சண்டிகர்:
பாஜக ஆளும் ஹரியானா, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் உட்பட 8 மாநிலங்களில், விளைவித்த பொருட்களை 10 நாட்களுக்கு விற்கப் போவதில்லை என்று நூதனப் போராட்டம் ஒன்றை விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

விளைபொருட்களுக்கு கட்டுப்படியான விலை கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்; விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும், எஸ்.எஸ்சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, இப்போராட்டத்தை ஜூன் 1 முதல் விவசாயிகள் துவக்கியுள்ளனர்.ஹரியானா மாநிலத்தில் பாஜக ஆட்சி செய்து வருகிறது. இங்கு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டங்களை பல கட்டங்களாக நடத்தி வருகின்றனர். விவசாயிகள் அதிகம் உள்ள இந்த மாநிலத்தில் தங்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் எதையும் ஆளும் பாஜக நிறைவேற்றவில்லை எனவும், தங்களின் அவல நிலையை ஆளும் பாஜக அரசு கண்டுகொள்ளவில்லை எனவும் விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையிலேயே, ஹரியானாவிலுள்ள விவசாயிகள் கூட்டமைப்பு ஒன்று ‘கிசான் அவ்காஷ் (விடுமுறையில் விவசாயிகள்)’ என்ற பெயரில் புதிய போராட்டத்தை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக பேசிய ஹரியானா மாநில விவசாயிகள் கூட்டமைப்பு தலைவர்களில் ஒருவரான குர்னாம் சிங், ஹரியானாவில் உள்ள 6 ஆயிரத்து 800 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் இந்த போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாகவும், ஜூன் 10-ஆம் தேதி வரை நகரங்களுக்கு காய்கறிகள், பழங்கள், தானியங்கள் மற்றும் பால் போன்ற எவ்வித பொருட்களையும் விவசாயிகள் விற்க மாட்டார்கள் என்றும் அறிவித்துள்ளார்.மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களிலும் விவசாயிகள் சங்கங்கள் இதேபோன்று விடுப்பு எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

விடுப்பு எடுக்கும் போராட்டத்தின் 10 நாட்களும் அனைத்து மாவட்டங்களிலும் தொடர் முழக்கம் நடத்துவது; இறுதியாக ஜூன் 10 அன்று பேரணி நடத்துவது என்றும் விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: