தஞ்சாவூர்:
தஞ்சாவூர் பெரிய கோவிலில் 60 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான ராஜ ராஜ சோழன், உலோக மாதேவி சிலைகள் குஜராத் அருங்காட்சியகத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.

உலகப் புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில், இக்கோயிலைக் கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழன் சிலையும், அவரது பட்டத்தரசியான உலோகமாதேவி சிலையும் 60 ஆண்டுகளுக்கு முன்பு கோவிலிலிருந்து திருடப்பட்டது.இதுதொடர்பாக, உயர் நீதிமன்ற ஆணைப்படி நியமிக்கப்பட்ட சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக் காவல் தலைவர் (ஐ.ஜி.) பொன். மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர் விசாரணை மேற்கொண்டனர். இதில், இரு சிலைகளும் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சாராபாய் பவுன்டேஷன் காலிகோ அருங்காட்சியகத்தில் இருப்பது தெரிய வந்தது.இதுகுறித்து 60 ஆண்டுகளுக்குப் பிறகு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறை அளித்த அறிக்கையின் அடிப்படையில் தஞ்சாவூர் மேற்கு காவல்துறை மார்ச் 2 ஆம் தேதி வழக்குப் பதிவு செய்தனர். பின்னர், இந்த வழக்கு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டது.

பின்னர், முதல் கட்ட விசாரணையைச் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வெங்கட்ராமன் மேற்கொண்டார். மேலும், அப்பிரிவின் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் ராஜாராம், அசோக் நடராஜன், ஆய்வாளர்கள் ரவி, விநாயகமூர்த்தி, சுரேஷ்குமார், சிபின்ராஜ்மோகன், காவலர்கள் செழியன், சாமியப்பன் ஆகியோர் கொண்ட விசாரணைக் குழுவினர் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சாராபாய் பவுன்டேஷன் காலிகோ அருங்காட்சியகத்துக்கு செவ்வாய்க்கிழமை (மே 29) சென்று விசாரித்தனர்.
அப்போது, இரு சிலைகள் குறித்த ஆதாரங்களை அருங்காட்சியகத்தில் பொறுப்பில் இருந்த அலுவலர்களிடம் காண்பித்தனர். பின்னர், இரு சிலைகளையும் விசாரணைக் குழுவினரிடம் அருங்காட்சியக அலுவலர்கள் ஒப்படைத்தனர். இரு சிலைகளையும் கைப்பற்றிய சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் சென்னைக்கு வியாழக்கிழமை (மே 31) மாலை வருகின்றனர்.

இதில் ராஜராஜசோழன் சிலையின் உயரம் இரண்டரை அடியும், உலோகமாதேவி சிலையின் உயரம் இரண்டரை அடிக்குச் சற்றுக் குறைவாகவும் உள்ளது. இவை இரண்டும் ஐம்பொன் சிலைகள். இவற்றில் ராஜராஜசோழன் சிலையின் மதிப்பு ரூ. 100 கோடிக்கும் அதிகமாகவும், உலோகமாதேவியின் சிலை ரூ. 50 கோடிக்கும் அதிகமாகவும் இருக்கும் என சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் தெரிவித்தனர்.

விற்றது யார்?
இதனிடையே, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறை மேற்கொண்ட விசாரணையில் ஏறத்தாழ 60 ஆண்டுகளுக்கு முன்பு இக்கோவிலில் இருந்து ராஜராஜசோழன் சிலையும், உலோகமாதேவி சிலையும் தொடர்புடைய உயர்நிலை அலுவலர்களால் கையாடல் செய்யப்பட்டு, களவாடப்பட்டுள்ளது. பின்னர், தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகேயுள்ள கபிஸ்தலம் பகுதி சறுக்கை கிராமத்தைச் சேர்ந்த ராவ்பகதூர் சீனிவாச கோபாலாச்சாரி மூலமாக சென்னையில் உள்ள கௌதம் சாராபாயிடம் கோடிக்கணக்கில் விற்றுள்ளது தெரிய வந்தது. இந்த வழக்கில் இதுவரை விசாரிக்கப்பட்ட சாட்சிகள் அனைவரும் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள். மேலும், இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

ஆதாரங்கள்
இரு சிலைகளும் மாயமானது தொடர்பாக சில வரலாற்று ஆய்வு நூல்களை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் படித்து அறிந்தனர். மேலும், தஞ்சாவூர் பெரியகோவிலில் வடமேற்கு மண்டபத்தின் அடிப்பகுதியில் காணப்படும் கல்வெட்டையும் இந்த வழக்குக்குச் சாட்சியமாக எடுத்துக் கொண்டனர்.

இக்கல்வெட்டுகளின்படி மொத்தம் 66 உலோகத் திருமேனிகளை இக்கோவிலுக்கு ராஜ ராஜ சோழன் காலத்தில் கொடுக்கப்பட்டுள்ளது தெளிவாகத் தெரிகிறது. இதில் மொத்தம் 107 பத்திகள் எழுதப்பட்டுள்ளன. இவை ராஜ ராஜ சோழனுடைய 26 ஆம் ஆண்டு ஆட்சிக் காலத்தில் 20 ஆவது நாளில் உத்தரவிடப்பட்டு எழுதப்பட்டுள்ளது. இதில், 18 ஆவது பத்தி குடமுழுக்கு விழா பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதல் 50 பத்திகளில் கோவிலுக்கு அரசன் கொடுத்த அன்பளிப்புகள் குறித்தும், 51 முதல் 107 வது பத்தி வரை மாமன்னனின் ஆட்சிக் காலத்தில் 23 ஆம் ஆண்டில் இருந்து 29 ஆம் ஆண்டு வரை கோவிலுக்குக் கொடுக்கப்பட்ட அனைத்து கொடைகள் பற்றியும் பொறிக்கப்பட்டுள்ளன.
ராஜராஜசோழன் தனது 29 ஆம் ஆண்டு ஆட்சிக் காலத்தில் தான் இறக்கப்போவதை முன் கூட்டியே அறிந்து, இக்கோவிலுக்கு அளித்த அனைத்து கொடைகளையும் கோவிலின் கற்சுவர்களில் எழுத ஆணையிட்டார். இக்கல்வெட்டில் உள்ள தகவலின்படி இரு சிலைகளின் உயரம், உருவம் உள்ளிட்டவை அகமதாபாத் அருங்காட்சியகத்தில் இருந்த இச்சிலைகளுடன் ஒத்திருப்பதை உறுதி செய்தனர். இதற்கான தகவல்களையும், ஆதாரங்களையும் சேகரித்தனர். இதன் அடிப்படையில் இரு சிலைகளையும் மீட்டுள்ளனர்.

இதேபோல, இக்கோவிலில் மேலும் பல சிலைகள் களவாடப்பட்டிருப்பது விசாரணையில் தெரிய வந்தது. இக்குற்ற நிகழ்வை காவல் நிலையத்துக்கு சொல்லாமல் இந்து சமய அறநிலையத் துறையினர் மறைத்தனர். இதுகுறித்தும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.

நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியது
குஜராத் அருங்காட்சியகத்தில் இருந்த ராஜராஜசோழன் சிலையை மீட்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் போராடி வந்தனர். மேலும், அரசிடம் ஏராளமான மனுக்களை அளித்தனர். பெரிய கோவிலில் ஆண்டுதோறும் நடத்தப்படும் சதய விழாவின்போது பல்வேறு அமைப்பினரும் இக்கோரிக்கையை பிரதானமாக முன் வைப்பர்.

இந்நிலையில், அறுபது ஆண்டுகளுக்கு முன்பு திருட்டு போன இரு சிலைகளையும் உயர் நீதிமன்ற நீதிபதி மகாதேவனால் நியமிக்கப்பட்ட சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் தலைவர் பொன் மாணிக்கவேல் தலைமையிலான விசாரணைக் குழுவினர் கண்டுபிடித்து மீட்டிருப்பது மிகப் பெரும் சாதனையாகக் கருதப்படுகிறது.

சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
இரு சிலைகளையும் மீட்டு கொண்டு வந்தது போல மற்ற காணாமல் போன புராதன சிலைகளையும், கலைப் பொருட்களையும் மீட்கவேண்டும் என சமூக ஆர்வலரும், வழக்கறிஞருமான வெ.ஜீவகுமார் கோரிக்கை விடுத்துள்ளார். காணாமல் போன இரு சிலைகள் குறித்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன சிலைகள் குஜராத் அருங்காட்சியகத்தில் இருப்பது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டிருந்தபோது அதிகாரிகள் அலட்சியமாக பதில் அளித்திருந்தனர். தற்போது சிலைகள் குஜராத் அருங்காட்சியகத்தில் இருந்து மீட்கப்பட்டது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: