கோவை,
சுயஉதவிக்குழுக்களின் மூலம் பெண்களுக்கு கடன் அளிக்கப்பட்டதாக வரவு வைத்து வங்கி ஊழியர்களே கையாடல் செய்து வந்ததாக எழுந்த புகாரில் உண்மை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வங்கி ஒருங்கினைப்புக்குழுவில் புகார் அளிக்க மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்துள்ளார்.

கோவை நீலாம்பூரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் மகளிர் சுய உதவிக்குழுவில் உள்ள பெண்களின் வங்கி கணக்கில், அவர்களுக்கு தெரியாமல் பல கோடி ரூபாய் கடன் கொடுத்ததாக பொய் கணக்கு காட்டப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து கடந்த மாத இறுதியில் மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் செல்வராஜ் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் ஒவ்வொரு குழுவின் கணக்கிலும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் சுமார் ரூ.45 லட்சம் வரை கடன் கொடுத்து, பின்னர்மீண்டும் வசூலிக்கப்பட்டுள்ளதாக மோசடியாக பதிவுசெய்யப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து வங்கி தரப்பினர் கூறுகையில், வங்கி ஊழியர்கள் எதற்காக இதை செய்தார்கள் என்பது தெரியவில்லை.

மோசடி பதிவில் ஈடுபட்ட வங்கி கிளை மேலாளர்ஓரிரு நாட்களில் பணியிட மாற்றம் செய்யப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மகளிர் திட்ட அலுவலர் செல்வராஜ் கூறும்போது, நீலாம்பூரில் 36 மகளிர் சுய உதவிக்குழுக்கள் செயல்பட்டு வருகிறது. இவர்களின் வங்கி கணக்கு புத்தகத்தில் பல மாதங்களாக பதிவு செய்யாமல் இருந்துள்ளது. இதனை பயன்படுத்தி வங்கி கிளை மேலாளர், மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு தகவல் தெரிவிக்காமல் அவர்களது வங்கி கணக்கில் பண பரிவர்த்தனை செய்துள்ளார். மொத்தம் உள்ள 36 குழுக்களில் 20 குழுக்களில் உள்ள உறுப்பினர்களின் வங்கி கணக்கில் மோசடி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என அவர் கூறினார்.  இதற்கிடையே, இந்த மோசடி பதிவு குறித்து மாநில அளவிலான வங்கி ஒருங்கிணைப்பு குழுவிற்கு புகார் அளிக்க மாவட்ட ஆட்சியர் ஹரிகரன் பரிந்துரைத்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: