ஆலையை மூடு என்று போராடினால் முதலாளிகள் யாரும் முதலீடு செய்ய முன்வர பயப்படுவர். என்று நடிப்பை தொழிலாகவும் அரசியலை பொழுதுபோக்கவும் வைத்திருக்கும் ரஜனிகாந்த் கவலைப்பட்டுள்ளார்.
நம்முடைய கேள்வி, இந்த கவலைக்கு அடிப்படை என்ன? தொழில்கள் வளரவேண்டும் என்ற அக்கறையா? அல்லது தனது சேமிப்பில் ஒரு பகுதி ஸ்டெர்லைட் நிறுவன பங்குகளாக இருப்பதால் ஏற்பட்ட கவலையா? அவர் நேர்மையானவர் என்றால் அவரது சேமிப்பு எவை எவைகளில் முதலீடாக போய் உள்ளது? மற்ற முதலாளித்துவ கட்சி தலைவர்களுக்கு உள்ளது போல் அயல்நாட்டில் வங்கி கணக்கு உள்ளதா? அல்லது ரியல் எஸ்டேட் மற்றும் தொழிலாக மாற்றப்பட்ட கல்வி இவைகைளில் சுழல்கிறதா என்பதை அறிவிப்பாரா!. பணம் மூதலீடாக சுழலவில்லை என்றால் அது பிணம் என்பதை அவர் அறிந்துதான் இருப்பார்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் குறித்து அவர் முதலில் புரிந்து கொள்ள வேண்டியது மக்கள் தொழில்களை வெறுக்கவில்லை. மண்ணையும் காற்றையும் கெடுக்காதே என்றுதான் போராடுகிறார்கள். தூத்துக்குடி கலவரத்தை தூண்டியது மாவட்ட நிர்வாகமே. காவல்துறை மக்களை பயமுறுத்தவே சுட்டது. கலைக்க சுடவில்லை. கூட்டத்தில் தேர்ந்தெடுத்த நபர்களை கொல்லவே சுட்டனர்.
இங்கிலாந்திலிருந்து செயல்படும் வேதாந்தா நிறுவனம் இதே ஸ்டெர்லைட் ஆலையை வேறு எந்த மேற்கத்திய நாடுகளில் துவக்க முடியுமா! அந்த நாட்டு அரசும் மக்களும் சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்கும் எந்த தொழிலையும் அனுமதிக்க மாட்டார்கள். நாமும் நமது நாடும் என்ன குப்பைத் தொட்டியா!

இந்தியாவில் சுற்றுப்புற சூழல் கேடுகளை உருவாக்கும் ஆலைகளை எதிர்த்து நாடெங்கிலும் மக்கள் போராடுகிறார்கள் அங்கும் துப்பாக்கியை வைத்துதான் அரசு அடக்குகிறது. மக்களை அடக்கித்தான் தொழில்கள் வளரவேண்டுமா?
நம்ம நாட்டு பொருளாதார சக்கரம் எப்படிச் சுழல்கிறது என்பதை ரஜினிகாந்த் அறிய வேண்டும்.
டாட்டா நிறுவனம் உலக வங்கியில் கடன் வாங்கி, குஜராத்தில் ஒரு மீனவ கிராமத்தருகில் அனல் மின்நிலையம் கட்டியுள்ளது. இதற்கு இந்தோநேஷியாவிலிருந்து நிலக்கரியை இறக்குமதி செய்கிறது. பலமைல் தூரத்திற்கு நிலக்கரி கன்வேயர் பெல்ட்டில் எடுத்துச் செல்வதாலும் மின் நிலைய புகை கூண்டு வழியாக சிறு துகள்களும் நச்சு வாயுகளும் பரவுவதாலும் தூசி காற்றுமண்டலத்தில் பரவி சுற்றிவாழும் மக்களுக்கு சுவாசகோளாறு ஏற்படுகிறது. அமில மழை பெய்து எரிசலூட்டுகிறது இந்த மின் நிலையம் சூடான நீரை குளிர்விக்காமல் கடலில் கலப்பதாலும் மீன்பிடி தொழிலை நாசமாக்கி வருகிறது. இப்பகுதி மீனகள் அந்நிய செலவாணி சம்பாதிக்கும் லாப்ஸ்டர் (கல்லிரா) வகை மீன்களாகும். அந்த கிராம மக்கள் போராடுகிறார்கள். இந்திய அரசோ குஜராத் அரசோ கண்டு கொள்ளவில்லை. ஆனால் கடன் கொடுத்த உலக வங்கிக்கு மனுப் போடுகிறார்கள் . அது ஒரு ஆய்வுகுழுவை அனுப்பி ஆய்வு செய்ததில் இயற்கையையும் மக்களையும் பாதிக்கிற முறையில் மின் நிலையம் அமைந்துள்ளது. கடன் வாங்கும் பொழுது ஆலை துவங்கினால் சுற்றுச் சூழலுக்கு எவ்வித தீங்கும் ஏற்படுத்தாது என்று உறுதி அழித்துவிட்டு சுற்றுச்சூழலுக்க கேடு விளைவிக்கவில்லை என்று பொய் சொல்லி கடன் வாங்கியதை கண்டு பிடித்தது.
தற்போது டாட்டா நிரவாகம் சொல்வது என்ன?
இயற்கைச் சூழலையும் மக்களையும் கணக்கில் சேர்த்து மின்நிலையம் கட்டுவதற்கு செலவு அதிகமாகும் பராமரிப்பு செலவும் கூடும். அதோடு நிலக்கரி இறக்குமதிக்கு டாலர் கொடுக்க நேர்வதால் ரூபாயின் மதிப்பு வீழ்வதால் கூடுதல் செலவாகிறது 4 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் சுமை உள்ளது. எனவே ஆலையை மூடப் போவதாக மிரட்டுகிறது.
உலகவங்கி கடனுக்கு இந்திய அரசு பொறுப் பேற்றுள்ளதால் உலக வங்கிக்கு இழப்பில்லை ஆனால் நமது பொதுத்துறை வங்கி கொடுத்த கடன்களை டாட்டா நிரவாகம் திருப்பி செலுத்த மறுத்தால் வங்கி தவிக்கும். சென்னையில் வாசவிமின்நிலையமும் மும்பையில் என்ரானும் மூடிட நேர்ந்ததால் தண்டம் அழுதுவருவது போல் அரசு உலகவங்கிக்கு தண்டம் அழவேண்டும் அல்லது மின்நிலையத்தை அரசு எடுக்க வேண்டும். மீனபிடித் தொழிலையும் சுற்றுப்புற சூழலையும் பேணுகிற முறையில் மின்நிலையத்தை நவீன தொழில்நுட்பங்களை புகுத்தி இயக்க வேண்டும். அல்லது அந்த கிராம மக்களை அங்கிருந்து விரட்டவேண்டும்.
ரஜனி சொல்கிறார் ஜெயலலிதா வை முன்மாதிரியாக கொண்டு மக்களை அடக்க வேண்டும் என்கிறார். சினிமா சூட்டிங்கிலெ காலத்தை ஓட்டியதால் நாட்டு நடப்பு தெரியவில்லை.
ஜெயலலிதாவின் ஊழல் நிரவாக நடைமுறையால் சிரிபெரும்புதூர் நோக்கியா மூடப்பட்டது அதைத் தொடர்நது பாக்ஸ்கானையும் மூடி 15 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்தனர். இந்திய மக்களைக் கண்டு அந்நிய முதலாளிகள் பயப்படவில்லை. மத்திய மாநில அரசுகளின் ஊழல் முறைகேடுகளைக் கண்டே முதலாளிகள் பயப்படுகிறார்கள். அதோடு ரூபாயின் மதிப்பு கட்டுக்குள் இல்லாமல் தொடர்ந்து சரிந்துவருவதால் முதலீடு செய்ய பயப்படுகிறார்கள்.
தூத்துக்குடிபற்றிய அறியாமையை ரஜனி வெளிப்படுத்துகிறார்
தூத்துக்குடி மாவட்டத்தில் மத்திய அரசின் மின் அமைச்சக தகவல்படி பெரிய நடுத்தர சிறிய தொழில்கள் 10078 பதிவு செய்யப்பட்டு இயங்குகிறது. இதில் 17 பெரிய தொழிற்சாலைகள் இயங்குகின்றன. அவைகளில் 8 தொழிலகங்கள் ரசாயனங்களை உற்பத்தி செய்வன அல்லது ஸ்டெர்லைட் தொழில்போல் தாதுக்களில்லிருந்து உலோகங்களை பிரித் தெடுப்பன. தவிர அனல்மின்நிலையம் அணு உலைகளுக்கு தேவையான கனநீர் உற்பத்தியகமும் உள்ளது. சேதுகால்வாய் கட்டப்பட்டிருந்தால் தூத்துக்குடி துறைமுகம் முதல் தரமான துறைமுகமாக ஆகியிருக்கும்.
ஸ்டெர்லைட் ஆலை உற்பத்தி செய்யும் காப்பர் பெரும்பகுதி ஏற்றுமதி ஆகிறது. அந்நிய நிறுவனம் என்பதால் இங்கே வாங்க வேண்டுமானாலும் டாலர் கொடுக்காமல் வாங்க இயலாது. இந்தியாவின் காப்பர் தேவையில் 90 சதம் இறக்குமதி மூலமே மீதி 10சதம் ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் என்ற பொதுத்துறை நிறுவனம் தருகிறது. எனவே ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதால் நட்டம் எதுவும் மக்களுக்கில்லை. தூத்துக்குடி சுத்தமாவதோடு நமது பொருளாதாரத்தின் அந்நிய செலவாணி சுமையும் குறையும் ஆனால் அதன் பங்குகளை வாங்கியிருக்கும் இந்திய பணக்காரர்களுக்கு கொஞ்சம் வலிக்கும். அந்த வலி ரஜனிக்கும் இருக்கிறதோ என்ற சந்தேகம் நமக்கிருக்கிறது.
– Meenatchi Sundaram

Leave a Reply

You must be logged in to post a comment.