கோவை,
உலகத் தமிழ் இணைய மாநாடு வரும் ஜூலை 6, 7, 8-ம் தேதிகளில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது.

வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்) சார்பில் 17 ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு, வேளாண் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறுகிறது. இதுகுறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் கு.ராமசாமி, உத்தமம் நிறுவன இணைத் தலைவர் மணியம் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கலிபோர்னியாவில் 1999-ல் பதிவு செய்யப்பட்ட உத்தமம் தன்னார்வ அமைப்பில், சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்த அமைப்பு சார்பில் ஆண்டுதோறும் உலகத் தமிழ் இணைய மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. இதன் 17-வது உலகத் தமிழ் இணைய மாநாடு ‘அறிவுசார் தமிழ்த் தேடுபொறிகள்’ என்ற தலைப்பில் கோவையில் ஜூலை 6 ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த மாநாடு, ஆய்வரங்கம், மக்கள் அரங்கம், கண்காட்சி அரங்கம் என்ற 3 பிரிவுகளில் நடைபெற உள்ளது. இந்த ஆய்வரங்கில் இயல்மொழிப் பகுப்பாய்வு, இயந்திர மொழிபெயர்ப்பு, தமிழ் எழுத்துருப் பகுப்பான்கள், தமிழ் பேச்சுப் பகுப்பான்கள், தேடுபொறிகள், தமிழ்த் திறனாய்வு நிரல்கள், மின்னகராதி அமைத்தல், ஒளியெழுத்துணரி, கையெழுத்துணரி, கையடக்கக் கணினிகளில் தமிழ்ப் பயன்பாடு, செயலிகளைத் தரப்படுத்தல், இணையவழி தமிழ் கல்வி, இணையப் பாதுகாப்பு, செல்போனுக்கான தொழில்நுட்பம், தமிழ்மொழி வழிக் கற்றலில் உள்ள தடைகள், தீர்வுகள் உள்ளிட்ட தலைப்புகளில் 70-க்கும் மேற்பட்ட கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட உள்ளன.

மக்கள் அரங்கில் செல்போன்களுக்கான செயலிகள், ரோபோடிக்ஸ் தொழில்நுட்பம், 3-டி பிரிண்டிங், குறுஞ்செயலி உருவாக்கப் பயிற்சி, இணையம் சார் பயிற்சி, மொழியியல், வேகக்கணிமை தொழில்நுட்பம், வலைப்பதிவு உருவாக்கம் மற்றும் கணினிசார்ந்த பயிற்சிகள் வழங்கப்படஉள்ளன. கண்காட்சி அரங்கில், மழலையர் பள்ளி முதல் பல்கலை. மாணவர்கள் வரையிலானோர் பயன்பெறும் வகையில், கணினி மற்றும் அதைச் சார்ந்த தொழில்நுட்பக் கருவிகள், தமிழ் மென்
பொருட்கள், தமிழ் கற்க உதவும் ஒலிக் குறுவட்டு, காணொளிக் குறுவட்டு, நூல்கள், பார்வையிழந்தோருக்கான பிரெயில் புத்தகங்க், கணினி தமிழ் வளர்ச்சி குறித்த நூல்களின் தொகுப்பு ஆகியவை காட்சிப்படுத்தப்பட உள்ளன.இந்த மாநாட்டில் பேராசிரியர்கள் மு.அனந்தகிருஷ்ணன், பொன்னவைக்கோ மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட தமிழ்க் கணினி வல்லுநர்கள் பங்கேற்று, கணினி வழி தமிழ்க் கல்வி, இணையம் வழி தமிழ் இலக்கியம், கையடக்கக் கருவிகளில் தமிழ்ப் பயன்பாடு, அறிவுசார் தமிழ்த் தேடுபொறி குறித்து பேசுகின்றனர். மாநாட்டின் முடிவில் கணித்தமிழ் மேம்பாட்டுக்கான திட்டங்கள் வகுக்கப்பட உள்ளன. ஏற்கெனவே சிங்கப்பூர், மலேசியா, ஜெர்மனி, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் தமிழ் இணைய மாநாடு நடைபெற்றது.

கோவையில் இரண்டாவது முறையாக இந்த மாநாடு நடைபெற உள்ளது. இதையொட்டி, பொதுமக்கள், மாணவர்களுக்குப் பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகிறது. தமிழ் இணையத்துக்குப் பங்களிப்பு செய்தோருக்குப் பரிசுகளும் வழங்கப்பட உள்ளன. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.