தஞ்சாவூர்:
“சிவகங்கை மாவட்டம் கச்சநத்தம் கிராமத்தில் சாதி ஆதிக்க வெறியர்கள் தலித் கிராமத்தில் புகுந்து கொலைவெறி தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 6 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தலித் மக்கள் மீதான இந்த தாக்குதலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

ரஜினிக்கு கண்டனம்
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 உயிர்கள் அநியாயமாக காவு வாங்கப்பட்டுள்ளது. பலர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகமே கொந்தளித்து போய் உள்ளது. உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளிலும் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

இத்தகைய நிலையில் தூத்துக்குடி சென்ற நடிகர் ரஜினிகாந்த் மக்களின் போராட்டங்களை கொச்சைப்படுத்தும் விதமாக பேசியுள்ளார். அவரது பேச்சு கண்டிக்கத்தக்கது. போராட்டக்காரர்களால் தான் பிரச்சனை என்ற ரீதியில் அவர்களை வன்முறையாளர்களாக சித்தரித்துப் பேசியுள்ளார். ஜல்லிக்கட்டு போராட்டத்திலும் வன்முறையாளர்கள், பிரிவினைவாத சக்திகள் சம்பந்தப்பட்டிருப்பதாக பேசுகிறார். போராட்டம் நடத்தினால் எப்படி தொழிற்சாலைகள் வரும் எனக் கேட்கிறார். ஜனநாயக ரீதியில் போராடுவதையே கொச்சைப்படுத்துகிறார்.

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை நியாயப்படுத்துவது சரியா? காவிரிக்காக தமிழர்கள் போராடக்கூடாது என இவர் சொல்கிறாரா? போராடும் பொதுமக்களை கொச்சைப்படுத்தி, முதலமைச்சருக்கு சப்பைக்கட்டு கட்டி, பாஜகவின் ஊதுகுழலாக பேசும் ரஜினிகாந்த்தின் பேச்சு கடுமையாக கண்டிக்கத்தக்கது. அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.
சட்டமன்றத்தில் முதலமைச்சர் எடப்பாடி துப்பாக்கிச் சூடு பற்றி வாய்திறக்கவில்லை. துப்பாக்கிச் சூடு நடத்த துணை வட்டாட்சியர் எப்படி அனுமதி கொடுக்க முடியும்? ஆர்டிஓ, கலெக்டர் எங்கே சென்றனர்? காவல்துறையின் தவறை மூடிமறைக்க முதல்வர் முயல்கிறார். பதவியில் உள்ள நீதிபதியை கொண்டு உயர்நீதிமன்ற கண்காணிப்பில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்.

ஜூன் 12 தண்ணீர் வருமா?
காவிரி மேலாண்மை வாரியம் இதுவரை அமைக்கப்படவில்லை. ஜூன் 12 ஆம் தேதி குறுவை சாகுபடிக்கு தண்ணீர் வருமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. முதலமைச்சர் உண்மைக்கு மாறான தகவல் தருவதை விட்டு விட்டு காவிரியில் தண்ணீர் பெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசை வலியுறுத்தி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சட்டமன்றத்தில் ஜனநாயக விரோத செயல்களில், எதிர்க்கட்சிகளின் குரல்வளையை நெரிக்கும் செயல்களில் அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது. அதற்காக பிரதான எதிர்கட்சியான திமுக சட்டமன்ற புறக்கணிப்பு செய்யக்கூடாது. அதனை மறுபரிசீலனை செய்து ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும்.

பேட்டியின்போது, கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம், மாநிலக்குழு உறுப்பினர் என்.சீனிவாசன், மாவட்டச்செயலாளர் கோ.நீலமேகம், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் சாமி. நடராஜன், கட்சியின் மாவட்ட செயற்குழு பி.செந்தில்குமார், மாநகர செயலாளர் என்.குருசாமி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.