திருப்பூர்,
தமிழை ஆட்சி மொழியாக்கக்கோரி திருப்பூர் அருகே முதியவர் ஒருவர் கடந்த 70 நாட்களாக மவுனப் போராட்டம் நடத்தி வருகிறார்.

திருப்பூர் மங்கலம் சாலை கருவம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் க.இரா.முத்துசாமி (80). இவர் அவிநாசி சாலையில் உள்ள திருமுருகநாத சாமி கோவில் பனமரத்தடியில் உறுதிமொழியேற்று கடந்த மார்ச் மாதம் 23 ஆம் தேதி முதல் யாரிடமும் பேசாமல் மவுன போராட்டம் நடத்தி வருகிறார். இதுதொடர்பாக அவரது துணைவியார் மு.சுப்புலட்சுமியிடம் கேட்டபொழுது, ஐயா தவமிருப்பது எல்லாம் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக தான். தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் தமிழை பயிற்று மொழியாக்க வேண்டும். இன்றைய தலைமுறையினரிடம் தமிழில் பேசவும், எழுதவும் தடுமாற்றம் உள்ளது. பள்ளிகளில் முறையான தமிழ் கல்வி இல்லாமையே இதற்கு காரணம். ஆகவே, வீடுகளில் தமிழில் பேசுவது துவங்கி எழுதுவது வரை தமிழ் எளிமையாக வர வேண்டும். அந்த அளவிற்கு தமிழை ஊக்குவிக்க வேண்டும் என அவர் கூறினார். அப்போது, இதனை ஆமோதிக்கும் வகையில் முத்துசாமி தலையசைத்தார். முன்னதாக, தமிழை செம்மொழியாக அறிவிக்கக்கோரி முன்பு தமிழ் அறிஞர்கள் தில்லியில் நடத்திய உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் முதியவர் முத்துச்சாமி பங்கேற்றதோடு, தமிழ் மொழி கல்வியை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் பிரச்சார இயக்கமும் மேற்கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Leave A Reply

%d bloggers like this: