உலகின் முதல் ‘மிதக்கும்’ அணு மின் உற்பத்தி நிலையம், ரஷ்யாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.ரஷ்ய அரசு நிறுவனமான ரொசாட்டம் இந்த மின் உற்பத்தி நிலையத்தை வடிவமைத்து அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ரொசாட்டம் நிறுவனம்தான், கூடங்குளம் அணு மின் நிலையத்தை நிர்வகித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மின்சாரம் தேவைப்படும் எந்த கடற்கரை நகரிலும் – இந்த மிதவை அணு மின் நிலையத்தைக் கொண்டு ‘உடனடியாக’ மின் உற்பத்தியை தொடங்கலாம். குறைவான கார்பன் கழிவால் சுற்றுச் சூழல் மாசு குறையும்18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ரஷ்ய விஞ்ஞானியான மிக்கெய்ல் லொமோனோசவ் நினைவாக அகடமிக் லொமோனோசவ்என்று இந்த மிதவை அணு மின் உற்பத்தி நிலையத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது.

மனிதர்கள் கால் பதிக்கவே சிரமங்களைச் சந்திக்க வேண்டியுள்ள சவால் நிறைந்த இடங்களுக்கு மின்சாரம் சப்ளை செய்வதற்கும், போக்குவரத்து கட்டமைப்பு மற்றும் புவியியல் அமைப்பு போன்றவை குறித்து கேள்வி எழுப்ப இயலாத சூழல்களிலும் பயன்படுத்த இது ஏற்றது. விரிவாக்கப்பட்ட கடற்பரப்புகளுக்கும், மின்சாரப் பற்றாக்குறை உள்ள இடங்களுக்கும், வலுவான மின்கட்டமைப்பு இல்லாத இடங்களுக்கும் கூட இந்த அணு மின் உற்பத்தி நிலையம் உகந்தது. தற்போது பூமிக்கடியில் இருந்து பெறும் நிலக்கரி, கச்சா எண்ணெய், எரிவாயு போன்றவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் மின்சாரத்துக்கான செலவில் – 40 சதவீதம் வரை, இந்த எரிபொருளைக் கொண்டு வந்து சேர்ப்பதற்காக செலவிடப்படுகிறது.

அதோடு, பயணம் செல்ல சிரமமான இடங்களாக இருந்தால், அங்கு இந்த உற்பத்திச் செலவு அதிகரிக்கிறது. மாறாக ‘அளவில் சிறிது – எடையில் குறைவு – ஒரே விலை’ போன்ற அம்சங்கள் கொண்ட மிதக்கும் அணு மின் உற்பத்தி நிலையங்களை பல இடங்களில் அமைப்பதன் மூலம் பல சிரமங்களைத் தவிர்க்கலாம். இந்த சிறிய வகை அணு உலைகள் தொடர்ந்து 3 முதல் 5 ஆண்டுகள் வரை இடைவேளையின்றி செயல்படக் கூடியவை. அதனால், மின் உற்பத்திக் கான செலவு மிகவும் குறைவாகவே இருக்கும்.இந்த மிதக்கும் அணு மின் உற் பத்தி நிலையத்தில் கே.எல்.டி.-40சி வகையிலான 2 அணு உலைகள் இடம் பெற்றுள்ளன.

இவை ஒவ்வொன்றும், தலா 50 மெகாவாட் திறன் கொண்டவையாகும். இந்த புது உலைகள் முந்தைய உலைகளை விட அளவில் சிறிதாக இருந்தாலும், திறன் கணிசமாகவே அதிகரித்திருக்கும். இவற்றைச் சுமக்கும் கப்பல் 144 மீட்டர் நீளமும், 30 மீட்டர் அகலமும் கொண்டது. மேலும் 21,000 டன் தண்ணீரை இடம் பெயர்க்கும் திறன் கொண்டது.இந்த மிதக்கும் மின் உற்பத்தி நிலையம், 40 ஆண்டுகள் வரை செயல்படக் கூடியது. அதை மேலும் அதிகரித்து, 50 ஆண்டுகள் வரை கூட பயன்படுத்தலாம். அந்த ஆயுள் முடிவில், இதைத் தனியாக இழுத்துச் சென்று, உடைத்து, அதில் உள்ள அணுக் கழிவுகளை மறு சுழற்சி செய்யலாம். இதற்கான தனி கிடங்கு அமைந்துள்ள இடத்துக்கு இந்த மின்நிலையம் இழுத்துச் செல்லப்படும் என்பதால், அதன் அணுக்கதிர் எச்சங்கள் பின்தங்கிவிடும் என்ற அச்சம் தேவையில்லை என்று ரொசாட்டம் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

Leave A Reply

%d bloggers like this: