திருப்பூர்,
வெளிப்படையாகவே சிறுபான்மை மற்றும் விளிம்பு நிலை மக்களுக்கு எதிராக பாரதிய ஜனதா கட்சி செயல்படுவதால்தான் இடைத்தேர்தல்களில் படுதோல்வி அடைந்திருக்கிறது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறினார். திருப்பூரில் வியாழனன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கேரளம், கர்நாடகம், பீஹார், உ.பி.உள்ளிட்ட மாநிலங்களில் சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சி படுதோல்வி அடைந்திருக்கிறது. வெளிப்படையாகவே சிறுபான்மை மற்றும் இதர விளிம்பு நிலை மக்களுக்கு எதிராக அந்த கட்சி செயல்பட்டு வருவதால் தற்போது மிகப்பெரிய தோல்வியை அக்கட்சி சந்தித்திருக்கிறது.

அதேநேரம், தமிழகத்திலும் காலூன்ற அக்கட்சி முயற்சிக்கிறது. இதற்காக அதிமுகவை நேரடியாகவும், மறைமுகமாகவும் அச்சுறுத்தி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தையே தொலைகாட்சியில் பார்த்துத்தான் தெரிந்து கொண்டேன் என முதல்வர் சொல்லியிருப்பதும், மத்திய அரசு துணை ராணுவப்படையை அனுப்ப முடிவு செய்திருந்தனர் என்பதும் இங்கே மத்திய அரசின் தலையீடு இருக்கும் என்ற வலுவான சந்தேகத்துக்கு இடமளிக்கிறது என திருமாவளவன் தெரிவித்தார்.

மகளிர் இயக்க நிர்வாகிக்கு நினைவேந்தல்;
முன்னதாக, விடுதலைச் சிறுத்தைகள் மாவட்டச் செயலாளர் தமிழ்வேந்தனின் மனைவியும், விடுதலை மகளிர் இயக்க மாவட்டப் பொருளாளருமான த.விஜயலட்சுமியின் மறைவுக்கு நினைவேந்தல் செலுத்தும் நிகழ்ச்சி காங்கயம் சாலை செம்மேடு பகுதியில் நடைபெற்றது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பங்கேற்று நினைவஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்வில் அக்கட்சியின் மண்டல அமைப்புச் செயலாளர் வளவன். வாசுதேவன், நாடாளுமன்ற தொகுதிச் செயலாளர் பழ.சண்முகம், தொண்டைமான், ப.சத்யன், ஏ.பி.ஆர்.மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். முடிவில் திருப்பூர் வடக்கு மாவட்டச் செயலாளர் அ.தமிழ்வேந்தன் நன்றி கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.