சென்னை, மே 29-
சிவகங்கை மாவட்டம் கச்சநத்தம் கிராமத்தில் சாதி ஆதிக்கச்சக்தியினரின் சாதி வெறித்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் கச்சநத்தம் கிராமத்தில் 50 தேவேந்திரகுல வேளாளர் குடும்பங்களும் சாதிஆதிக்கச் சமூகத்தின் 5 குடும்பங்களும் வசித்து வருகின்றனர். இதில்சாதி ஆதிக்கச் சமூகத்தின் சுமன் என்பவரின் குடும்பம் மட்டும் கஞ்சாவியாபாரம் செய்து வருகிறது. இதனை எதிர்த்து அங்கு வாழும்பட்டியலின மக்கள் காவல்துறைக்கு புகார் கொடுப்பதும் , காவல்துறை இதில் உறுதியான நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டும் நிலையும் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் திங்களன்று கச்சநத்தம் கிராமத்தில் திருவிழா முடிந்த நிலையில் சாதி ஆதிக்கச் சக்தியினர் வெளியூரிலிருந்து ஆட்களை அழைத்து வந்து பட்டியலினமக்கள் மீது கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதில் அறிவழகன் மகன் சண்முகநாதன் (39), கோனான் மகன் ஆறுமுகம் (65) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் சுகுமாறன், தனசேகர், மலைச்சாமி உள்ளிட்ட ஆறு பேர் படுகாயம்அடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டுள்ளனர். இறந்தவர்களின் உடல்களும் மதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
இறந்தவர்களின் உடலை வாங்காமல் மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகே மூன்று நாள்களாக பாதிக்கப்பட்ட மக்கள் போராடி வருகிறார்கள். இவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து சிவகங்கை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ குணசேகரன், சி.பி.எம் கட்சி சார்பாக கனகராஜ், சிவகங்கை மாவட்ட சி.பி.எம் செயலாளர் கந்தசாமி, மள்ளர் கழகம் அண்ணாமலை, முன்னாள் எம்.எல்.ஏ முருகவேல் ராஜ், மூவேந்தர் புலிப்படை பாஸ்கரன் போன்றவர்கள் ஒருங்கிணைப்பு குழுவாக இருந்து இப்போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இப்படுகொலை சம்பவத்தைக் கண்டித்து வி.சி.க, புதிய தமிழகம், தமிழ்புலிகள் கட்சியினரும் ஆதரவு தெரிவித்து இப்போராட்டத்தில் கலந்திருக்கிறார்கள்.

இந்நிலையில் திரைப்பட இயக்குநர் ரஞ்சித் இரவு போராட்டத்தில் கலந்து கொண்டார். இன்று மருத்துவமனையில் காயம்பட்டவர்களை சந்திக்கிறார். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சந்திரசேகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயசந்திரன் ஒரு சாதியினருக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்கிற குற்றச்சாட்டை பாதிக்கப்பட்ட மக்கள் முன்வைத்திருக்கிறார்கள். நேர்மையான ஐ.பி.எஸ், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உடனடியாக நியமித்தால் மட்டுமே இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.