந்து வாழும் மனிதன் தோற்றுவிடக்கூடாது, வீழ்ந்துவிடக்கூடாது என்ற எண்ணமே அதற்கு காரணம். இதனை வளர்த்தெடுப்பதுதான் இலக்கியத்தின் பணி.

கம்பன் விட்ட கதை!
படைப்பின் கதாபாத்திரங்களை மக்கள் உயிர்ப்போடு உண்மை என உணர்வதே புனைவின் வலிமை. படைப்புகளின் வழியே தான் ஈராயிரம் ஆண்டுகளாக வள்ளுவரும், நுாற்றாண்டுகளைக்கடந்து ஷேக்ஸ்பியரும் உயிர் வாழ்கின்றனர். உண்மைக்கும் புனைவிற்கும் ஒரு மெல்லிய கோடுதான். உண்மையின் சூடு படாத படைப்பென்று எதுவுமில்லை. காலங்களை கடந்தும் பயணிக்கின்ற ஆற்றல் புனைவுக்கு உண்டு. மனித விழுமியங்கள் ஏற்றப்பட்ட புனைவானது காவியமாக விரிகிறது. கம்பராமாயணத்தில் தான் ராமன் தடவியதால் அணிலுக்கு 3 கோடுகள் என்ற கதை வருகிறது. அதுவரை வேறெந்த ராமகதையிலும் அது இல்லை. இது கம்பன் விட்ட கதை. எனவே, உண்மைக்கும் புனைவுக்குமான இடைவெளி மிக முக்கியமானது.

கலை இலக்கியத்தின் வேலை மனித மனங்களை நோக்கிப் பேசுவது தான். நல்லதொரு சமூக மாற்றத்தில் எழுத்தாளனின் பங்கும் முக்கியமானது. விடுதலைப்போராட்டத்தில் தாகூர், பாரதியின் பங்களிப்பை போல அது இருக்கும். ஆசிரியர் சமூகம் தான் கனவுகளை விதைக்க முடியும். லட்சியங்களை உருவாக்க முடியும். மாற்றத்தின் தூண்டுகோலாக விளங்க முடியும். ஒரு சினிமாவை எப்படி ஒளிப்பதிவாளன் கண்களின் வழியாக காண முடிகிறதோ அப்படி மொழி ஆளுமையின் வழியாகத்தான் படைப்பை அறிய முடியும்.

நாள் மீன் ; கோள் மீன்!
தமிழர்களின் அறிவு மரபு அசாத்தியமானது. பண்டித நேருவால் பாராட்டப்பட்ட மோதிச்சந்திரரின் ‘வணிகநெறிகள்’ என்ற நுால் மூலம், தமிழகத்திற்கும் கிரேக்கத்திற்குமான 400 ஆண்டுகால கடல் வாணிபத்தை அறிய முடிகிறது. மிக வலிமையான கடல் வாணிகத்தை தமிழர்கள் கிறிஸ்து பிறப்புக்கு முன்பே நடத்தினர் என்பதை சீசர் காலத்தின் நாணயங்கள் தமிழகத்தில் கிடைத்திருப்பதும் உறுதி செய்கிறது. இலக்கியங்களும், தொல்லியல் சான்றுகளும் அதை உறுதி செய்கின்றன. உலகின் மிகப்பழமையான வணிகப்பாதையாக தமிழகத்திற்கும் செங்கடலுக்குமான வணிகப்பாதை இருந்துள்ளது. காலத்தை கைக்கொள்ளாமல் இதை நிகழ்த்தி இருக்க முடியாது. தமிழர்கள் பகல் 30 இரவு 30 என்று 60 நாழிகையாக ஒரு நாளை வகுத்துள்ளனர். பன்னிரு மாதங்களாக காலத்தை பிரித்தனர். காலத்தை 60 ஆண்டுகளாக கணக்கிட்டனர்.

கிரேக்கர்கள் ஒரு நாளை 24 மணிநேரமாக பகுத்தனர். காலச்சுழற்சியை 12 மாதங்கள் என்றனர். அது கூட ஜூலியஸ் சீசர், அகஸ்டஸ் காலத்திற்கு பின்னர் தான். அதற்கு முன்னதாக 10 மாதங்கள் தான். இந்த கணக்கீடுகளுக்கு காரணம் அவர்கள் வியாழன் கோளை மையமாக்கொண்டு தான் காலத்தை கணித்தனர். தமிழர்கள் சனி கிரகத்தை அடிப்படையாக வைத்து கணித்தனர். வியாழன் சூரியனை சுற்றி வர 24 ஆண்டுகளும், சனிக்கோள் பூமியை சுற்றிவர 60 ஆண்டுகளும் ஆகிறது. இதுபோல நாள் மீன்களும், கோள் மீன்களும் கொண்டு, விண்மீன்களை ஆராய்ந்து காலத்தைப் பற்றி அறியும் அறிவும் புலமையும் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்ச்சமூகத்திற்கு இருந்துள்ளது. ‘டிகிரி – திகிரி’ போன்ற சொற்களில் இருந்தும் பல உதாரணங்கள் உள்ளன.

அறிவு மரபு!
அறிவு மரபு தான் தமிழின் பெருமை. அதன் நீண்ட நெடிய வரலாற்றினை, பண்பாட்டுச் செறிவை அத்தனை எளிதாக அறிந்துவிட முடியாது. ஆனால் இப்போது, பிரிட்டிஷார் அவர்களின் கல்வி முறையை புகுத்திய பின்னும், 1990 ஆம் ஆண்டுகளுக்குப் பிந்தைய உலகமய தாராளமயத்தின் விளைவுகளாலும் தமிழ் மரபின் தொடர் கண்ணிகள் படுவேகமாக அழிந்து வருகின்றன. பல்கலைக் கழகங்களும், கல்லுாரிகளின் ஆய்வு நிறுவனங்களும் செய்யவேண்டிய பங்களிப்பு மலையளவு உயர்ந்து நிற்கின்றன. அவற்றை நோக்கி நமது கவனத்தை குவிக்கவேண்டும்,’’ இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சிக்கு பாரதியார் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் டி.ஞானசேகரன் தலைமை வகித்தார். பல்வேறு மாநிலங்களில் பணியாற்றும் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
தொகுப்பு ; சூர்யா, கோவை.

Leave a Reply

You must be logged in to post a comment.