ஈரோடு,
பவானி அருகே ஆலையில் எரிப்பதற்காக பிளாஸ்டிக் கழிவுகளை ஏற்றி வந்த லாரியை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பவானி தாலுகா, ஆப்பக்கூடல் பேரூராட்சிக்குட்பட்ட விஜயா காலனியில் கரிகட்டை தயாரிக்கும் ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் பல்வேறு பகுதிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் போன்றவற்றை லாரிகளில்எடுத்து வந்து அதனை எரித்து கரிகட்டைகளாக்கி வேறு மாநிலங்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளனர். அதேநேரம், இந்த கழிவுகள் எரிக்கப்படுவதால் வெளிப்படும் புகை காரணமாக அப்பகுதியில் வசிப்போருக்கு சுவாசக் கோளாறுகள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் தொழிற்சாலையில் கழிவுகள் எரிக்கப்படுவதற்கு அப்பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், செவ்வாயன்று ஆலைக் கழிவுகளை ஏற்றி வந்த லாரியை அப்பகுதி மக்கள் சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து காவல்துறையினர் மற்றும் பெருந்துறை மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதன்பின்னர் சம்பந்தப்பட்ட தொழில் கூடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து, ஆலைகளில் கழிவுகளை பயன்படுத்துவதை உறுதி செய்தனர். இதைத்தொடர்ந்து அக்கழிவுகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். மேலும், இதுபோன்ற கழிவுகளை ஆலைகளில் எரிக்கக்கூடாது என ஆலை நிர்வாகத்தினருக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். முன்னதாக, இப்போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.பழனிசாமி, பவானி தாலுகா செயலாளர் எ.ஜெகநாதன், கமிட்டி உறுப்பினர் குழந்தைசாமி மற்றும் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.