சென்னை:
சென்ற ஊதிய உயர்வு ஒப்பந்தத்தின்போது அன்றைய ஒட்டுமொத்த சம்பளத் தொகையில் 15 சதவீதம் பெற்ற வங்கி ஊழியர்-அதிகாரிகளுக்கு தற்போதைய ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையின் போது 2 சதவீதம் மட்டுமே ஊதிய உயர்வு அளிக்க முடியும் என்ற இந்திய வங்கிகள் சங்கம் (ஐபிஏ) மற்றும் மத்திய அரசின் ஆணவப்போக்கைக் கண்டித்து நாடெங்கிலும் உள்ள சுமார் 90 ஆயிரம் கிளைகளில் பணிபுரியும் 10 லட்சம் வங்கி ஊழியர்களும், அதிகாரிகளும் மே 30 புதனன்று காலை 6 மணி முதல் ஜூன் 1 வெள்ளியன்று காலை 6 மணி வரை 48 மணி நேர தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்ற ஒப்பந்தம் வரை 7-ஆம் நிலை அதிகாரிகளான பொது மேலாளர்கள் வரையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. ஆனால், தற்போது 3-ஆம் நிலையில் உள்ள அதிகாரிகள் வரைதான் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று ஐபிஏ பிடிவாதமாக கூறுகிறது. ஊழியர்-அதிகாரிகளை பிரித்தாளும் ஐபிஏவின் இத்தகைய சூழ்ச்சியை கண்டித்தும் இந்த வேலை நிறுத்தம் துவங்கியுள்ளது. அனைத்து அதிகாரிகளுக்குமான ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பதே தொழிற் சங்கங்களின் கோரிக்கை.

ஏன் வந்தது நட்டம்?
பொதுத்துறை வங்கிகள் ஒட்டுமொத்தமாக ரூ.50,000 கோடிக்கும் மேலாக நிகர நஷ்டம் ஈட்டியதன் காரணமாக ஊதிய உயர்வை 2 சதவீதத்திற்கு மேல் உயர்த்த முடியாது என்று ஐபிஏ, மத்திய தொழிலாளர் நல ஆணையர் முன்பாக 28.5.2018 அன்று நடைபெற்ற சமரச பேச்சுவார்த்தையில் கூறியது.

2017-18-ல் பொதுத்துறை வங்கிகள் ஈட்டிய மொத்த லாபத்தில் பெரு முதலாளிகள் செலுத்த வேண்டிய கடனுக்காக சுமார் ரூ.2,10,000 கோடிக்கு மேல் ஒதுக்கீடு செய்வதால்தான் இந்த நஷ்டம் ஏற்படுகிறது என்ற உண்மையை அவர்கள் மறைக்கிறார்கள். மொத்த வராக் கடனான 10 லட்சம் கோடி ரூபாயில் 88 சதவீத வராக் கடனுக்கு சொந்தக்காரர்கள் பெரு முதலாளிகள் தான் என்று ரிசர்வ் வங்கியின் அறிக்கையே கூறுகிறது. அவர்களிடமிருந்து கறாராக வராக் கடனை வசூல் செய்ய இயலாத மத்திய அரசும், வங்கி நிர்வாகங்களும் அதனைக் காரணம் காட்டி ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் நியாயமான ஊதிய உயர்வை மறுப்பதை கண்டித்தும் இந்த வேலை நிறுத்தம் நடைபெறுகிறது.

ஊழியர் மற்றும் அதிகாரிகளின் ஒன்பது சங்கங்கள் இணைந்த வங்கி சங்கங்கள் ஒருங்கிணைப்புக் குழு(யுஎப்பியு)வின் அறைகூவலுக்கிணங்க 10 லட்சம் ஊழியர்கள்-அதிகாரிகள் தங்கள் இரு நாட்கள் சம்பள இழப்பை ஏற்றுக்கொண்டு இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள்.

தமிழகத்தில் சுமார் 9,000 கிளைகளில் பணிபுரியும் 80 ஆயிரம் ஊழியர்கள்-அதிகாரிகள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். யுஎப்பியுவின் அறைகூவலை ஏற்று நாடெங்கிலும் 600 மையங்களில் சக்திமிக்க ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுள்ளன.

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், வேலூர், புதுச்சேரி, சேலம், ஈரோடு, கோவை, திருச்சி, தஞ்சை, கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, அருப்புக்கோட்டை, கன்னியாகுமரி, காரைக்குடி, ஓசூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட மையங்களில் வங்கி ஊழியர்கள்-அதிகாரிகள் ஆர்ப்பாட்டம் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. வியாழனன்றும் இதேபோன்று ஆர்ப்பாட்டம் தொடரும்.
இந்த வேலை நிறுத்தத்தினால் சுமார் 7,000 கோடி ரூபாய் மதிப்பிலான காசோலை பரிவர்த்தனை முடங்கியுள்ளது.

சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே புதனன்று (மே 29) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாசலம், ஒருங்கிணைப்பாளர் சி.தாமஸ் பிராங்கோ ராஜேந்திரதேவ், இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் மாநிலத் தலைவர் தி.தமிழரசு, பொதுச்செயலாளர் சி.பி.கிருஷ்ணன், பொருளாளர் எம்.சண்முகம், பாலாஜி, நாகராஜன், மகேஷ்குமார் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சி.எச்.வெங்கடாசலம் கூறியதாவது:
வங்கியின் லாபம் ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. ஆனால் அனைத்து லாபத்தையும் வங்கிகளினுடைய வாரக் கடன் இழப்புக்காகச் செலவிடுகிறார்கள். அதனால்தான் வங்கிகளின் லாபம் குறைகிறது, நஷ்டம் ஏற்படுகிறது.

பூஷன் ஸ்டீல் வாங்கிய கடன்
உதாரணமாக பூஷன் ஸ்டீல் 56 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கியிருக்கிறார்கள். அதை 35 ஆயிரம் கோடி ரூபாயாக இறுதிப்படுத்தியுள்ளனர். இதனால் வங்கிக்கு 21 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம். இப்படி பெரிய பெரிய கடன்களை ரத்து செய்து விட்டு, நியாயமாக விலைவாசி உயர்வுக்கு ஏற்ப வழங்க வேண்டிய ஊதிய உயர்வு கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறுவதை ஏற்க முடியாது. எனவே வங்கியில் ஏற்படும் நஷ்டத்திற்கு ஊழியர்களோ அதிகாரிகளோ பொறுப்பு கிடையாது.

Leave a Reply

You must be logged in to post a comment.