சேலம்,
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து சேலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்ட வாலிபர், மாணவர் சங்கத்தினர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டை கண்டித்து கடந்த மே 25 ஆம் தேதியன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சேலம் அண்ணா பூங்கா அருகில் ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட வாலிபர் மற்றும் மாணவர் சங்க நிர்வாகிகளை கைது செய்த காவல்துறையினர், பொய் வழக்கு பதிந்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் என்.பிரவீன்குமார், மாவட்ட பொருளாளர் வி.வெங்கடேஷ், வடக்கு மாநகர பொருளாளர் கதிர்வேல், வடக்கு மாநகர துணை செயலாளர் சசிக்குமார் உள்ளிட்ட 18 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து சேலம் மத்தியசிறைச்சாலை முன்பு அத்தோழர்களுக்கு எழுச்சிமிகு வரவேற்பளிக்கப்பட்டது. இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் பி.ராமமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ஜோதிலட்சுமி, வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கந்தசாமி, வழக்குரைஞர் வெற்றிவேல் உள்ளிட்டோர் மாலைகள் அணிவித்து வரவேற்பளித்தனர். இதற்கிடையே, கைது செய்யப்பட்ட வாலிபர் சங்க வடக்கு மாநகர தலைவர் சதீஷ்குமார் மற்றும் சேகர் ஆகியோர் ரயில்வே துறையை பாதுகாக்கக்கோரி கடந்த பிப்.13 ஆம் தேதியன்று நடத்தப்பட்ட போராட்டத்தில் பங்கேற்றதற்காக தொடரப்பட்ட வழக்கில் அவர்களை காவல்துறையினர் மீண்டும் சிறையில் அடைத்தனர்.

Leave A Reply

%d bloggers like this: