ஈரோடு,
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் இந்த ஆண்டு கீழ்பவானி நன்செய் பாசனத்துக்கு உரிய காலத்தில் தண்ணீர் திறக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரை கொண்டு கொடிவேரி, காலிங்கராயன் மற்றும் கீழ்பவானி பாசனத்துக்குட்பட்ட மொத்தம் 2.40 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. இதில் கொடிவேரி பாசனத்துக்கு ஏப்ரல் 15 ஆம் தேதியில் இருந்தும், காலிங்கராயன் பாசனத்துக்கு ஜூன் 15 ஆம் தேதியில் இருந்தும் குறுவைசாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. கடந்த ஆண்டு போதிய மழை இல்லாத காரணத்தால், கொடிவேரி, காலிங்கராயன் மற்றும் கீழ்பவானி பாசனத்துதுக்கு அக்டோபர் 5 ஆம் தேதி முதல் பிப்ரவரி 1 ஆம் தேதி வரை 80 நாட்களுக்கு 5 சுற்றுகளாக தண்ணீர் திறக்கப்பட்டது.

கடந்த ஆண்டு பாசன காலத்தில் முறையாக தண்ணீர் திறக்காததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில், இந்தாண்டு வழக்கத்திற்கு மாறாக தொடர்ந்து பெய்த கோடை மழையால் விவசாயிகள் உற்சாகமடைந்துள்ளனர். இதையடுத்து மேட்டுபாங்கான நிலங்களில் விவசாயிகள் மானாவாரி பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். அதேசமயம், பாசனப்பகுதியில் உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர். இச்சூழலில் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மற்றும் வடகேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்திருப்பது விவசாயிகள் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பவானிசாகர் அணைக்கு தற்போது 2 ஆயிரத்து 625 கனஅடி வீதம் நீர்வரத்து உள்ளது. இதன் காரணமாக 105 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் 52.77 அடியாகவும், அணையில் 5.1 டிஎம்சி நீர் இருப்பும் உள்ளது. பவானி ஆற்றில் 150 கனஅடிவீதம் குடிநீருக்கு திறக்கப்பட்டுள்ளது. போதிய நீர்இருப்பு இல்லாததால் கடந்த 3 ஆண்டுகளாகவே பாசன காலத்தில் முறையாக தண்ணீர் திறக்கப்படாமல் இருந்த நிலையில், இந்த ஆண்டில் முன்கூட்டியே பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்திருப்பது விவசாயிகள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே, இந்த ஆண்டு கொடிவேரி மற்றும் காலிங்கராயன் பாசனத்துக்குட்பட்ட குறுவை நெல் சாகுபடிக்கு உரிய நேரத்தில் தண்ணீர் திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை விவசாயிகள் முன்வைத்துள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.