திருப்பூர்,
திருப்பூரில் பல நாட்களாக குப்பைகள் அள்ளப்படாமல் நாளுக்கு நாள் மலை போல் குவிந்து வருகின்றன. எனினும் மாநகராட்சி நிர்வாகம் இப்பிரச்சனையில் அவசர உணர்வுடன் செயல்படாமல் முடங்கிக் கிடக்கிறதா என்று பொது மக்கள் மனதில் கேள்வி எழுந்துள்ளது.

திருப்பூர் மாநகரில் நாளொன்றுக்கு 600 டன் குப்பை உருவாகிறது. இந்த குப்பைகளை அப்புறப்படுத்திட நிரந்தர ஏற்பாடு இல்லை. திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்த பல சமயங்களில் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டாலும் உருப்படியாக எந்த திட்டமும் நிறைவேறுவதில்லை. நகரின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள மிகப்பெரிய பாறைக்குழிகளில் குப்பைகளைக் கொட்டி நிரப்புவதே இப்போதைக்கு திடக்கழிவு மேலாண்மை நடவடிக்கையாக உள்ளது. எனினும் தற்போது குப்பை கொட்டப்பட்டு வரும் வெள்ளியங்காடு பாறைக்குழியும் கூடிய விரைவில் நிரம்பிவிடும் நிலை உள்ளது.

இந்நிலையில் நகரெங்கும் ஆங்காங்கே குப்பைகள் மலைபோல் தேங்கிக் கிடக்கின்றன. சாலைகள் மற்றும் வீதியோரங்களில் வைக்கப்பட்டிருக்கும் குப்பை தொட்டிகள் நிரம்பி அதன் பக்கவாட்டில் தொடர்ந்து குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இந்த குப்பைகள் மக்கள் நடந்து செல்லும் நடைபாதைகளை ஆக்கிரமித்து துர்நாற்றம் வீசிக் கொண்டிருக்கிறது. கடந்த 10 நாட்களுக்கு மேலாக இந்த பிரச்சனை மென்மேலும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எனினும் மாநகராட்சி நிர்வாகம் இப்பிரச்சனையில் அவசர உணர்வுடன் செயல்படுவதாகத் தெரியவில்லை.சில தினங்களுக்கு முன்பு திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கே.என்.விஜயகுமார் அதிகாரிகளை அழைத்து குப்பை பிரச்சனை குறித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். எனினும் அதன் பிறகும் நிலைமையில் எந்த மாற்றமும் இல்லை. பழைய நிலை மேலும் மோசமடைந்து கொண்டிருக்கிறது.

ஏற்கெனவே திருப்பூர் மாநகரம் டெங்கு, சிக்குன் குனியா உள்ளிட்ட தொற்று நோய்த் தாக்குதலில் சிக்கி இருக்கும் நகரமாகும். ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான குழந்தைகள் இது போன்ற தொற்று நோய்களால் உயிரிழக்கும் பரிதாப சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. அதேசமயம் தற்போது கேரளாவில் நிபா வைரஸ் என்ற புதிய வகை கிருமி தாக்குதல் பரவி உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கேரளாவுக்கு மிக அருகில் இருக்கக்கூடிய பகுதியாக கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்கள் உள்ளன.இந்நிலையில் தொற்று நோய் பரவுவதைத் தடுக்க தொலைநோக்கு திட்டத்துடன் அறிவியல்ரீதியாக செயல்பட வேண்டிய அவசியம் அரசு நிர்வாகத்துக்க உள்ளது. எனினும் மலை போல் தேக்கி வைக்கப்படும் குப்பைகளால் மாநகரில் பெரும் சுகாதார சீர்கேடும், நோய்த் தாக்குதலும் ஏற்படக்கூடிய அச்சுறுத்தலை அரசு நிர்வாகம் இன்னும் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.

திருப்பூரில் உற்பத்தியாகும் 100 டன் மக்கும் குப்பையில் இருந்து சாண எரிவாயு (பயோ கேஸ்) உற்பத்தி செய்ய மத்திய ஆராய்ச்சி நிறுவனத்துடன் திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஒப்பந்தம் நிறைவேற்றியுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது. இந்த திட்டம் நிறைவேறுவதற்கு குறைந்தபட்சம் ஆறு மாத காலத்தில் இருந்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகும். அப்படி நடைமுறைக்கு வந்தாலும் மாநகரின் மொத்த குப்பை உருவாக்கத்தில் சுமார் 20 சதவிகிதம் மட்டுமே இந்த சாண எரிவாயு தயாரிப்புக்குப் பயன்படும். எஞ்சிய 80 சதவிகித கழிவுகளை அகற்றுவது பெரும் பிரச்சனையாகவே நீடிக்கும்.

எனவே திடக்கழிவு மேலாண்மையைப் பொறுத்தவரை உடனடியாக செயலாக்க வேண்டிய பணிகளை மேற்கொள்வதுடன், தொலைநோக்கு அடிப்படையில் இதற்குத் தீர்வு காணவும் மாநகராட்சி நிர்வாகம் முயற்சி மேற்கொள்ள வேண்டும். இனியும் தாமதிக்காமல் மாநகரெங்கும் தேங்கி சுகாதார சீர்கேட்டைப் பரப்பி, மக்கள் வாழ்வை முடக்கக்கூடிய, தொற்று நோய் பரப்பும் கிருமிகள் பரவாமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் . . .

(ந.நி)

Leave A Reply

%d bloggers like this: