சேலம்,
வங்கி ஊழியர்கள் வியாழனன்று 2 ஆவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால் வங்கி பரிவர்த்தனைகள் மற்றும் ஏடிஎம் சேவைகள் பாதிக்கப்பட்டன. வருவாய் அடிப்படையில் அல்லாமல், வேலை அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்பட வேண்டும். கோடிக்கணக்கில் கடன் பெற்று திருப்பி செலுத்தாத பெரும் நிறுவனங்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பொதுத்துறையை வங்கிகளை தனியாருக்கு தாரை வார்க்கக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து வங்கி ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இரண்டு நாள் வேலைநிறுத்தப் போராட்டம் புதனன்று துவங்கியது. இப்போராட்டம் வியாழனன்று இரண்டாவது நாளாக தொடர்ந்தது.

மேலும், இந்த வேலைநிறுத்த போராட்டத்தின் கோரிக்கைகளை விளக்கி சேலம் கோட்டை கனரா வங்கி முன்பு வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுவாமிநாதன் தலைமை வகித்தார். இதில் கூட்டமைப்பின் நிர்வாகிகள் நாகராஜன், ஸ்ரீதர், சங்கர், சிங்காரம் உள்ளிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

கோவை:
கோவையில் கடந்த இரு நாட்களாக நடைபெற்ற வங்கி ஊழியர்கள் போராட்டம் காரணமாக 420வங்கி கிளைகள் செயல்படவில்லை. இதனால் கோடிக்கணக்கான ரூபாய் பரிவர்த்தனைகள் முடங்கியது. மேலும், இந்தவேலை நிறுத்த போராட்டம் காரணமாக ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்பும் பணிகளும் பாதிக்கப்பட்டது. இதனால்,கோவை மாவட்டத்தில் உள்ளசுமார் 1,200 ஏடிஎம் இயந்திரங்களில் பெரும்பாலான இயந்திரங்களில் பணம் நிரப்பப்படவில்லை. இதன்காரணமாக வாடிக்கையாளர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர்.

Leave A Reply

%d bloggers like this: