கோவை,
வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக பல கோடி மதிப்பிலான வங்கி பரிவர்த்தனைகள் பாதிக்கப்பட்டன.வருவாய் அடிப்படையில் சம்பள உயர்வு நிர்ணயிக்க கூடாது. மாறாக வேலை அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி அனைத்து வங்கி ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மே 30 மற்றும் 31 ஆகிய இரு நாட்கள் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதன்படி, புதனன்று துவங்கிய இப்போராட்டம் காரணமாக கோவையில் வங்கி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

இதுகுறித்து கோவை மாவட்ட வங்கி ஊழியர்கள் சங்க தலைவர் மனோகரன், பொதுச்செயலாளர் மீனாட்சி சுப்பிரமணியன் ஆகியோர் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் 420 வங்கி கிளை உள்ளது. 1,200 ஏடிஎம்கள் உள்ளது. இதில் மொத்தம் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அனைவரும் இந்த வேலை நிறுத்தபோராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக உள்நாடு, வெளிநாடு பண பரிவர்த்தனை, காசோலை, மின்னணு பரிவர்த்தனை ஒரு நாளில் ரூ.10 ஆயிரம் கோடி என 2 நாட்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடிக்கான பரிவர்த்தனை பாதிக்கப்படும் என தெரிவித்தனர்.

மேலும், இப்போராட்டத்தின் ஒருபகுதியாக கோவை ரயில் நிலையம் எதிரே உள்ள பாங்க் ஆஃப் பரோடா முன்பு ஆயிரத்திற்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வேலை நிறுத்த போராட்டம் வியாழனன்றும் தொடர்ந்து நடைபெற உள்ளது.

ஈரோடு:
இதேகோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு எஸ்பிஐ மெயின்கிளை முன்பாக வங்கித் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வேலைநிறுத்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஏ.ராஜேந்திரன், நிர்வாகிகள் பி.பாக்கியகுமார், கே.செல்வம், எல்.முத்துகிருஷ்ணன், ஏ.ஆர்.சந்திரசேகரன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

சேலம்:
சேலம் கோட்டை பாரத ஸ்டேட் வங்கி முன்பு வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் வேலைநிறுத்த கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இருநூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.