திருப்பூர்,
திருப்பூரில் பள்ளி மாணவியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிளஸ்-1 மாணவியை கடந்த செவ்வாய்கிழமை முதல் காணவில்லை என அவருடைய பெற்றோர் திருப்பூர் வடக்கு 15- வேலம்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் காணாமல்போன மாணவி திருச்சியில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினர் திருச்சி சென்று அந்த மாணவியை மீட்டு விசாரணை நடத்தினர். இதில், மாணவியை திருப்பூர் ஆத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பனியன் தொழிலாளி நாகராஜ் (22) என்பவர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 29ம் தேதி மாணவி மட்டும் வீட்டில் தனியாக இருப்பதை தெரிந்துகொண்ட நாகராஜ், அவரிடம் ஆசைவார்த்தை கூறி காங்கயத்திற்கு கடத்தி சென்றுள்ளார். இதன்பின்னர் அங்கிருந்து தனது நண்பர்களான ஜீவா (20), மணிகண்டன் (20) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் துணையுடன் திருச்சிக்கு கடத்தி சென்றுள்ளனர். அங்கு வைத்து மாணவியை, நாகராஜ் பாலியல் பலாத்காரம் செய்ததுவிசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக நாகராஜ் மீதும், நாகராஜிற்கு உதவி செய்ததாக ஜீவா, மணிகண்டன் மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்தனர். இதன்பின் கைது செய்யப்பட்ட நாகராஜ், மணிகண்டன், ஜீவா ஆகியோர் கோவை மத்திய சிறையிலும், 17 வயது சிறுவன் சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் அடைக்கப்பட்டனர்

Leave a Reply

You must be logged in to post a comment.