திருப்பூர்,
ஜிஎஸ்டி, ஏற்றுமதிக்கான மானியம் குறைப்பு, பண பரிமாற்றப் பிரச்சனை போன்றவற்றால் பாதிக்கப்பட்டு சரிந்து கொண்டிருக்கும் பின்னலாடை வர்த்தகம், நூல் விலை தொடர்ந்து உயர்வதன் காரணமாக முழுவதும் நசுங்கிவிடும் அபாய கட்டத்தில் இருக்கிறது என்று திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்கம் (டீமா) கவலை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக டீமா சங்கத் தலைவர் எம்.பி.முத்துரத்தினம் வெள்ளியன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் மொத்த நூற்பாலைகளில் 55 சதவிகிதம் தமிழகத்தில்தான் இயங்குகின்றன. ஆனால் இந்தியாவின் தேவையைக் கருத்தில் கொள்ளாமல் ஏற்றுமதி விகிதத்தை அதிகரிப்பதற்காக தற்போது பஞ்சு அதிக அளவில் ஏற்றுமதியாகிறது. அத்துடன் நூலும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் நூற்பாலைகளுக்கு பஞ்சு வரத்து குறைவதாலும், நூல் ஏற்றுமதி காரணமாகவும் இங்கு நூல் விலையினை நூற்பாலை உரிமையாளர்கள் தொடர்ந்து உயர்த்தி வருகின்றனர். இதனால் பின்னலாடை தொழில் நசுங்கிவடும் அபாய கட்டத்தில் இருக்கிறது.

பஞ்சு ஏற்றுமதி செய்வதைக் காட்டிலும் ஆடைகளை தயாரித்து ஏற்றுமதி செய்தால் அந்நியச் செலாவணி அதிகமாகக் கிடைக்கும் என்பதுடன், லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். மேலும் பஞ்சு, நூல் விலை உயர்வு காரணமாக நெசவு மற்றும் விசைத்தறி தொழில் உள்பட அனைத்து ஜவுளித் துறையும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. திருப்பூர் மட்டுமின்றி ஈரோடு, கம்பம், கரூர், சேலம் போன்ற ஊர்களிலும் ஜவுளி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படும். குறிப்பாக, திருப்பூரில் உள்ள 10 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாவதுடன், திருப்பூர் உற்பத்தியாளர்கள் தொழில் செய்யமுடியாத நிலைக்குத் தள்ளப்படுவர். எனவே இப்பிரச்சனையில் முதல்வர் தலையிட்டு பிரதமரை நேரில் சந்தித்து இதற்கு நிரந்தரத் தீர்வினை ஏற்படுத்திக் கொடுத்தால் தான் பின்னலாடைத் தொழிலைக் காப்பாற்ற முடியும். மேலும் தமிழக அரசு தேவையான பஞ்சினை மத்திய அரசிடம் இருந்து நேரடிக் கொள்முதல் செய்து சீரான விலையில் நூற்பாலைகளுக்கு வழங்கவும், நூல் விலை அடிக்கடி உயர்வதைத் தடுக்கவும் ஒரு சிறப்புக் குழு அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என டீமா சார்பில் கேட்டுக் கொள்வதாக அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.