புதுதில்லி:
மூன்று மில்லியன் டன் அளவிலான சர்க்கரையை கொள்முதல் செய்து சேமித்து வைக்க அரசாங்கம் யோசித்து வருவதாக மத்திய உணவுத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் கூறியுள்ளார்.

இதுகுறித்து ஏசியன் ஏஜ் ஊடகத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “சர்க்கரை ஆலைகள் கரும்பு உற்பத்தியாளர்களுக்கு வழங்க வேண்டிய ரூ.22,000 கோடி நிலுவைத் தொகையை அளிக்க ஏதுவாகச் சர்க்கரை ஆலைகளிடமிருந்து சர்க்கரையைக் கொள்முதல் செய்ய அரசு திட்டமிட்டு வருகிறது. இதன்படி, 3 லட்சம் டன் அளவிலான சர்க்கரையை கொள்முதல் செய்து சேமிக்கத் திட்டமிட்டுள்ளோம். இதுகுறித்து மற்ற துறைகளிடமும் கலந்து விவாதித்து முடிவெடுக்கப்படும். பெட்ரோலியத் துறையும் சர்க்கரை ஆலைகளுக்கு எத்தனால் விஷயத்தில் உதவுவதற்குத் திட்டமிட்டுள்ளது. சர்க்கரைக்கான குறைந்தபட்ச ஆலை விலையைக் கிலோ ஒன்றுக்கு ரூ.30 ஆக நிர்ணயிக்க வேண்டுமென நிதியமைச்சகத்திடம் வரைவறிக்கை ஒன்றையும் தாக்கல் செய்துள்ளோம்” என்றார்.சர்க்கரை உற்பத்தியும், இறக்குமதியும் அதிகரித்து உள்ளதால் நாளுக்கு நாள் உள்நாட்டில் விலை வீழ்ச்சியடைந்து வருகிறது. இதைக் காரணம் காட்டி மறுபுறம் கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை கூட அளிக்காமல் சர்க்கரை ஆலைகள் ஏமாற்றி வருகின்றன. இதனிடையே, இம்மாதத் தொடக்கத்தில் கரும்பு விவசாயிகளுக்குக் குவிண்டால் ஒன்றுக்கு 5.5 ரூபாய் மானியம் வழங்க ஒன்றிய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது. அதேபோல இறக்குமதியைக் கட்டுப்படுத்தும் வகையில் இறக்குமதி வரி இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில் ஏற்றுமதி வரியைக் குறைப்பது போன்ற நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

You must be logged in to post a comment.