திருவாரூர்:
இந்திய மற்றும் பன்னாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளின் முதலாளிகளின் வளமான வாழ்க்கைக்காக பிரதமர் நரேந்திர மோடி ஓடி ஓடி உழைக்கிறார் என திருவாரூரில் புதன்கிழமையன்று நடைபெற்ற அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க மாநில மாநாட்டு நிறைவு பேரணி – பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய திரிபுரா மாநில முன்னாள் முதலமைச்சர் மாணிக்சர்க்கார் குற்றம்சாட்டினார்.

அவரது உரையின சாராம்சம் வருமாறு:
தேர்தல் காலங்களில் நாட்டு மக்களின் துன்ப துயரங்கள் குறித்து மிகுந்த அக்கறையோடு கண்ணீருடன் பேசும் பாரதிய ஜனதா கட்சியினர் தேர்தல் முடிந்ததும் அதனை அறவே மறந்துவிட்டு கார்ப்பரேட் முதலாளிகளின் நலனுக்காக உழைப்பார்கள். இவர்களின் பிரதமர்தான் நரேந்திரமோடி. தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டிற்கு பலியான தியாகிகள் நினைவுக்கு வருகின்றனர். அவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
ஸ்டெர்லைட் தாமிரஆலையின் வேதாந்தா குழுமத்தின் அதிபர் அனில் அகர்வால் பிரதமர் நரேந்திரமோடியின் நெருங்கிய நண்பர் ஆவார். அதனால்தான் இப்பிரச்சனை குறித்து மோடி வாய்திறக்க மறுக்கிறார். இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிடக்கூட அவருக்கு மனம் வரவில்லை என்றால் இவர்கள் எத்தகைய கொள்கைகளுக்கு ஆதரவானவர்கள் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

சட்டமன்றம்
தற்போது தமிழகத்தில் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நானும் எல்லா செய்திதாள்களையும் படித்தேன். ஒரு பத்திரிக்கையில்கூட தூத்துக்குடி தியாகிகளுக்கு இரங்கல் தெரிவித்து சட்டமன்றத்தில் அதிமுக அரசு பேசியதாக செய்தி வரவில்லை. இதுமிகவும் வருத்தம் அளிப்பதாகவும் கண்டனத்திற்கு உரியதாகவும் உள்ளது.

நிலக்குவியல்
தற்போது விவசாய தொழிலாளர் சங்க மாநாட்டை நடத்திக்கொண்டிருக்கிறோம். விவசாய தொழிலாளர்களின் நிலை நாடுமுழுவதும் ஒரேமாதியாகதான் உள்ளது. அவர்கள் வசிக்கும் பகுதிகளில் எந்த அடிப்படை வசதிகளும் இருப்பதில்லை. பொதுசுகாதாரம் மிகவும் மோசமாக உள்ளது. சாலைவசதிகள் இருப்பதில்லை. குடிநீர் வசதி இருப்பதில்லை. பொதுவிநியோகத்திட்டம் முறையாக செயல்படுத்தப்படுவதில்லை. இதனிடையே இவர்களின் வாழ்க்கை சூழல் என்பது பெரும்சுமையாக உள்ளது.இதற்கு முக்கிய காரணம் இவர்களிடம் சொந்தமாக நிலம் இருப்பதில்லை. நிலச்சுவான்தார்களிடம் நிலங்கள் குவியலாக உள்ளன.

இந்த நிலத்தில் விவசாய தொழிலாளர்கள் கடுமையாக உழைத்து தங்கள் முதலாளிகளுக்கு லாபம் ஈட்டிதருவார்கள். நிலச்சுவான்தார்கள் யாரும் நிலத்தில் இறங்கி வேலைபார்ப்பதில்லை. உழைக்கும் மக்களுக்கு உற்பத்தியிலிருந்து எந்தப்பங்கும் கிடைப்பதில்லை. சொற்பகூலிக்கு வேலைபார்க்கிறார்கள். அதேநேரத்தில் நிலஉடமையாளர்கள் தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை கொள்ளை லாபத்திற்கு விற்கிறார்கள். நிலக்குவியல் உடைக்கப்பட்டு உழுபவர்களுக்கு நிலம் சொந்தமாகும்போதுதான் விவசாயத் தொழிலாளர்களுக்கு விடுதலை கிடைக்கும். இந்த நிலத்தை நமது நாட்டில் உள்ள நிலஉச்சவரம்பு சட்டத்தை பயன்படுத்திதான் கொடுக்கச் சொல்கிறோம். ஆனால் நிலஉச்சவரம்பு சட்டம் நமது நாட்டில் தவறாக பயன்படுத்தப்படுகிறது. இதற்கு அதிகாரிகள் துணைபோகிறார்கள். கிராமப்புற மக்களின் வாழ்க்கை மேம்பாடு அடைய ஒன்றுபட்ட வலுவான போராட்டங்களை நாம் முன்னெடுத்து செல்ல வேண்டும்.

கண்ணியமான வாழ்க்கை வேண்டும்
தற்போதைய மத்தியஅரசு தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் மலைவாழ் மக்களுக்கு எதிரான அரசாக செயல்பட்டு வருகிறது. மலைவாழ் மக்களின் வனப்பகுதி கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு தாரைவார்க்கப்படுகிறது. இவர்கள் மூலமாக இயற்கை வளங்களும் சூறையாடப்படுகிறது. மோடி ஆட்சியில் தலித் மற்றும் சிறுபான்மை மக்கள் துன்புறுத்தப்படுகிறார்கள். உணவு உடை பண்பாடு கலாச்சாரம் ஆகியவற்றை பாஜகவினர் முடிவு செய்கிறார்கள். இதன் காரணமாக இவர்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கு கண்ணியமான வாழ்க்கையை அமைத்துத் தர வேண்டும். ஒருபுறம் எல்லாவளமும் எளிதில் கிடைத்துவிடக்கூடியவர்கள் இருக்கிறார்கள். ஆனால் உழைப்பாளி மக்கள் தங்களின் உன்னத உழைப்பின்மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஒருவேளை கஞ்சிக்கூட குடிக்க இயலாத நிலை உள்ளது. பிரதமர் நரேந்திரமோடி தேர்தல் காலத்தில் 400க்கும் மேற்பட்ட பொதுக்கூட்டங்களில் பேசியுள்ளார். இவற்றில் ஒரு கூட்டத்தில் கூட ஏழை – எளிய மக்களின் வாழ்க்கை குறித்து வாய்திறக்கவில்லை. வளர்ச்சி வளர்ச்சி என்று கூச்சல்போடுகிறார்கள். இந்த நான்கு ஆண்டுகளில் என்ன வளர்ச்சியை தந்துவிட்டார்கள். விவசாயிகளின் தற்கொலை அதிகரித்த வண்ணம் உள்ளது. தமிழ்நாட்டிலும் விவசாயிகளின் தற்கொலை நடந்துள்ளது. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைதருவதாக கூறி படித்த இளைஞர்களை ஏமாற்றி விட்டார்கள். இந்த நான்கு ஆண்டுகளில் 8 கோடி பேருக்கு வேலை கிடைக்க வேண்டும். கிடைத்ததா? அனைவரின் வங்கி கணக்கிலும் தலா 15 லட்ச ரூபாய் வரவு வைக்கப்பட்டு விட்டதா?

ஒன்றுபட்ட போராட்டமே தீர்வு
இந்தியாவில் பொதுத்துறை நிறுவனங்களில் முறையான பராமரிப்பு இல்லாமல் தனியாருக்கு தாரைவார்க்கும் முயற்சி அவ்வபோது நடைபெறுகிறது. ஆனால் ஊழியர்களின் – தொழிலாளர்களின் ஒன்றுபட்ட போராட்டத்தால் அவை தடுத்து நிறுத்தப்பட்டது. மோடி அரசாங்கத்தின் கொள்கையால் பெட்டிக்கடை வைத்திருப்பவர்கள் கூட கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.2019 ஆம் ஆண்டு வரயிருக்கிற நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் கூட இதுகுறித்தெல்லாம் மோடி பேசப்போவதில்லை.

முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மக்கள் போராட்டங்கள் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக பெண்கள் அதிக அளவில் ஈடுபாட்டோடு போராட்டங்களில் பங்கேற்கிறார்கள். 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதிமுதல் 5ஆம் தேதி வரை நடைபெற்ற பொது வேலை நிறுத்தத்தில் சுமார் 18 கோடிப் பேர் ஈடுபட்டனர். எந்த ஊடகங்களும் இதனை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. காரணம் இந்த ஊடகங்கள் அனைத்தும் கார்ப்பரேட் முதலாளிகளின் கையில் உள்ளதுதான். தற்போது அனைத்துப்பகுதி மக்களும் பெருமளவில் போராட்டங்களை தாங்களே தன்னெழுச்சியாக முன்னெடுக்கின்றனர்.

பெரும்பான்மை
90 சதவீத மக்கள் வாக்களித்துதான் அரசுகள் ஆட்சிக்கு வருகின்றன. ஆனால் 10 சதவீதமே உள்ள விரல்விட்டு எண்ணக்கூடிய பணக்காரர்களுக்கு சேவகம் செய்கின்றன. பிரித்தாளும் சூழ்ச்சியை கையாண்டு அதனையே தந்திரமாக்கி மீண்டும் ஆட்சிக்கு வரத்துடிக்கிறது பாரதிய ஜனதா கட்சி. இவர்களுக்கு தாளம் போடுகிற அரசாக தமிழக அரசும் உள்ளது. எனவே எதிர்காலத்தில் வலுவான போராட்டங்கள் மூலம் பாரதிய ஜனதாவை அப்புறப்படுத்த வேண்டும். பாஜகவை தோற்கடிப்பது நமது முதல் கடமையாகும். பாரதிய ஜனதாவிற்கு இடமளிக்காமல் தமிழகம் முன்மாதிரி மாநிலமாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இது நாடுமுழுவதும் உள்ள மதசார்பற்ற ஜனநாயக சக்திகளுக்கு ஊக்கமளிப்பதாக அமையும். எனவே பெரும்கடமைகள் நம்முன்னே காத்திருக்கிறது. உழைக்கும் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வலுவான போராட்டங்களுக்கு தயாராக வேண்டும். வரும் எதிர்காலம் என்பது போராட்டக்காலமாகும். எனவே வாழ்க்கை போராட்டத்தோடு இப்போராட்டங்களையும் வலுப்படுத்தி நாட்டில் மக்களுக்கான மாற்றத்தை கொண்டுவருவோம்.இவரது ஆங்கில உரையை எம்.கிரிஜா தமிழில் மொழியாக்கம் செய்தார்.

பொதுக்கூட்டம்
திருவாரூர் தெற்குவீதியில் வெண்மணி தியாகிகள் நினைவுதிடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு சங்கத்தின் மாநிலத்தலைவர் ஏ.லாசர் தலைமையேற்றார். அகில இந்திய தலைவர் எஸ்.திருநாவுக்கரசு, சிஐடியு மாநிலத்தலைவர் அ.சவுந்தரராசன் விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம், வி.தொ.ச மாநில பொதுச்செயலாளர் வீ.அமிர்தலிங்கம், பொருளாளர் எஸ்.சங்கர், மாநில துணைத்தலைவர் ப.வந்தாமணி, வரவேற்புக்குழுத்தலைவர் ஐ.வி.நாகராஜன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி உள்ளிட்ட தலைவர்கள் பேசினர். வரவேற்புக்குழு செயலாளர் ஆர்.குமாரராஜா நன்றி கூறினார். முன்னதாக மண்ணின் பாடகர் ஆரூர் மகாலிங்கம் தலைமையிலான காவிரிக்கலைக்குழுவின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. (ந.நி)

Leave a Reply

You must be logged in to post a comment.