தீக்கதிர்

ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து – 3 பேர் பலி

பெரம்பலூர் அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு நேற்று இரவு தனியார் ஆம்னி பேருந்து ஒன்று 40 பயணிகளுடன் புறப்பட்டது. இன்று அதிகாலை திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூரை அடுத்த விஜயகோபாலபுரம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாரத விதமாக பேருந்து கட்டுப்பாட்டை இழந்தது. அப்போது சாலையின் நடுவில் இருந்த தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்து நிலை தடுமாறி நடுரோட்டில் கவிழ்ந்ததில், முகேஷ் என்ற 5 வயது சிறுவன் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் விபத்தில் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய 13 பேர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
இதைத்தொடர்ந்து காவல் துறையினர் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.