சேலம்,
கச்சநத்தம் வன்முறை வழக்கை 60 நாளில் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய ஆதிதிராவிடர் ஆணையத் தலைவர் முருகன் சேலத்தில் தெரிவித்தர்.

மத்திய, மாநில அரசு திட்டங்கள் முறையாக ஆதிதிராவிட மக்களுக்கு செல்கிறதா என்பது தொடர்பான அனைத்துத் துறைஅதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் சேலத்தில் நடைபெற்றது. இதில் தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்தின் தலைவர் முருகன் பங்கேற்று ஆய்வு மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுயில், மத்திய அரசின் கிராம சுராஜ் அபியான் திட்டம் உள்ளிட்ட ஏழு திட்டங்கள் சேலத்தில் 100 சதவிகிதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் மீதான 25 வழக்குகள் விசாரணையில் உள்ளது. அதை உடனடியாக விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்தின் ஆய்வுக்கு பின்னர் தமிழக அரசுஆதிதிராவிட மக்களின் நலனுக்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.

சேலம் மற்றும் நெல்லையில் உண்டு உறைவிட பள்ளி கட்ட தமிழக அரசு அறிவித்துள்ளது.சேலத்தில் ஆயிரம் ஏக்கர் பஞ்சமி நிலத்தை 900க்கும் மேற்பட்டோர் ஆக்கிரமித்துள்ளனர். எனவே 15 நாளில் ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்தி பயனாளிகளுக்கு வழங்க அறிவுறுத்தி உள்ளோம். மேலும், சிவகங்கை கச்சநத்தம் கலவரத்தை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளோம். இந்த ஆய்வில் இது திட்டமிட்ட வன்கொடுமை என தெரியவந்துள்ளது. தொடர்ந்து அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 4 பேர் சரணடைந்துள்ளனர். மீதமுள்ளவர்களை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வருகின்றனர். வன்முறையைத் தொடர்ந்து சிவகங்கை மாவட்ட கண்காணிப்பாளரை தமிழக அரசு பணியிடை நீக்கம் செய்துள்ளது. இந்த வழக்கை உடுமலை சங்கர் வழக்குபோல் 60 நாளில் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

இதேபோல், தூத்துக்குடி கலவரத்தில் ஆதிதிராவிடர் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். விரைவில் தூத்துக்குடியில் சென்று உயிரிழந்தவர்கள் குடும்பம் மற்றும் பாதிக்கப்பட்ட பொதுமக்களை நேரில் சென்று விசாரிக்க இருக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: