திருப்பூர்,
திருப்பூர் மாவட்டத்தில் வங்கி ஊழியர்களின் 2வது நாள் வேலை நிறுத்தம் காரணமாக ரூ.2,000 கோடிக்கான பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது. வங்கி ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பாக வங்கி ஊழியர்கள் சங்கங்களுடன், மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இதில் வருவாய் அடிப்படையில் ஊழியர்களுக்கு 2 சதவிகித ஊதிய உயர்வு வழங்க அரசு முன் வந்தது. ஆனால், மற்ற அரசு துறைகளை ஒப்பிடுகையில் தங்களுக்கு குறைவான சம்பளம் வழங்கப்படுவதாக வங்கி ஊழியர் சங்கங்கள் புகார் தெரிவித்தது.

எனவே, வேலை அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்பட வேண்டுமே தவிர, வருவாய் அடிப்படையில் சம்பள உயர்வு விகிதம் நிர்ணயிக்க கூடாது என வங்கி ஊழியர்கள் சங்கங்கள் வலியுறுத்தியது. இதில் உடன்பாடு ஏற்படாத நிலையில் அனைத்து வங்கி ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 48 மணிநேர வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது. அதன்படி, புதனன்று வேலை நிறுத்தம் தொடங்கி வியாழனன்று தொடர்ந்து வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான வங்கிகளில் பணிகள் பாதிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் 372 வங்கி கிளைகள் செயல்படவில்லை. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை நிறுத்தம் போராட்டத்தில் பங்கேற்றனர். இதன் காரணமாக உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது. மேலும், காசோலை, மின்னணு பரிவர்த்தனை என இரு நாளில் ரூ.2,000கோடிக்கானபரிவர்த்தனை பாதிக்கப்பட்டு உள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.