திருப்பூர்,
காவல்துறையினர் எனக்கூறி தொழில்அதிபரை கடத்தி ஒன்றரை லட்சம் ரூபாயை பறித்த கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர். மதுரை மாவட்டம், அழகப்பா நகரை சேர்ந்தவர் ராஜா சண்முகம். இவர் நேஷனல் அக்ரிகல்சர் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் என்ற பெயரில் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிறுவனம் மூலம் கடன் கொடுப்பது, வங்கிகள் மூலம் கடன் பெற்று கொடுப்பது போன்ற பணிகள் மேற்கொண்டு வருகிறார். மேலும், தங்களை தொடர்பு கொண்டு அழைப்பவர்களின் இடங்களுக்கே நேரடியாக சென்று ஆவணங்களை பார்வையிட்டு கடன் கொடுத்தும் வருகிறார்.

இந்நிலையில் புதனன்று இவரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட நபர் ஒருவர், ரூ.5 கோடி கடன் வேண்டும் என்று கூறியுள்ளார். இதன்பின்னர் ஆவணங்களை பார்க்க ஈரோடு மாவட்டத்திலுள்ள திண்டல் பகுதிக்கு வருமாறு கூறியுள்ளார். இதையடுத்து ராஜா சண்முகம், அவரது நிறுவனத்தில் பணியாற்றி வரும் சைமன் மற்றும் கார் ஓட்டுநர் ஆகிய மூவரும் மதுரையில் இருந்து கார் மூலம் ஈரோடு சென்றுள்ளனர். அங்கு, காரில் காத்திருந்த நபர் தனது தோட்டத்திற்கு போய் பேசிக்கொள்ளலாம் என்று அழைத்து சென்றுள்ளார். இதன்பின் திண்டலிலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு ஒதுக்குப்புறமான தோட்டத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு காரைவிட்டு இறங்கிய ராஜா சண்முகம் உள்ளிட்ட மூவரையும் சுற்றி வரழைத்த 10 பேர் கொண்ட கும்பல் தங்களை காவல்துறையினர் என கூறியுள்ளனர். இதன்பின்னர் அவர்களை பிடித்து வைத்துக் கொண்டு ரூ.1 கோடி பணம் கொடுக்கும்படி மிரட்டியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த மூவரும் அங்கிருந்து தப்பியோட முயன்றுள்ளனர்.

இதையடுத்து அக்கும்பலைச் சேர்ந்தோர் மூவரையும் சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும், ராஜா சண்முகம் அணிந்திருந்த தங்க நகைகள் மற்றும் காரையும் பறித்து கொண்டனர். இதைத்தொடர்ந்து மூவரையும் விடுவிக்க வேண்டுமானால் ஒரு கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என்று பேரம் பேசியுள்ளனர். இதன்பின் 75 லட்சம், 50 லட்சம் எனகடைசியாக ஒன்றரை லட்சத்தை இறுதி செய்துள்ளனர். இதையடுத்து ராஜா சண்முகம், தனது நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றும் ராமநாதனை தொடர்புகொண்டு ஒள்றரை லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு சம்பவ இடத்திற்கு வருமாறு கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து மதுரையில் இருந்து திண்டலுக்கு வந்த ராமநாதன், கடத்தல் கும்பலைச் சேர்ந்தோரிடம் ஒன்றரை லட்சம் பணத்தை கொடுத்துவிட்டு ராஜா சண்முகம் உள்ளிட்ட மூவரையும் மீட்டு வந்துள்ளார். இதன்பின் படுகாயமடைந்த மூவரும் திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்ப பதிவு செய்து மர்ம கும்பலைச் சேர்ந்தோரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.