திருப்பூர்,
திருப்பூரில் பெண் குழந்தைகள் கல்வியில் சாதனை படைத்து வந்த ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி தற்போது நிர்வாகத்தின் அலட்சியத்தால் சரிவைச் சந்தித்து வருகிறது. இனியாவது தனது பழையசிறப்பை மீண்டும் பெற நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

திருப்பூர் தியாகி குமரன் நினைவகத்தின் பின்புறம் அமைந்திருக்கும் ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப் பள்ளி கடந்த 2009 ஆம் ஆண்டு 7300 மாணவிகளுடன் இந்திய அளவில் அதிக மாணவிகள் படிக்கக்கூடிய பள்ளியாக விளங்கியது. கடந்த 2005ஆம் ஆண்டு மாநில அரசின் சுற்றுச்சூழல் செயல் வீரர் விருது பெற்ற இப்பள்ளி இப்போது சுற்றுச்சூழல் மாசடைந்து கேட்பாரற்ற நிலையில்உள்ளது. மேலும், இப்பள்ளியில் 2015 ஆம் ஆண்டு முதல் 10 ஆம் வகுப்பு வரை ஆங்கில வழிவகுப்புகள் கூடுதலாக தொடங்கப்பட்டன. 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளிலும் 5க்கும் மேற்பட்ட சுயசார்பு வகுப்புகள் சுயசார்பு முறையில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தால் தொடங்கப்பட்டன. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்த சுயசார்பு வகுப்புகளில் சேர்ந்து படிக்கும் மாணவிகளிடம் வசூலிக்கும் தொகைக்கு உரிய ரசீது தரப்படுவதில்லை. இந்த தொகை பல லட்சம் அளவுக்கு கிடைக்கும். இதில் முறைகேடு நடக்கக்கூடும் என்ற ஐயம் இருப்பதாக முன்னாள் பெற்றோர் ஆசிரியர் கழகத்தார் கூறுகின்றனர்.

இதேபோல், மாணவிகளுக்கு மிதிவண்டி நிறுத்தம் ஏற்படுத்த தேவையான இரும்பு சாமான்கள் வைக்கப்பட்டிருந்ததை கடந்த ஆண்டு வேன் மூலம் வேறு எங்கோ எடுத்துச் சென்றுவிட்டனர். அவற்றை திரும்பக் கொண்டு வந்து மிதிவண்டி நிறுத்தம் ஏற்படுத்த வேண்டும் என்றும் மாணவிகள் எதிர்பார்க்கின்றனர். இப்பள்ளி மாணவிகளின் கணினி கல்விக்காக முன்னாள் மாணவி மூலம் போர்டு அறக்கட்டளை 50 மடிக்கணினிகளை வழங்கவும், ஜிஆர்டி தங்க மாளிகை ரூ.10லட்சம் நிதி வழங்கவும் முன்வந்ததை பள்ளி நிர்வாகத்தார் பயன்படுத்திக் கொள்ள மறுத்துவிட்டனர். இது மாணவிகளுக்கே பாதிப்பாகும்.இப்போதும் ஏற்றுமதியாளர் சங்கம் இப்பள்ளிக்கும், பழனியம்மாள் பள்ளிக்கும் சேர்த்து ரூ.30 லட்சம் மதிப்பில் கழிப்பறைகள் கட்டித் தர முன்வந்திருப்பதாகவும் தெரிகிறது. எனவே இதை நிராகரிக்காமல் பள்ளி நிர்வாகம் ஏற்க வேண்டும். இப்பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர்கள், மாணவிகள் நிகழ்த்திய சாதனைகள், முன்னாள் குடியரசுத் தலைவர், முன்னாள் முதல்வர்களிடம் பரிசு பெறுதல் போன்ற படங்கள் இப்பள்ளிக்கு புதிதாக வரும் மாணவிகளுக்கு ஊக்கத்தை அளிப்பதாக இருக்கும். அவை காட்சிக்கு உரியஇடத்தில் இருந்ததை தற்போதைய நிர்வாகத்தார் அகற்றிவிட்டனர். மீண்டும் முகப்புப் பகுதியில் வைக்க வேண்டும்.

அதேபோல் சுற்றுச் சூழல்பாதுகாப்பு மற்றும் அழகியலுடன் அமைக்கப்பட்டிருந்த பள்ளி வளாகம் சீர்குலைந்து காணப்படுகிறது. அரிய வகை மரங்கள், செடி, கொடிகள், மூலிகைகளுடன் 900 மரங்கள் சூழ பிருந்தாவனமாக இருந்த பள்ளி, தற்போது பராமரிப்பு இல்லாததால் குப்பை கூளமாக மாறியிருக்கிறது. பள்ளி வகுப்பறைகள், கழிப்பறைகள் போதிய பராமரிப்பு இல்லாமல் சுகாதார சீர்கேடான நிலையில் இருக்கிறது. மேலும், 6 ஆயிரம் மாணவிகள் அமரக்கடிய வகையில் அமைக்கப்பட்ட கலையரங்கத்தை சீரமைக்க வேண்டும். சட்டப் போராட்டம் நடத்தி மீட்கப்பட்ட 1 ஏக்கர் பள்ளி இடத்தைப் பாதுகாக்க வேண்டும். கடந்த காலத்தில் பெருமைகள் பல பெற்ற பள்ளி தற்போது நிர்வாகத்தின் அலட்சியம், அக்கறையின்மையால் பொலிவிழந்து வருகிறது. மாணவியர் எண்ணிக்கையும் படிப்படியாகக் குறைந்து வருகிறது. இத்துடன் பள்ளி மாணவிகளுக்காக பள்ளி வரை இயக்கப்பட்ட பேருந்துகள் தற்போது குமரன் சிலை நிறுத்தம் அருகிலேயே நின்று செல்லுமாறு செய்யப்பட்டதால் போக்குவரத்து நெருக்கடியும், மாணவிகளுக்குப் பாதுகாப்பு இல்லாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

இதுபோன்ற குறைபாடுகளைக் களைந்து மீண்டும் இப்பள்ளி சிறப்புடன் செயல்படுவதுடன், பனியன் நகரின் ஏழை வீட்டுப் பெண் குழந்தைகளின் கல்விக்கு வாய்ப்பேற்படுத்தித் தர வேண்டும் என ஜெய்வாபாய் பள்ளியின் முன்னாள் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ஆ.ஈசுவரன் மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் எழுதியிருந்தார். தற்போது பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்தவர் பணி ஓய்வு
பெற்றுச் செல்லும் நிலையில் புதிய தலைமை ஆசிரியர் பொறுப்பேற்க இருக்கிறார். இந்த நிலையில் பள்ளியின் சீர்குலைவை மாற்றி புதுப்பொலிவுடன், கடந்த காலத்தில் இழந்த பெருமையை மீட்டமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதிய கல்வியாண்டு தொடங்கும்நிலையில் மாணவியரும், பெற்றோரும் எதிர்பார்க்கின்றனர். மாவட்ட நிர்வாகமும், கல்வித்துறையும் இதை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்குமா என்பதே இப்போதைய கேள்வி.

(ந.நி)

Leave a Reply

You must be logged in to post a comment.