அமராவதி:
ஆந்திர அரசிடம் கணக்கு கேட்க அமித் ஷா யார்; என்றும், ஒரு மாநில அரசின் நிர்வாகத்தில் பாஜக தேசியத்தலைவர் தலைவர் அமித்ஷா தலையிட யார் அதிகாரம் கொடுத்தது? என்று ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கேள்வி எழுப்பியுள்ளார்.தில்லியில் அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, ‘ஆந்திர தலைநகர் அமராவதி கட்டுமானத்திற்காக மத்திய அரசு 2,500 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது; ஆனால் சந்திரபாபு நாயுடு அரசு, ஒரு செங்கல்லைக் கூட எடுத்து வைக்கவில்லை; மேலும் நிதி செலவிடப்பட்டதற்கான ஆவணங்களையும் இன்னும் அளிக்கவில்லை’ என்று கூறியிருந்தார்.

இதற்குத்தான் சந்திரபாபு நாயுடு தற்போது பதிலடி கொடுத்துள்ளார். தெலுங்கு தேசம் கட்சி மாநாட்டில் பேசிய அவர், ‘ஆந்திர அரசிடம் கணக்கு கேட்க அமித் ஷா யார்? விஜயவாடாவின் செலவினக் கணக்கு ஆவணங்களைப் பற்றி, அவர் எதற்குக் கேட்கிறார்?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான அமராவதி தலைநகர் உருவாக்கத் திட்டத்திற்கு, மத்திய அரசு வெறும் ஆயிரத்து 500 கோடியை மட்டுமே ஒதுக்கியுள்ளதாகவும், ஆனால், குண்டூர் வடிகால் திட்டத்திற்கு ஒதுக்கிய ரூ. 1000 கோடியைச் சேர்த்து அமித்ஷா ரூ. 2 ஆயிரத்து 500 கோடி என்று கணக்கு காட்டுகிறார் என்று கூறியிருக்கும் சந்திரபாபு நாயுடு, இந்த நிதிகளைப் பயன்படுத்தியதற்கான சான்றிதழ்களை முன்னரே தாக்கல் செய்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.அப்படியே இருப்பினும், மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே உள்ள விவகாரம் குறித்து பற்றிப் பேச அமித்ஷா யார்?

ஆவணங்களை அளிக்கவில்லை எனப் பிரதமர் அலுவலகமோ, மத்திய அரசோ கூறாதபோது, ஆந்திர அரசுக்கு, மத்திய அரசு ஒதுக்கும் நிதி குறித்து கேள்வி எழுப்ப- ஒரு கட்சியின் தலைவராக மட்டுமே இருக்கும் அமித்ஷாவுக்கு என்ன உரிமை இருக்கிறது? என்றும் கேட்டுள்ளார்.

மேலும் அவர் பேசியிருப்பதாவது:
                  குஜராத்தில் உள்ள தோலிரா நகரை, தில்லியைக் காட்டிலும் 6 மடங்கு பெரிதாக- சீன நாட்டின் ஷாங்காய் நகரைக் காட்டிலும் பெரிதாக உருவாக்குவேன் எனப் பிரதமர் மோடி கூறுகிறார். இதற்காக ரூ. 95 ஆயிரம் கோடியை மோடி அரசு செலவு செய்கிறது. ஆனால், ஆந்திர மாநிலம் அமராவதி நகருக்கு மட்டும் நிதி வழங்க மறுத்து பாகுபாடு காட்டுகிறது.மோடி அரசு சர்வாதிகாரப் போக்குடன் தன்னிச்சையாக செயல்படுகிறது. மாநிலங்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது. கூட்டாட்சியை வெறும் காகிதத்தில் இருப்பதாக மாற்றி விட்டது. மக்களுக்கு எதிரான முடிவுகளை எடுக்கிறது. அதில் முக்கியமாக மாநிலங்களின் நிதிச்சுழலை மத்திய அரசு மிகவும் பலவீனப்படுத்துகிறது. எந்தத் திட்டங்களுக்கும் போதுமான நிதி வழங்குவதில்லை. அமராவதி நகர் அமைப்பதற்கும் நிதி வழங்கவில்லை.
இவ்வாறு சர்வாதிகார மனப்போக்குடன் மாநிலங்களை அணுகும்- மத்தியில் ஆளும் மோடி அரசுக்கு மாநிலங்கள் ஏன் வரி வசூலித்துக் கொடுக்க வேண்டும்?

பிரதமர் மோடி 2014-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வரும்போது, நாட்டில் வேலையின்மையின்மை 3.4 சதவிகிதமாக இருந்தது. ஆனால், தற்போது அது 6.23 சதவிகிதமாக அதிகரித்துவிட்டது. மோடி மக்களிடம் வாக்குறுதி அளித்த கூட்டுமுயற்சி, ஒட்டுமொத்த வளர்ச்சி எங்கே போய்விட்டது?
நாங்கள் யாருக்கும் அஞ்சமாட்டோம், மாநிலத்தின் வளர்ச்சிக்காக எதையும் தியாகம் செய்யத் தயாராக இருக்கிறோம். ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து கிடைக்கும் வரை, போலாவரம் திட்டம் முடியும் வரை எங்களின் போராட்டம் ஓயாது.இவ்வாறு சந்திரபாபு நாயுடு பேசியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: